ராட்சசி



கலங்கரை விளக்கு!

ஒரு குக்கிராமத்தில் அமைந்துள்ள அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் ஜோதிகா. சீரழிந்து கிடக்கும் அப்பள்ளியை சீர்திருத்த சில அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார். அதனால் பல சிக்கல்கள் வருகின்றன. சோதனைகளுக்கு மத்தியில்  சாபக்கேடான பள்ளியை சாதனைப் பள்ளியாக எப்படி மாற்றுகிறார் என்பதே ‘ராட்சசி’.

டைட்டிலிலிருந்து எண்ட் கார்ட் வரை எங்கும் ஜோதிமயம். எவ்வளவு பொறுப்பான வேடத்தை ஏற்றுள்ளோம் என்பதை முழுமையாக உணர்ந்து  கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார் ஜோதிகா. அறிமுகக் காட்சி, பெட்டிக்கடையில் காட்டும் அதிரடி, ஆசிரியர்களிடம் காட்டும் கண்டிப்பு போன்ற காட்சிகள் அவரை அழகான ராட்சசியாகவும் சிறுவர்களிடம் காட்டும் அன்பு அவரை தேவதையாக சித்தரிப்பதும் கவிதை.

அப்பா மறைவுக்குப் பின் பூர்ணிமாபாக்யராஜும் ஜோதிகாவும் சந்திக்கும் காட்சி கண்கலங்க வைக்கிறது. ஜோதிகாவின் தந்தையாக வரும் நாகிநீடு, இப்படி ஒரு அப்பா எல்லோருக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறார். தனியார் பள்ளி தாளாளராக வரும் ஹரிஷ்பேரிடி,  என்னவோ செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்தால் அதற்குள் படம் முடிந்துவிடுகிறது.

பள்ளி ஆசிரியர்களாக நடித்திருக்கும் கவிதாபாரதி, முத்துராமன், சத்யன், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட அனைவரும் சிறப்பு. ஆட்டோ ஓட்டுநராக நடித்திருக்கும் மூர்த்தி தான் பேசும் வசனங்களால் கவனிக்க வைக்கிறார்.இசையும் ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பலம். ஷான்ரோல்டனின் இசையில் பாடல்கள் நன்று. கோகுல் பினாயின் ஒளிப்பதிவு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகக் காட்டியிருக்கிறது.

சம்பளம் போதவில்லை, வசதி போதவில்லை என்று போராடும் அரசு பள்ளி ஆசிரியர்கள், என்றாவது மாணவர்களுக்கான வசதிக்காகவும், அவர்களது கல்வி முறைக்காவும் போரடி இருக்கிறார்களா என்ற கேள்வி மூலம் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தலையில் குட்டு வைத்திருக்கும் வசனகர்த்தா பாரதி தம்பி, ‘சம்பளம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்துவது கூட ஊழல் தான்’ உள்ளிட்ட அதிரடி வசனங்கள் மூலம் கை தட்டல் பெறுகிறார்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றாலே இப்படித்தான் என்கிற பொதுப்புத்தியை அப்படியே ஏற்றுக்கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது பலவீனம். படம் தொடங்கியதிலிருந்து அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்பதை யூகிக்க முடிவதால் திரைக்கதை சுவாரஸ்யமில்லாமல் நகர்கிறது.அரசுப் பள்ளிகளின் தரம் உயர வேண்டும் என்று முதல்படத்தில் நல்ல விஷயத்தைப் பேசியிருக்கிறார் இயக்குநர் சை.கெளதம்ராஜ்.