கூடுவிட்டு கூடு பாய்ந்தேன்!நந்திதாவின் சிலீர் அனுபவம்



நந்திதா ஸ்வேதா, நடிக்க வந்து எட்டு வருடங்களுக்கும் மேலாகி விட்டது.  எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட ஜாலியாக அரட்டை யடிக்க மாட்டார். நெருங்கிய தோழிகளிடம் மட்டும் கலகலவென்று பேசுவார். ஜோக்கடிப்பார். மற்றபடி எந்த கேள்வி கேட்டாலும், கோபப்படாமல் சிரித்துக்கொண்டே பதிலளிப்பது அவரது ஸ்டைல். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த அவரை விரட்டிச் சென்று பிடித்தோம்.

“எப்பவும் இல்லாம, திடீர்னு இப்போ ஓவர் கிளாமர் பண்ணியிருக்கீங்களே?”

“காலத்துக்கு தகுந்த மாதிரி நம்மளை மாத்திக்கணும். ‘அட்டக்கத்தி’ படத்திலிருந்து என்னை பார்க்கறீங்க. நந்திதான்னாலே பாவாடை, தாவணி கொடுத்துடு வாங்க. பெரும்பாலும் ஃபேமிலி ஓரியன்டட் கேர்ளா மட்டுமே நடிச்சிருக்கேன். மாடர்ன் டிரெஸ் கொடுக்க மாட்டாங்க. ஒரேமாதிரி நடிச்சா, எனக்கு மட்டுமில்ல, தியேட்டருக்கு வந்து பணம் செலவழிச்சு படம் பார்க்கிற ஆடியன்சுக்கும் போரடிக்கும். அதனால்தான் திடீர்னு என் ஸ்டைலை மாத்திக்கிட்டு, ‘தேவி 2’ படத்தில் கொஞ்சம் கிளாமரா நடிச்சேன்.”

“மொரீஷியஸ் தீவில் ஷூட்டிங் நடந்தப்ப உங்களுக்கும், கூட நடிச்ச தமன்னாவுக்கும் பயங்கர சண்டைன்னு கேள்விப்பட்டோமே. என்ன காரணம்?”
“யாரோ உங்க காதில் நல்லா பூ சுத்தியிருக்காங்க. நீங்களும் அதை உண்மைன்னு நம்பி என்கிட்ட மொக்க வாங்கிட்டீங்க. உண்மையில் சொல்லணும்னா, ‘தேவி 2’ படத்தில் நடிக்கிறப்பவும் சரி, இப்ப நடிச்சு முடிச்சு படம் ரிலீசான பிறகும் சரி, தமன்னாவுக்கு என் மேல் நிறைய மரியாதை.

ஃபிரெண்ட்ஷிப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் தரும் ஹீரோயின் அவர். நானும், அவரும் சேர்ந்து நடிச்சாலும், எங்களுக்குள் எப்பவுமே கருத்து வேறுபாடு வந்ததில்லை. அவருக்கு கொடுத்த கேரக்டரை அவர் நடிச்சார். எனக்கு என்ன கேரக்டர் கொடுத்தாங்களோ அதை நான் நடிச்சேன். யாரும், யாருடைய வேலையிலும் குறுக்கிட்டது கிடையாது. நாங்க ரெண்டுபேரும் நல்ல பிரெண்ட்ஸ்.”

“தனி ஹீரோயினா நடிச்ச நீங்க, இப்ப எல்லா படத்திலும் ரெண்டு, இல்லன்னா, மூணு ஹீரோயின்கள் கூட சேர்ந்து நடிக்கிற நிலைமைக்கு
வந்துட்டீங்களே...?”

“இப்ப வர்ற எந்த படத்தில் சிங்கிள் ஹீரோயின் இருக்காருன்னு சொல்லுங்க பார்ப்போம்? எல்லா படத்திலும் ரெண்டு, இல்லன்னா, மூணு ஹீரோயின்கள் நடிக்கிறது வழக்கமாயிடுச்சு. தனி ஹீரோயினா நடிச்ச காலம் மலையேறிப் போச்சு. இப்ப ஒரே படத்தில் பல ஹீரோயின்கள் நடிக்கிறதுதான் ஃபேஷன். கதையை கேட்கிறப்ப, இதில் எத்தனை ஹீரோயின்கள் நடிக்கிறாங்கன்னு பார்க்க மாட்டேன்.

