ஆந்திராவில் ஒரு கோவா!அமைக்க ஆஷிமா திட்டம்



அழகிப் போட்டிகளில் கிரீடம் வெல்பவர்களை வெல்வெட் கம்பளம் விரித்து சினிமா உலகம் வரவேற்பது வாடிக்கைதான். ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் வரிசையில் ‘மிஸ் ஆஸ்திரேலியா’ போட்டியில் ஜெயித்தவர் ஆஷிமா நர்வால். சமீபத்தில் வெளிவந்த ‘கொலைகாரன்’ படத்தின் ஹீரோயின் இவர்தான். அழகிப் போட்டி, சினிமா பிரவேம் உட்பட பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“அழகிப் போட்டி டூ சினிமா. டிராவல் எப்படி?”

“பிறந்தது இந்தியா. படித்தது ஆஸ்திரேலியா. படிக்கும் போது விஞ்ஞானி அல்லது விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்றுதான் நினைத்தேன். படிக்கும் போது பெயிண்டிங், நடனம் என்று கலை சார்ந்த விஷயங்களில் அதிகமாக பங்கெடுத்தது உண்டு. ஆனால் ஒரே ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நான் நடிகையாக ஆவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

டிகிரி முடித்ததும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மெடிக்கல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நாள் ப்யூட்டி பார்லரில், சிட்னியில் நடைபெற இருந்த அழகிப் போட்டியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளரை யதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. அவர்தான் போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு கொடுத்தார். அப்போது என்னுடைய எதிர்காலத்தைக் குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் நடிக்க தீர்மானித்தேன். அதற்கு அடித்தளமாக இருக்கட்டும் என்று 2015 ஆம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டேன்.

அந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒரே இந்தியப் பெண் நான் மட்டுமே. மற்றவர்கள் அனைவரும் வெள்ளைக்காரிகள். அந்தப் போட்டியில் ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ட்’ பட்டம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா குளோபல்’ அழகிப் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்தது. அந்தப் போட்டியிலும் டைட்டில் வின்னர் பட்டம் கிடைத்தது.

அழகிப் போட்டிகளுக்குப் பிறகு சில சினிமா வாய்ப்புகள் வந்தன. முதலில் பாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்தது. பொதுவா என்னுடைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகளில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதை கொள்கை முடிவாக வைத்துள்ளேன்.

நான் செய்யும் வேலை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். எனக்கு என்னுடைய வேலை முக்கியம். ஒரு மருத்துவமனையில் மருத்துவர் இருந்தால் அவர் நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிப்பவராக இருக்க வேண்டும். அதேபோல் சினிமாவில் நான் இருந்தால் ஒரு நடிகையாக நான் ஏற்று நடிக்கும் கேரக்டரில் இயக்குநர்களின் எதிர்பார்ப்புகளை சரியாக வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பேன். பொதுவா நான் நடிக்கும் படங்களில் 100 சதவீத பங்களிப்பு கொடுக்கும் வகையில் பார்த்துக் கொள்வேன்.

பாலிவுட் வாய்ப்பு என் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். அதைத் தொடர்ந்து சென்னை கூத்துப்பட்டறையில் ஆறு மாதம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளிவந்த ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்குப் பிறகு வெளிவந்த படம்தான் ‘கொலைகாரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்ததில் மகிழ்ச்சி. ரசிக நெஞ்சங்களுக்கும் திரையுலகத்துக்கும் என் நன்றி.”“தமிழில் ‘கொலைகாரன்’ அனுபவம்?”

“இது என்னுடைய வாழ்க்கையை மாற்றிய படம் என்று சொல்லலாம். என்னுடைய கேரியரில் இதுதான் இப்போதைக்கு பெரிய படம். இரண்டு நாயகனுக்கான படமாக இருந்தாலும் நாயகிக்கான முக்கியத்துவம் உள்ள படமாகவே இருந்தது. நாயகியை எடுத்துவிட்டு பார்த்தால் ‘கொலைகாரன்’ முழுமை அடைந்திருக்காது. அர்ஜுன், விஜய் ஆண்டனி, நாசர், சீதா போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம்.

