7



அழகிய ஆபத்து!

என் கணவரைக் காணவில்லை, கண்டுபிடித்துக் கொடுங்கள் என ஒன்றுக்கு மூன்று அழகான பெண்கள் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். விசாரணையில் காவல்துறை சீரியஸாக இருக்கும்போது, காணாமல் போனவர் பற்றி துப்பு கொடுக்க முன்வருபவர் கொடூரமாக கொல்லப்படுகிறார்.
காணாமல் போன அந்தக் கணவனைத் தேடிக் கண்டுபிடித்தால், தன்னுடைய மனைவியர் என்று சொன்ன மூவரையுமே தனக்கு யாரென்றே தெரியாது என்கிறார். இந்தக் குழப்பத்தில் நான்காவதாக ஒரு பெண் அவரைச் சுட்டுக்கொல்ல முற்படுகிறார்.

அப்படிப்பட்ட அப்பாடக்கர் ஹீரோ யார், அவரை கணவர் என்று உரிமை கொண்டாடிய பெண்கள் சொன்னது உண்மையா,  அவரை கொல்ல முயன்றவர் யார், துப்பு கொடுக்க முன்வந்தவர் கொல்லப்பட்டது ஏன் என்பது மாதிரி ஏகப்பட்ட கேள்விகளுக்கு  விடையளிக்கிறது பர
பரப்பான கிளைமேக்ஸ்.

நாயகனாக நடித்திருக்கும் ஹவிஷ், நான்கு பெண்கள் போட்டி போடுமளவுக்கு ஜெமினி கணேசன் மாதிரி சூப்பர் இல்லையென்றாலும், தனக்குக் கொடுத்திருக்கும் வேலையை முடிந்தவரை சிறப்பாகவே செய்திருக்கிறார். அவருக்கு உரிமை கொண்டாடும் நந்திதா ஸ்வேதா, த்ரிதா செளத்ரி, அதிதி ஆரி ஆகிய மூவரும் காதல் காட்சிகளில் தாராளமாக நடித்து ரசிகர்களைக் கவருகிறார்கள்.

குறிப்பாக மூவரில் த்ரிதா அழகிலும் நடிப்பிலும் முந்துகிறார்.ரெஜினாவுக்கு அழுத்தமான பாத்திரம். இதுவரை பார்த்திராத ரெஜினா என்பதால் சற்று பயமாகவும் இருக்கிறது. காதலுக்காக எதையும் செய்யும் அவருடைய பாத்திரப்படைப்பு எதிர்பார்க்க முடியாதது. அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

படத்தின் தொடக்கத்திலிருந்து கடைசிவரை வழக்கைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரகுமான், தன் தேர்ந்த நடிப்பால் காட்சிகளை கவனிக்க வைக்கிறார். ஆனால் படம் முழுதும் குடிமன்னனாக வருவது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. நீதிமன்றத்தில் குடிப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

திரில் படத்துக்குத் தேவையான இசையைப் பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார் சைத்தன் பரத்வாஜ்.  கதை திரைக்கதை, எழுதியிருக்கும் ரமேஷ்வர்மா, புத்திசாலித்தனமாக எழுதி யிருக்கிறார்.  ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் நிஷார் ஷஃபி. திரைக்கதை அளவுக்கு ஒளிப்பதிவும் படத்துக்கு பலமாக அமைந்திருக்கிறது.

பழிவாங்கும் கதைதான் என்றாலும், அதற்கு இயக்குநர் அமைத்திருக்கும் திரைக்கதையும், திருப்புமுனையும் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பைக் கொடுக்கிறது. மொத்தத்தில்... காதல் எவ்வளவு அழகானதோ அவ்வளவு ஆபத்தானது என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.