ஜாக்பாட்ஜோக்பாட்!

மணிமேகலையில் இடம்பெறும் அமுதசுரபி போன்ற அள்ள அள்ளக்  குறையாத புதையல் 2019 ஆம் ஆண்டு இட்லி விற்கும் பெண் ஒருவரிடம் கிடைக்கிறது. அவரும் அதை வைத்து பணம் சம்பாதிக்கிறார்.
அவரது குறுக்குப் புத்தியால் போலீசில் சிக்குகிறார். புதையலை ஒரு இடத்தில் புதைத்துவிட்டு சிறை சென்றுவிடுகிறார். இதற்கிடையே, ஜோதிகாவும், அவரது அத்தையான ரேவதியும் சின்னச் சின்ன திருட்டுகளைச் செய்து வருகிறார்கள். இவர்கள் திருடும் கார், பைக் போன்றவற்றை மொட்டை ராஜேந்திரன் விற்றுக்கொடுக்கிறார்.

இப்படி திருடும் இவர்கள் போலீசில் சிக்கி சிறை செல்ல, சிறையில் இருக்கும் இட்லி விற்கும் பெண்மணி, தனது புதையல் ரகசியத்தை ஜோதிகா மற்றும் ரேவதியிடம் சொல்வதோடு, அது எங்கிருக்கிறது என்பதையும் கூறுகிறார். அந்தப் பெண்மணிக்குத் தெரியாமல் அந்தப் புதையலைத் திருட நினைக்கும் ஜோதிகாவும், ரேவதியும் அதை எடுத்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

பெரிய கதாநாயகர்களுக்குச் சவால் விடும் வகையில் தொடங்கும் அறிமுகக் காட்சியிலிருந்து படம் நெடுக நிறைந்திருக்கிறார் ஜோதிகா. ஆட்டம் பாட்டம், சண்டை ஆகிய எதையும் விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றையும் கர்மமே கண்ணாகச் செய்திருக்கிறார்.  கிட்டத்தட்ட ஜோதிகாவுக்கு இணையான பாத்திரத்தில் வருகிறார் ரேவதி.

சீனியரா, ஜூனியரா யார் சிறந்தவர் என்று கேட்குமளவுக்கு போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.  ஆனந்தராஜ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் மிரட்டுகிறார். நான் கன்னிப் பெண்ணாகவே இருந்துட்டுப் போறேன் என்று அவர் சொல்லும்போது திரையரங்கு சிரிப்பில் அலறுகிறது. ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், மன்சூர் அலிகான், மனோபாலா, தங்கதுரை, கிங்ஸ்லி  ஆகியோர் சிரிக்க வைக்கும் வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
 
யோகிபாபுவின் கேரக்டர் மிகவும் புதுசு. பாடகர் அந்தோணிதாசன், பழம்பெரும் நடிகை சச்சு ஆகியோரின் வேடங்கள் கதையை நகர்த்த உதவுகின்றன.ஆர்.எஸ்.ஆனந்தகுமார் ஒளிப்பதிவில் ஜோதிகா மிக அழகாக இருக்கிறார். விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன.  காமெடி படங்களுக்கு கதை, லாஜிக் தேவையில்லை என்பதால் படம் முழுக்க நகைச்சுவை  இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இயக்கியுள்ளார் இயக்குநர் கல்யாண்.