விவகாரமான டைட்டிலில் நடிக்கிறார் சிட்டி ஆஃப் பியூட்டி நடிகை



சில படங்கள் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடையே சென்றடைவதுண்டு. அந்த வரிசையில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒங்கள போடணும் சார்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் இண்டஸ்ட்ரியே அலறியது. போஸ்டரை வெளியிட்ட நடிகரும் கொஞ்சம் ஜர்க் ஆகிப் போனார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஒ.பி.எஸ்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் ஜொனிடா டோடா.‘‘தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது’’ என்று பேச ஆரம்பித்தார் ஜொனிடா டோடா.

“பஞ்சாப் டூ சென்னை டிராவல் எப்படி?”

“சிட்டி ஆஃப் பியூட்டி என்று வர்ணிக்கப்படுகிற சண்டிகர் தான் நான் பிறந்த ஊர். பக்கா பஞ்சாபி குடும்பம். பிளஸ் ஒன் ப்ளஸ் டூ படிக்கும்போதே விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். பிளஸ்டூக்கு அப்புறம் நடிப்புக்கு டூ விட்டுவிட்டு படிப்புதான் முக்கியம் என்பதால் மும்பையில் எம்.பி.ஏ. படித்தேன்.

கல்லூரிக்குப் பிறகுதான் மீண்டும் சினிமா பக்கம் கவனத்தைத் திருப்பினேன். பஞ்சாபி மொழியில் ‘சக் ஜாவனா’என்ற படத்தின் மூலம் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. அந்தப் படத்தில் நடித்த குர்தாஸ்மான் உங்க ஊர் ரஜினி மாதிரி பெரிய ஸ்டார்.

தொடர்ந்து இந்தியில் தேசிய விருது பெற்ற  மதூர் பண்டார்கர் இயக்கத்தில் அறிமுகம் கிடைத்தது. குறுகிய காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். வட இந்தியாவில் நடிக்கும் நடிகைகளுக்கு சவுத் சினிமா எப்போதும் ஒருவித ஏக்கத்தை ஏற்படுத்தும். அப்படித்தான் நானும் தமிழுக்கு வந்தேன்.”

“நீங்க நடிக்கிற படத்தின் டைட்டிலோட அர்த்தம் தெரியுமா?”

“இந்தப் படத்துல நான் கமிட்டானதுமே நிறையபேர் இந்த டைட்டிலோட அர்த்தம் தெரியுமா என்று கேட்டார்கள்.  எனக்குத் தெரிந்த சில சென்னை நண்பர்களிடம் டைட்டிலுக்கான அர்த்தத்தைக் கேட்டேன். அவர்கள் டபுள் மீனிங்கில் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் கவர்ச்சிகரமான டைட்டில் என்றுதான் சொன்னார்கள். ‘ஒ.பி.எஸ்’ படத்தைப் பொறுத்தவரை எனக்கு கதை பிடித்திருந்தது.

எனக்கான ஸ்கோப் இருந்தது. இதுவரை நான் நடித்துள்ள படங்கள் அனைத்தும் ஃபேமிலி படங்கள். அந்த வகையில் இந்தப் படமும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் சொல்ல விரும்புவது, டைட்டிலில் மட்டும் தான் டபுள் மீனிங் இருக்கும். மற்றபடி இந்தப் படத்தில் என்டர்டெயின்மென்ட் அம்சங்கள் நிறைய இருக்கும்.”

“உங்களுக்கு என்ன கேரக்டர்?”

 “நேகா என்ற கேரக்டர்ல வர்றேன்.  படத்துல எனக்கு சென்டர் கேரக்டர். என்னுடைய கேரக்டருக்கு நிறைய ஷேட் இருக்கும். சில இடங்களில் குடும்ப குத்துவிளக்காகவும் சில இடங்களில் அதிரடி ஆக்‌ஷனிலும் கலக்கியிருப்பேன். சில இடங்களில் கிளாமரிலும் எதிர்பார்க்கலாம். நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ஹீரோவுக்கு இணையாக என் தோள் மீதும் படத்தின் சுமை இருக்கும்.”

“ஹீரோ ‘ஜித்தன்’ ரமேஷ்?”

“பெரிய தயாரிப்பாளரின் மகன் என்ற பந்தா இல்லாதவர். பழகுவதற்கு இனிமையானவர். வேலையில் அர்ப்பணிப்பு உள்ளவர். நன்றாக நடனமாடக் கூடியவர். கடின உழைப்பாளி. அவருக்கு இந்தி தெரியும் என்பதால் இந்தி வழியாக தமிழைக் கற்றுக் கொள்ள உதவியாக இருந்தார். தவிர, ஆனந்தபாபு மகன் கஜேஷ் உட்பட நிறையப் பேர் இருக்கிறார்கள்.”

“படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யங்கள் எதாவது?”

“சுவாரஸ்யம் என்பதைவிட ரிஸ்க் என்று சொல்லலாம். நாங்கள் படப்பிடிப்பு நடத்திய சமயத்தில் கேரளாவில் பெரும் வெள்ளம் வந்தது. நாங்கள் இருக்கும் பகுதி முழுவதும் மழையால் சூழப்பட்டதால் அங்கிருந்து எங்களால் வெளியே வர முடியவில்லை. தொலைத் தொடர்புகளும் பழுதாகிவிட்டது. என் நிலைமை என்ன ஆனது என்று தெரியாமல் என்னுடைய குடும்பம் பயத்தில் இருந்ததை மறக்க முடியாது.