அதில் என் கேரக்டருக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குன்னுதான் பார்ப்பேன். அந்த கேரக்டர் பிடிச்சிருந்தா, பத்து ஹீரோயின்கள் இருந்தாலும் பயப்படாம நடிப்பேன்.”“தமிழில் அதிகப் படம் பண்ணாம, தெலுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கறீங்கன்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. அதுக்கு என்ன சொல்றீங்க?”“சினிமாவில் நடிக்க வந்து எட்டு வருஷத்துக்கு மேலாயிடுச்சு. தொடர்ந்து ஒரே மொழியில் நடிச்சா, ஆடியன்சுக்கு ரொம்ப போரடிக்கும். அதுக்குத்தான் மற்ற மொழி படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன்.

தெலுங்கில் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அதனால் அங்கே நிறைய படங்கள் கமிட் பண்ணேன். உடனே தமிழை நான் மறந்துட்டேன்னு சொல்றதா? கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தேன். இப்ப தெலுங்கிலும் படம் பண்றேன். அடுத்து மலையாளத்துக்கு போகணும். நாலு மொழிகளில் சாதிச்ச பிறகு பாலிவுட்டில் படம் பண்ணணும். இப்படி நிறைய பிளான் இருக்கு.”

“பொதுவா சக நடிகைகள் சண்டை போடுவாங்க. ஆனா, ஐஸ்வர்யா ராஜேஷ் உங்களுக்கு ஓவரா சிபாரிசு பண்றாரே. அந்த ரகசியம் என்ன?”
“நானும், அவரும் ‘அட்டக் கத்தி’ படத்தில் சேர்ந்து நடிச்சதில் இருந்து நெருங்கிய தோழிகளா இருக்கோம். தினமும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் பண்ணுவோம். ஒருத்தரைப் பற்றி ஒருத்தர் அக்கறையா விசாரிப்போம்.

எந்த படத்தில் நடிக்கிறோமோ அதைப்பற்றி பேசுவோம். ஒருநாள் ஐஸ்வர்யா எனக்கு போன் பண்ணி, டைரக்டர் ஏ.எல்.விஜய்யின் ‘தேவி 2’ படத்தில் ஒரு நல்ல கேரக்டர் இருக்கு, பண்ணுன்னு சொன்னார். உடனே நான் விஜய்கிட்ட பேசினேன். அப்படி கிடைச்ச வாய்ப்புதான் ‘தேவி 2’. அதுக்கு முதலில் ஐஸ்வர்யாவுக்குத்தான் நன்றி சொல்லணும். இந்தக் காலத்தில் மற்ற நடிகைக்கு உதவி செய்யணும்னு ஒரு நடிகை நினைக்கிறதே மிகப் பெரிய விஷயம்தானே.”

“முதன்முறையா போலீஸ் கேரக்டரில் நடிக்கிற அனுபவம் எப்படி இருந்தது?”

“உண்மையிலேயே அது ஒரு மறக்க முடியாத அனுபவம். ‘ஐபிசி 376’ படத்தில் போலீஸ் கெத்து காட்டி நடிச்சிருக்கேன். நிஜ வாழ்க்கையில் நான் கொஞ்சம் அதிரடி பொண்ணு. ஆனா, தமிழ்ப் படங்களில் என்னை ஹோம்லியா காட்டிக் காட்டி, நான் ரொம்ப சாந்தமான பொண்ணுன்னு ஆடியன்சை நினைக்க வெச்சுட்டாங்க. நிஜ வாழ்க்கையில் நான் எப்படி இருக்கிறேனோ, அந்த கேரக்டரைத்தான் ‘ஐபிசி 376’ படத்தில் பண்றேன். அரவிந்த்சாமி கூட நடிக்கிற ‘வணங்காமுடி’ படத்தைப் பற்றியும் நிறைய சொல்லலாம்.”

“செல்வராகவன் டைரக்‌ஷனில் நடிச்ச ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பற்றி என்ன நினைக்கறீங்க?”

