கழுகு 2



செந்நாய் வேட்டை!

எஸ்டேட் ஒன்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது அவ்வப்போது செந்நாய்கள் கூட்டம் தாக்குதல் நடத்துகிறது. இதனால் உயிருக்கு பயந்து அந்த எஸ்டேட்டில் பணிபுரிய தொழிலாளர்கள் வர மறுக்கிறார்கள்.

வேட்டைக்காரர்களை பாதுகாப்புக்காக வைத்துக்கொண்டு வேலை செய்ய முடிவு செய்யும் அந்த எஸ்டேட் சூப்பர்வைசர் எம்.எஸ்.பாஸ்கர், திருடர்களான கிருஷ்ணா மற்றும் காளி வெங்கட்டை தவறுதலாக வேட்டைக்காரர்கள் என்று நினைத்து, பாதுகாப்புப் பணிக்கு அவர்களை நியமிக்கிறார். போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர்களும் எம்.எஸ்.பாஸ்கருடன் செல்கிறார்கள்.

எம்.எஸ்.பாஸ்கரின் மகளான பிந்து மாதவிக்கு கிருஷ்ணா மீது காதல் வருகிறது. கிருஷ்ணாவும் பிந்து மாதவியைக் காதலிக்கிறார். பெரிய திருட்டாகச் செய்து  வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று நினைத்து, அந்த ஊரில் இருக்கும் அரசியல்வாதி ஒருவரது வீட்டில் திருட திட்டம் போடுகிறார். அதனால் சில  பிரச்சினைகள் வருகின்றன.

கிருஷ்ணாவை நம்பி காட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்  என்னவாகிறார்கள்? கிருஷ்ணாவின் நிலை என்ன? என்பதைச் சொல்வதுதான் ‘கழுகு-2’திருடன்,  போலி வேட்டைக்காரன் ஆகிய வேடங்களை ஏற்றிருக்கும் நாயகன் கிருஷ்ணா பொருத்தமாக நடித்திருக்கிறார். செந்நாயை நேரில் பார்த்ததும் பயத்தில் அலறுவது, காதல் உணர்வை மறைத்து நடப்பது போன்ற இடங்களில் நடிப்பில் முன்னேறியிருக்கிறார்.

நாயகனுக்கு இணையாகப் படம் முழுதும் வருகிற கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடித்திருக்கிறார். சிரிக்க வைக்கும் பொறுப்பை சரியாகச் செய்திருக்கிறார். நாய்கள்ல ரெண்டு வகை. ஒண்ணு டெரர், இன்னொண்ணு சாஃப்ட் என்று தொடங்கி அவர் எடுக்கும் பாடம் சிரிக்க வைக்கிறது.

படம் முழுவதும் எளிமையான அழகோடு வலம் வருகிறார் பிந்துமாதவி. கிருஷ்ணாவுக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்கிறது. அவருடைய கதாபாத்திரமும் கதையோடு ஒன்றிணைந்திருப்பதால், கவனிக்க வைக்கிறார்.

ஹரீஷ்பேரடி, எம்.எஸ்.பாஸ்கர், ரமா, தாடி வெங்கட், நெல்லை சிவா உள்ளிட்ட பலர் படத்தில் இருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கரின் வேடம் எதிர் பாராததாக இருப்பது படத்துக்கு பலம். ஒரு பாடலுக்கு ஆடும் யாஷிகா ஆனந்த் கவனிக்க வைக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஃபீல் குட் ரகம். பின்னணி இசையும் பொருத்தம். ராஜாபட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவில் காடுகள் அழகாகக் காட்டப்படுகின்றன.

காட்டுக்குள் ஹெலிகாப்டர் விழுந்துவிட்டது எனும் தேடல், குளிர் நிறைந்த வனத்துக்குள் காஃபி வைக்க கிலோமீட்டர் கணக்கில் போவதெல்லாம் அபத்தம். காதல், செந்நாய் வேட்டை என்று முதல் பாதி சற்று சாதாரணமாகப் பயணித்தாலும், இரண்டாம் பாதியில் அழுத்தமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் சத்யசிவா. மொத்தத்தில் உயரப் பறக்க வேண்டிய கழுகு தாழப் பறக்காமல் பார்த்துக் கொள்கிறது.