சைரா நரசிம்மா ரெட்டி



சிம்ம கர்ஜனை!

சுயாட்சித் தன்மையோடு இருந்த பல மாகாணங்கள்  இணைந்ததுதான் இந்தியா. இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் அந்தந்தப் பிரதேசங்களில் பலரும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினர். அந்த வரிசையில் ஆந்திராவில்  உய்யலவாடா நரசிம்ம ரெட்டி, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார்.பாளையக்காரர்கள் அவரவர்களது பிரதேசங்களில் ஆட்சி செய்கின்றனர். அவர்களிடம் ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பதுடன் அவர்களின் சொத்துக்களையும் அபகரிக்கின்றனர். விவசாயிகளை கடுமையான துயரத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.

ஆங்கிலேயர்களின் இந்த அடக்குமுறைகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் அவர்களை எதிர்க்கவேண்டும் என கோபம் கொள்கிறார் சிரஞ்சீவி. அவர்களுடன் எப்படி மோதுவது என்பதைக் குறித்து தன்னுடைய குருவான அமிதாப்பச்சனிடம் ஆலோசனை கேட்கிறார்.

அவர் ‘இந்த எழுச்சி உன்னிடம் இருந்தால் மட்டும் போதாது, உன்னைச் சுற்றி இருப்பவர்களிடமும் இருக்க வேண்டும்’  எனக் கூறுகிறார். அதன் பின்னர் சிரஞ்சீவி மக்கள் மத்தியில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த முயல்கிறார். அவரின் அந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா, மக்களிடையே புரட்சி வெடித்ததா என்பதுதான் மீதிக் கதை.

படம் முழுவதும் கர்ஜனை செய்யும் சிங்கமாக சீறுகிறார் சிரஞ்சீவி. ரெட்டியைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் அவ்வளவாக இல்லையாம். ரெஃபரன்ஸே இல்லாமல் அந்த மாவீரனுக்குரிய கம்பீரம், பகைவர்களைக் கண்டு அஞ்சாத நெஞ்சம்  என அந்த கேரக்டரை நம் கண் முன்னே தன் அபாரமான படைப்பாற்றலால் கொடுத்துள்ளார். சிரஞ்சீவியைப் பிடிக்காதவர்கள்கூட இந்தப் படத்துக்குப் பிறகு சிரஞ்சீவிக்கு ரசிகராக மாறிவிடுவார்கள்.

அப்படி அனைவருக்கும் பிடித்த மாதிரி நடித்துள்ளார். சிரஞ்சீவிக்கு அரவிந்த்சாமியின் குரல் மிகவும் பாந்தமாகப் பொருந்து கிறது.
இவருக்கு அடுத்து ரசிகர்கள் மனதில் நிற்கிறவர் சுதீப். நரசிம்ம ரெட்டியையே எதிர்க்கும் அக்குராஜுவாக தூள் கிளப்புகிறார். விஜய் சேதுபதிக்கு பெரிய ஸ்கோப் இல்லை.  சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தாலும் சில காட்சிகளுக்கு மட்டும் வருவது அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடையவைத்துள்ளது.

சிரஞ்சீவியின் குருவாக வரும் அமிதாப்பச்சன் அபாரம். தன் உருவத்தாலும் அனுபவ நடிப்பாலும் மனதைக் கவர்கிறார். சிரஞ்சீவியின் மனைவியாக நயன்தாராவும் காதலியாக தமன்னாவும் வருகிறார்கள். வழக்கம்போல் நாயகிகளுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.

நயன்தாராவா, தமன்னாவா என்ற அழகிப் போட்டியில் தமன்னாவுக்கே முதலிடம். அனுஷ்காவும் இருக்கிறார். ஆனால் சொல்லுமளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் இல்லை.பின்னணி இசையமைத்துள்ள ஜூலியஸ் பேக்கிம், பாடல்களுக்கு இசையமைத்துள்ள அமித் திரிவேதி இருவரின் முயற்சிகளும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.

ரத்னவேலு ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாகக் கொண்டு செல்கிறது. பிரம்மாண்டத்தை தன்னுடைய கேமரா வழியாகக் காண்பித்திருக்கிறார். கலை இயக்குநர் ராஜீவனின் செட் ஒர்க் வரலாற்றை மீண்டும் நிகழ்த்திக் காட்டுகிறது. கிராஃபிக்ஸ் கலைஞர் கமலக்கண்ணன் விஷுவலில் மாயவித்தை காண்பித்திருக்கிறார். படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பதைத் தவிர வேறேதும் குறைகள் இல்லை.

வயதானாலும் சிரஞ்சீவியின் கம்பீரம் இன்னும் குறையவில்லை என்பதுதான் படத்தின் ஹைலைட். சிரஞ்சீவியின் கர்ஜனைக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.