சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி!



காமெடி நடிகர் சிட்டிசன் மணி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பெருநாளி’. நாயகியாக மதுனிக்கா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் கிரேன் மனோகர், சிசர் மனோகர் ஆகியோர் நடிக்கிறார்கள். ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் அந்தோணி தயாரிக்கிறார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் தன்னுடைய சினிமா அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘இன்றைய சமூக சூழ்நிலைதான் இந்தப் படத்தை எடுக்க தூண்டியது. 40 ஆண்டுகளுக்கு முன் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள். முன்பு படித்த இளைஞர்கள் குறைவு. இப்போது தமிழகத்தில் என்ஜினியர், டாக்டர் என்று படிப்பாளிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். கல்வியில் இந்தியளவில் நாம் பெரிய சாதனை படைத்துள்ளோம். ஆனால் வாழ்க்கையில், ஒழுக்க நெறியில் சாதிக்கவில்லை.

பெண் பாதுகாப்பு என்பது முற்றிலும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் சமூகத்துக்கான கருத்து சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. சினிமா மூலம் பணம் வருமானம் பார்க்க வேண்டும் என்பது இரண்டாவது பட்சம்.இன்றைய பெற்றோர்களும் துன்பம் அனுபவிக்கிறார்கள். பிள்ளைகளும் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார்கள். படிப்பு பயன் தராத நிலையில் சினிமா மூலம் சமூக மாற்றத்துக்கான ஆலோசனை சொல்லலாம் என்றுதான் ஓய்வுக்குப் பிறகு இந்த துறைக்கு வந்தேன்.

இது பேமிலி செண்டிமெண்ட் கதை. அத்துடன் காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை என அனைத்தையும் கமர்ஷியலாக சொல்லியுள்ளோம்.  இந்தப்படத்தில், மாமா - மருமகள் செண்டிமெண்டை இதுவரை சொல்லப்படாத வகையில் சொல்லியிருக்கிறோம்’’ என்றவர், லேட்டாக சினிமாவுக்கு வந்ததைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

‘‘எனக்கு சின்ன வயதிலிருந்து சினிமா ஆர்வம் அதிகம்.  சினிமாவுக்கு முயற்சிக்கும்போது அரசு வேலை கிடைத்ததால் வேலையில் கவனம் செலுத்தினேன். இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டதாலும் குடும்பத் தலைவனாக என் கடமைகளை முடித்துவிட்டதாலும் படம் தயாரிக்க முன்வந்தேன்.

இயக்குநர் சிட்டிசன் மணி எப்படி என்னிடம் கதை சொன்னாரோ அதன்படி எடுத்துக் கொடுத்துள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியர் எப்படி முக்கியமோ அதுபோல் சினிமா மக்களுக்கு ஆசான் மாதிரி. தொடர்ந்து நிறைய படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.

- எஸ்