கொச்சியில் நடந்த படப்பிடிப்பு அனுபவமும் மறக்க முடியாதது. ஒரு நாள் எனக்கு ஃபுட் பாய்சன் ஆகிவிட்டது. காலையில் என்னை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணினார்கள். ஆனால் நான் டிஸ்ஜார்ஜ் வாங்கிக் கொண்டு மதியம் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். காரணம், என்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பேன்.

படத்தில் எனக்கான சவால்கள் அதிகம். சண்டைக் காட்சிகளில் நிறைய முறை காயம் ஏற்பட்டது. ஒரு முறை ரோப் அறுந்து கால் பகுதியில் பலமாக அடிபட்டது. ஆனால் அந்த வலி அனைத்தும் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஒரு நடிகையாக 100 சதவீதம் ரிசல்ட் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கிறது. அதுமட்டுமில்ல, இயக்குநர்கள், ஜித், ஆர்.எல்.ரவி, ஒளிப்பதிவாளர் செல்வா ஆகியோர் கொடுத்த ஊக்கத்தால் உற்சாகத்தோடு வேலை பார்க்க முடிந்தது.”

“அடுத்து?”

“இப்போதே நிறைய பட வாய்ப்பு வருகிறது. தமிழில் நிறைய படங்கள் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.”

“பாலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்குமிடையே என்ன வித்தியாசம்?”

“சினிமாவுக்கு எக்ஸ்பிரஷன் என்ற ஒரே மொழிதான் உள்ளது. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை தொழில் நேர்த்தி, தொழில் பக்தி அதிகமாக இருக்கிறது. நேரத்தை மிகச் சரியாகக் கையாள்கிறார்கள். இங்கு எல்லாரும் சின்சியராக வேலை பார்க்கிறார்கள். அது தவிர்த்து கலாச்சாரம்தான் எனக்குத் தெரிஞ்ச வித்தியாசம்.”

“தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர்?”

“பஞ்சாப் சினிமாவைப் பொறுத்தவரை அங்குள்ள ஏராளமான லெஜண்டுகளுடன் வேலை பார்த்துள்ளேன். அதே போல இங்குள்ள ரஜினி, கமல் போன்ற லெஜண்டுகளுடன் வேலை செய்ய வேண்டும் என்று விருப்பம். அப்புறம், விக்ரம், விஜய், அஜித்தையும் பிடிக்கும். இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், பாலா போன்ற இயக்குநர்கள் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.”

“கிளாமரா நடிப்பீங்களா?”

“இந்தக் கேள்வியை ஏன் எல்லாரும் கேட்குறீங்கன்னு தெரியலை. கதையைப் பொறுத்து கிளாமரா நடிப்பேன். என்னைப் பொறுத்தவரை கதைக்கு தேவைப்பட்டால் நடிக்கலாம். படத்துல கிளாமரா நடித்திருந்தாலும் படம் முடிந்து திரும்பும் ரசிகர்கள் கிளாமரை மனதில் வைப்பது இல்லை. கதையைத்தான் பேசுகிறார்கள். கதையே இல்லாமல் கிளாமர் மட்டும் இருந்தால் அந்த மாதிரி வேடங்களைத் தவிர்த்துவிடுவேன்.

சினிமா என்ற காட்சி ஊடகம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நல்ல கதையில் கிளாமர் இருக்கும் போது ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். ‘90 எம்.எல்.’ மாதிரியான கதைகளில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். சினிமாவை கலையாகப் பார்த்தால் எந்த கதையிலும் நடிக்கமுடியும்.”

“விரும்பும் வேடம்?”

“சின்ன படமோ, பெரியபடமோ எனக்கு பவர்ஃபுல் கேரக்டர் பண்ணணும். ஆக்‌ஷன், ரொமான்ஸ் என்று மாறுபட்ட கதைகளில் நடிக்கணும். ‘ககானி’ யில் வித்யாபாலன் ஏற்று நடித்த வேடத்தைப் போல், ‘பாகுபலி’யில் அனுஷ்கா நடித்ததைப் போல் வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.”

“பஞ்சாபி ரசிகர்கள் பற்றி...?”

“பஞ்சாபி படங்களில் கல்ச்சருக்கு முக்கியத்துவம் இருக்கும். கிளாமரை அடக்கி வாசிப்பார்கள். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் ரசிகர்கள் சினிமாவை ஆராதிக்கிறார்கள். குறிப்பாக தென்னிந்தியாவில் சினிமாவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.”

“வாழ்க்கையில் உங்களை அதிகமாக இம்ப்ரஸ் பண்ணியவர்கள்?”

“கிரேட் லீடர்ஸ், ஃபேமிலி மெம்பர்ஸ் அனைவரும் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அந்தவகையில் என்னுடைய அப்பா, அம்மா எல்லாரும் என்னுடைய இன்ஸ்பிரேஷன். சினிமாவில் இயக்குநர் குருதத், ஜூலியா ராபர்ட்ஸ் போன்றவர்கள் இன்ஸ்பிரேஷன்.”

“பொழுதுபோக்கு?”

“உடற்பயிற்சி என்னுடைய வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஃபிட்னஸ்... நடிகை என்பதற்காக மட்டுமில்ல. ஃபிட்னஸ் எல்லாருக்கும் வேண்டும். தவிர நடனம், மியூசிக், டிரைவிங்கில் ஆர்வம் அதிகம்.”

- சுரேஷ்ராஜா