வந்தோம் போனோம்னு இருக்கக் கூடாது!பிந்து மாதவி ஓப்பன் டாக்

தமிழில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘கழுகு 2’ படத்தில் நடித்திருக்கிறார் பிந்து மாதவி. படம் ரிலீசாகி, கிளைமாக்சில் அவரது நடிப்பு பேசப்பட்டுள்ளது. இதுகுறித்து மிகவும் சந்தோஷப்பட்ட அவர், இனி இடைவெளி இல்லாமல் தனது படம் ரிலீசாகும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.

“ஏன் அடிக்கடி காணாமப் போயிடறீங்க?”

“தமிழில் திடீர்னு இடைவெளி ஏற்பட்டதுக்கு என்னைத் தவிர வேற யாரும் காரணம் கிடையாது. ரொம்பவும் கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னேறினால்தான் வெற்றியை ருசிக்க முடியும். ஒரேநாளில் உயரத்துக்கு போக ஆசையில்லை. படிப்படியா முன்னுக்கு வரணும். அதனால்தான் நான் பட எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் தராம, கதையின் தரத்துக்கும், என் கேரக்டரோட வலிமைக்கும் முக்கியத்துவம் தர்றேன்.

2012ல் ‘கழுகு’ முதல் பாகம் ரிலீசானது. இன்னமும் என்னை ‘கழுகு’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்களில் பார்த்த கேரக்டரைத்தான் ஆடியன்ஸ் ஞாபகத்தில் வெச்சு பேசறாங்க. ஸோ, ‘கழுகு 2’ பற்றி டைரக்டர் சத்யசிவா சொன்னவுடனே, மறுபடியும் கிருஷ்ணாவுக்கு ஜோடியா நடிக்க முடிவு பண்ணேன்.”

“தமிழைத் தவிர்த்து மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கறீங்களோ?”

“அப்படியெல்லாம் இல்லை. ஏன் திடீர்னு நான் தமிழில் நிறைய படங்களில் நடிக்கலைன்னு கேட்கலாம். அதுக்கு என் பெர்சனல் பிராப்ளம்தான் காரணம். ஆனா, அதுபற்றி பேச விரும்பலை. இப்ப எல்லா பிரச்னைகளில் இருந்தும் வெளியே வந்துட்டேன். இனி தொடர்ந்து நிறைய தமிழ்ப் படங்களில் நடிப்பேன்.

அதுக்காக சில கதைகள் கேட்டிருக்கேன். என்னை எல்லாரும் சில்க் ஸ்மிதா கூட ஒப்பிட்டு பேசறாங்க. ஒருவிதத்தில் அது எனக்கு பப்ளிசிட்டிதான். என் கண்கள், சில்க் ஸ்மிதா கண்கள் மாதிரி இருக்குன்னும் சொல்றாங்க. எனக்கும் என் கண்களை ரொம்ப பிடிக்கும். ‘கழுகு 2’ படத்தில் சில காட்சிகளில் நான் வசனம் பேசியிருக்க மாட்டேன். ஆனா, என் பவர்ஃபுல் கண்கள் பேசி நடிச்சிருக்கும்.”

“இப்போ எந்தமாதிரி படங்கள் நடிக்க ஆசைப்படுறீங்க?”

“தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் தர்ற படங்கள் வந்திருக்கு. நயன்தாரா, அமலா பால், திரிஷா, டாப்ஸி மாதிரி சில ஹீரோயின்களுக்கு பவர்ஃபுல் கேரக்டர்கள் கிடைச்சிருக்கு. எனக்கும் ஹீரோயின் ஓரியன்டட் ஸ்டோரியில் நடிக்க ஆசையிருக்கு. ஏதோ வந்தோம், போனோம்னு இருக்கக்கூடாது.

சில ஹீரோயின்கள் தாங்கள் நடிச்ச படங்கள் ரிலீசாக சிக்கல் ஏற்பட்டா, தங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுத்ததை கேள்விப்பட்டிருக்கோம். நானும் சில படங்களுக்கு சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கேன். என் ஃபியூச்சர் பிளான் பற்றி எதுவும் சொல்ல முடியாது. இப்ப என் கவனம் முழுக்க சினிமாவில் மட்டுமே இருக்கு. மறுபடியும் பழைய வேகத்தில் நடிப்பில் பிசியாகணும்”

- தேவராஜ்