அவர்களுடன் நடித்தது என் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது. அவர்களுடைய திரை அனுபவம் உதவியாக இருந்தது. அவர்களிடமிருந்து சினிமா, ஒரு கேரக்டரை எப்படி டெவலப் பண்ணுவது உட்பட நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.”
“அடுத்து என்ன படம் பண்றீங்க?”

“இப்போதைக்கு ‘ராஜ பீமா’. ‘பிக்பாஸ்’ டைட்டில் வின்னர் ஆரவ் நாயகனாக நடிக்கிறார். படத்துலே டாக்டரா வர்றேன். முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் எனக்கு சவாலாக இருந்தது. படத்தில் மூன்றாவது முக்கியமான பாத்திரமாக யானை நடிக்கிறது. சில காட்சிகளில் யானையுடனும் நடிக்க வேண்டி இருந்தது.”

“சினிமாவில் இருப்பதால் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடிகிறதா?”

“படப்பிடிப்புக்கு என்னுடைய அம்மா உடன் வருவதால் ஹோம் சிக் பிரச்சனை இருந்ததில்லை. ஒருவேளை படப்பிடிப்புக்காக வேறு எங்கு போனாலும் நீண்ட நாட்கள் தங்கமாட்டேன். காரணம், தாய் இல்லாமல் நானில்லை.”

“போட்டியை எப்படி பார்க்கிறீர்கள்?”

“ஆரோக்கியமான போட்டியை விரும்புகிறேன். போட்டி இல்லை என்றால் கடினமா உழைக்கமாட்டோம். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்ததற்கு காரணமே அங்கு போட்டி இல்லாத சூழல் இருந்தது. நான் படிப்புலே சுட்டி. படிப்பு மட்டுமில்லாமல் எந்த வேலையாக இருந்தாலும் அந்த இடத்தில் போட்டி முக்கியம். போட்டி இல்லாமல் இருந்தால் நம்மிடம் ஏதோ குறை இருப்பதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆதலால் போட்டி தேவை.”
“சினிமா தவிர வேறு என்ன பிடிக்கும்?”

“சினிமா தவிர இண்ட்டீரியர் டிசைனிங்லே ஆர்வம் அதிகம் என்பதால் நேரம் கிடைக்கும் போது இண்ட்டீரியர் பண்ணுகிறேன். ஆஸ்பிட்டல், வீடு என்று பலதரப்பட்ட கஸ்டமர்ஸ் எனக்கு இருக்கிறார்கள். அத்துடன் பர்னிச்சர் ஏற்றுமதி, இறக்குமதி பண்றேன். விரைவில் ஒரு மருத்துவமனையை ஆரம்பிக்க உள்ளேன். பயணம் எனக்கு பிடிக்கும் என்பதால் டூரிசம் சார்ந்து சில விஷயங்களை ப்ளான் பண்ணி வருகிறேன்.

இந்தியாவில் சிறந்த பீச் பல இடங்களில் இருக்கிறது. அதில் கோவா புகழ் பெற்றதாக இருக்கிறது. அதுபோன்ற அமைப்பு ஆந்திராவில் இருக்கிறபடியால் ஆந்திராவில் கோவாவைப் போன்று ஒரு பீச் ஏற்படுத்த முடியும். அதற்கான வரைபடம் என்னிடம் தயாராக இருக்கிறது. அடுத்த மாதம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க உள்ளேன்.”

“படவாய்ப்புகளுக்கு பயந்து நடிகைகள் திருமணத்தை தள்ளிப் போடுவதைப் பற்றி?”

“எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உண்டு. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு இளவரசன் பிறந்திருப்பது நிச்சயம். தூக்கத்தில் என்னுடைய பிரின்ஸ் வெள்ளை உடையில் வெள்ளைக் குதிரையில் பறந்து வருவது போல் கனவு கண்டிருக்கிறேன்.