“கூடு விட்டு கூடு பாய்வதுன்னு சொல்வாங்க இல்லையா? அதை நான் செல்வராகவன் டைரக்‌ஷனில் நடிக்கிறப்ப உணர்ந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன உடனே அவர் என்னை டோட்டலா மாற்றி, என் கேரக்டரைப் பற்றி என்ன நினைச்சிருந்தாரோ அதை கொண்டு வந்துடுவார். ஷூட்டிங் முடிந்து ஓட்டலுக்கு போன பிறகு கூட அந்த கேரக்டர் என்கூடவே வரும்.

அதிலிருந்து உடனே மீளமுடியாது. இன்னொரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனா கூட, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ கேரக்டர் திடீர்னு எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு சீனையும் அவர் விளக்கி சொல்லும்போது கவனிச்சாலே போதும். அவர் என்ன எதிர்பார்த்தாரோ அந்த நடிப்பை சரியா கொடுக்க முடியும். உண்மையிலேயே செல்வராகவன் ஒரு ஜீனியஸ். மறுபடியும் அவர் டைரக்‌ஷனில் நடிக்க கேட்டா, கண்ணை மூடிக்கிட்டு கால்ஷீட் கொடுப்பேன்.”

“இத்தனை வருஷமா ஃபீல்டில் இருக்கீங்க. ஆனா, இன்னமும் முன்னணி ஹீரோயின்கள் பட்டியலில் இடம்பிடிக்கலையே...?”

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? எல்லாரும் நயன்தாரா இடத்துக்கு வர முடியுமா? சமீபத்தில் ‘கனா’ படம் பார்த்தேன். அந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னிப் பெடலெடுத்து இருந்தார். ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கேரக்டர் கிடைப்பது மிகப் பெரிய அதிர்ஷ்டம். அந்த வாய்ப்பு நயன்தாராவுக்குப் பிறகு ஐஸ்வர்யாவுக்கு கிடைச்சிருக்கு.

எப்பவுமே நான் முன்னணி நடிகை இடத்துக்கு ஆசைப்பட்டதும் கிடையாது. ஆசைப்படவும் மாட்டேன். டைரக்டர்கள் சொல்றதை புரிஞ்சுக்கிட்டு நடிச்சு, ஆடியன்சுக்கு பிடிச்ச நடிகையா இருந்துட்டு போகணும். அதுதான் என் பாலிசி.”

“சமீபகாலமா உங்களை எந்த பார்ட்டியிலும் பார்க்க முடியலையே! ஏன், அந்த கலாசாரம் உங்களுக்கு போரடிச்சு போச்சா?”

“ஒரே ஒருமுறை பெங்களூரில் நடந்த பார்ட்டிக்கு போயிருந்தேன். ஆனா, அங்கே இருந்தவங்க நடந்துக்கிட்ட முறையும், போட்ட கூச்சலும், ஆட்டம் பாட்டமும் எனக்கு சுத்தமா பிடிக்கல. இனிமே எந்த பார்ட்டிக்கும் போகக்கூடாதுன்னு அப்பவே முடிவெடுத்துட்டேன். அப்படிப்பட்ட என்கிட்ட வந்து இப்படி கேட்கறீங்களே, உங்களுக்கே நியாயமா இருக்கா? ஒரு இரவு முழுக்க பார்ட்டியில் இருக்கிறோம்னு வெச்சுக்குங்க.

மறுநாள் முழுக்க சோர்வா இருக்கும். சரியா தூங்க முடியாம அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். முகம் வீங்கிடும். நம் நடவடிக்கை எல்லாம் மாறிடும். அதிலும் பார்ட்டிக்கு மறுநாள் ஷூட்டிங் இருக்குன்னு வெச்சுக்குங்க. ஒழுங்கா நடிக்க முடியுமா? வீங்கிய முகமும், சிவந்த கண்களும், சோர்வான தோற்றமும் ஷூட்டிங்கிற்கு சரிப்பட்டு வருமா? அதனால்தான் யார் என்னை வற்புறுத்தி கூப்பிட்டாலும், எந்த பார்ட்டிக்கும் போறதில்ல.”

- தேவராஜ்