இதெல்லாம் காதலா? என்ன கொடுமை சார்?ஒரு அழகான கிராமம். அங்கு ஒரு பள்ளி. அந்தப் பள்ளியில் ஒரு அழகான டீச்சர் சாந்தினி.நெக்ஸ்ட்?அந்த அழகான டீச்சரை நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றும் அழுக்கு இளைஞன் பிருத்வி பாண்டியராஜன் துரத்தித் துரத்தி காதலிக்கிறார்.ஆடிக் காற்றில் அம்மியே அசையும் போது இளகிய மனதுடைய டீச்சர் எம்புட்டு?

அழுக்கு  இளைஞனின் காதல் வலையில் டீச்சர் வீழ்கிறார். இளம் ஜோடி காதல் வானில் சிறகடித்து பறக்க ஆரம்பிக்கிறது. அந்தச் சமயத்தில் பள்ளிக்கூடத்துக்கு புதிதாக வந்து சேருகிறார் ஆங்கில ஆசிரியர் ஒருவர். டீச்சருக்கு ஆங்கில மோகம் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் ஆசிரியர்கள் வயல்வரப்பில் வரம்பு மீறுகிறார்கள்.

இக்காட்சியை பார்த்துவிடும் நண்பர்களுக்கு சபலம் தட்டவே, ஆசிரியரை மிரட்டி நண்பனின் காதலி என்று தெரிந்தும் சாந்தினி மீது பாய்கிறார்கள். நடந்த சம்பவங்களைக் கேள்விப்படும் பிருத்வி, தப்பு செய்தவர்களுக்கு என்ன தண்டனை தருகிறார் என்பதுதான் மீதிக் கதை.கதை 80களில் நடப்பதால் படத்தில் நடிக்கும் அத்தனை கலைஞர்களும் அந்தக்கால ஆடையில் வருகிறார்கள்.

நாயகன் பிருத்வி பாண்டியராஜன் தன் அப்பா பாண்டியராஜனை எந்த இடத்திலும் நினைவு படுத்தாமல் தனித்து நிற்கிறார். காதலியிடம் கொஞ்சுவது, நண்பர்களிடம் நட்பு பாராட்டுவது, எதிரிகளை விரட்டுவது என்று நடிப்பை நன்றாகவே வெளிப்படுத்துகிறார்.

நாயகி சாந்தினி குடை, மூக்குக் கண்ணாடி என்று கெட்டப்பில் வித்தியாசப்படுவது போல் நடிப்பிலும் வித்தியாசப்படுகிறார். காஸ்ட்யூமருக்கும் சாந்தினிக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

ஒரே ஒரு புடவையைக் கொடுத்து படம் முழுதும் டிராவல் பண்ண வைத்திருக்கிறார்.
நண்பர்களாக வரும் கிஷோர், முனீஸ்ராஜா உட்பட அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.  கஞ்சா கருப்பு, சிங்கம்புலி இருவரும் அரும்பாடுபட்டு சிரிக்க வைக்கிறார்கள்.

பி.சி.சிவன் இசையில் யுகபாரதியின் பாடல்கள் கதையோடு பயணித்து பரவசப்படுத்துகின்றன. ஒளிப்பதிவாளர் ஹாரிஸ் கிருஷ்ணன்அன்றைய கிராமங்களின் பசுமையை செம்மையாகக் காண்பித்திருக்கிறார்.இயக்குநர் மாணிக்க சத்யா பீரியட் பிலிம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் நேர்த்தியாக வெற்றி பெற்றிருந்தாலும், இரண்டாவது பாதியில் திரைக்கதைக்குத் தேவையான அழுத்தமில்லாமல் இயக்கியிருப்பது சற்றே பின்னடைவு.