திருமணம் எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கணும். சிலருக்கு சீக்கிரம் நட்க்கலாம். சிலருக்கு தாமதமாக நடக்கலாம். ஆனால் லைஃப் பார்ட்னர் மஸ்ட். நடிகைகள் திருமணத்தை தள்ளிப் போடுவது அவரவர் விருப்பம். புகழின் உச்சியில் இருக்கும் போதே தீபிகா படுகோன் திருமணம் செய்துகொண்டார். ஜோ மேடம் நடிப்பு ராட்சசியாக அசத்துகிறார்.

அதேபோல் உங்க ஊர் பொண்ணு சமந்தா திருமணத்துக்குப் பிறகும் பின்னி பெடல் எடுக்கிறார். முன்பு திரு மணம் தொடர்ந்து நடிப்பதற்கு தடையாக இருந்தது. ஆனால் இப்போது அந்த மனநிலையில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.”

“ரோல் மாடல்?”

“பழைய நடிகைகளில் சாவித்திரி அம்மாவை ரொம்ப பிடிக்கும். இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மேடம். நடிகை என்பதைத் தாண்டி நயன்தாரா மீது என்க்கு பெரிய மரியாதை உண்டு.”

“ஒரு படத்துக்காக எப்படி உங்களை தயார் செய்கிறீர்கள்?”

“என்னுடைய கேரக்டரை டெவலப் செய்யும் விதமாக இயக்குநர் நடத்தும் ஒர்க் ஷாப்பில் பங்கு பெறுவேன். கேரக்டரை குறித்து இயக்குநருடன் பல முறை டிஸ்கஸ் பண்ணுவேன். படத்துல எனக்கு என்ன கேரக்டர் அந்தக் கேரக்டருக்காக என் லுக்கை மாற்ற முயற்சி செய்வேன். ‘கொலைகாரன்’ படத்துக்காக ஜெயகுமார் சார் உதவியாக இருந்தார்.”

“தமிழ் சினிமா என்றதும் உங்களுக்கு யார் ஞாபகத்துக்கு வருகிறார்கள்?”

“கமல் மற்றும் தேவி. அவர்கள் நடித்த ‘மூன்றாம் பிறை’ இந்தி ரீமேக் ‘சத்மா’ இந்தியிலும் பெரிய ஹிட். அந்தப் படம்தான் நான் பார்த்த முதல் தமிழ் சினிமா. மற்ற மொழிகளுடன் ஒப்பீடு செய்யும் போது தமிழ்ப் படங்களின் தரம் வேறு லெவலில் இருப்பதைப் பார்க்க முடிந்தது.”

“பிடித்த நடிகர்?”

“விஜய் சாரின் தீவிர ரசிகை நான். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்ததும் நான் பார்த்த முதல் படம் ‘தெறி’. முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன். இந்தியாவில் சினிமாவை திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். அந்த கொண்டாட்டத்தைப் பார்க்க என் ஆஸ்திரேலியா நண்பர்களுக்கு அழைப்பு கொடுத்துள்ளேன். விஜய் சாருடன் நடிப்பது என்பது பெரும் பாக்யம்.”

“கனவு வேடம்?”

“ஒரு நடிகையாக எல்லா வகை வேடங்களிலும் நடிப்பேன். அப்போதுதான் வித்தியாசமான நடிப்பை கொடுக்க முடியும். ரஜினி சார் ‘கபாலி’, காலா’, ‘பேட்டை’ என்று ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டுகிறார். இப்போ ‘தர்பார்’ போஸ்டரைப் பார்க்கும்போதே அதிருது. அந்த வகையில் பரீட்சார்த்த முறையில் நிறைய கேரக்டர்கள் பண்ண ஆர்வமாக இருக்கிறேன்.”

- சுரேஷ் ராஜா

படங்கள் : ஆண்டன் தாஸ்