களவாணி-2



உள்ளாட்சித் தேர்தல் உற்சவம்!

நண்பனோடு சேர்ந்து வெட்டியாகச் சுற்றித் திரிவதோடு, அவ்வப்போது சின்ன திருட்டுகளைச் செய்துகொண்டிருக்கிறார் விமல். இச்சமயத்தில் அந்தக் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. ஆள் பலம், பண பலம் இல்லாத விமல் தலைவர் பதவிக்காக இரண்டு பெரிய தலைகளோடு மோதுகிறார். தேர்தலில் அவரால் வெற்றி பெற முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்த ‘களவாணி-2’.

களவாணி கேரக்டருக்கு இவரை விட்டால் வேறு யார் என்று கேட்குமளவுக்கு கச்சிதமாக இருக்கிறார் விமல். வெள்ளை வேட்டி சட்டையுடன் வரும் விமல் கஞ்சாகருப்புவின் மனைவியிடம் பொய் சொல்லி பணத்தைப் பிடுங்குவது, நடுப்பகலில் ஓவியாவின் ஆட்டை ஆட்டையப் போடுவது என்று கொடுத்த வேடத்தை ரசித்து நடித்திருக்கிறார். போதாக்குறைக்கு கஞ்சாகருப்பு மற்றும் விக்னேஷ்காந்த்துடன் சேர்ந்து லூட்டி அடிக்கிறார்.

ஓவியாவை சும்மா சொல்லக்கூடாது. புத்தம் புது பொலிவுடன் வந்திருக்கிறார். படத்தில் சில காட்சிகளே என்றாலும் துன்பத்திலும் இன்பம், இன்பத்திலும் துன்பம் என்று தனக்கு கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்.விமலின் அப்பா அம்மாவாக நடித்திருக்கும் இளவரசு மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் இன்னொரு நாயகன் நாயகி போல வருகிறார்கள். அவர்களும் கேரக்டரின் முக்கியத்துவத்தை அறிந்து அசத்தி
யிருக்கிறார்கள்.

தோசை கேரக்டரில் வரும் மயில்சாமி அதிகம் பேசாமலேயே சிரிக்க வைக்கிறார். தோசைக்கு பெயர்க் காரணம் சொல்லும் காட்சியில் சிரிப்பு கியாரண்டி.ஊர்த்தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராவண்ணா கேரக்டரில் நடித்திருக்கும் துரை.சுதாகர், ஓவியாவின் அப்பாவாக வரும் வில்லன் ராஜ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள். துரை. சுதாகர் மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமா இயக்குநர்கள் கொஞ்ச காலத்துக்கு வில்லன் வேடத்துக்கு துரை.சுதாகர் பெயரை உச்சரிப்பது நிச்சயம்.

மணிஅமுதவன் இசையில் பாடல்கள் இனிமை. ஒளிப்பதிவாளர் மாசானியின் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒளிப்பதிவு படம் பார்க்கும் ரசிகர்களை தஞ்சைக்கே அழைத்துச் செல்கிறது. தஞ்சை வட்டார வழக்கு படத்துக்கு பெரும் பலம். நடப்பு அரசியல் நிகழ்வுகளை உள்ளூர் அரசியலை வைத்து மிக எளிமையாகக் கடந்து போக வைத்திருக்கிறார் இயக்குநர் ஏ.சற்குணம்.