கொலைகாரன்



கொலை கொலையாய் முந்திரிக்கா!

நல்லவனும், கெட்டவனும் மோதுவதுதான் கமர்ஷியல் சினிமாவுக்கான சக்சஸ் ஃபார்முலா. நல்லவனும், நல்லவனும் மோதிக்கொண்டால்?

அதையும் ‘கொலைகாரன்’ மூலமாக கமர்ஷியலாக சக்சஸ் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்.படத்தின் தொடக்கத்திலேயே ஒரு கொலை விழுகிறது. அந்தக் கொலையை, தான் செய்ததாக சரண்டர் ஆகிறார் விஜய் ஆண்டனி. கொலைவழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி அர்ஜுன். விசாரணைக்கு வாலண்டியராக உதவுகிறார் காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற நாசர்.

மிக மெதுவாகத் துவங்கும் படம் இடைவேளை ட்விஸ்ட்டில் வேகம் பிடிக்கிறது. அடுத்த பாதி முழுக்க எக்ஸ்பிரஸ் வேக திரில்தான். என்னென்ன ட்விஸ்ட்டுகள் வருமோவென்று ரசிகர்கள் சீட்டோடு சீட்டாக பிணையுமளவுக்கு திரைக்கதையில் விளையாடி இருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி, அமைதியான முகத்தில் காட்டியிருக்கும் ஆக்ரோஷம் அபாரம். வார்த்தைகளுக்கே வலிக்காமல் வசனம் பேசுவது விஜய் ஆண்டனியின் ஸ்டைலாகவே உருவெடுத்திருக்கிறது. அர்ஜுன் வழக்கம்போல அதகளம். ‘சட்டத்தை எழுத நான் வரலை. ஏற்கனவே எழுதிட்டாங்க’ என்று சொல்லும்போது ஆக்‌ஷன் கிங், அதிரடி நடிப்பில் அள்ளுகிறார். அர்ஜுனுக்கு ஜஸ்ட் லைக் தட் கேரக்டர். சண்டைக்காட்சியே இல்லாமல் ஆக்டிங்கில் ஆக்‌ஷனைக் காட்டுகிறார்.

ஹீரோயின் ஆஷிமா நர்வல், கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார். படம் முழுக்க அச்சப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது மாதிரியான பாத்திரம். பாடல் காட்சிகளில் மட்டுமாவது அவருடைய அழகு மொத்தமாக வெளிப்படுவது ‘வண்ணத்திரை’ வாசகர்களை குஷியில் ஆழ்த்துகிறது.நாசர், சீதா, சம்பத்ராம் ஆகியோர் கொடுத்த வேடங்களுக்கு நியாயமாக நடித்திருக்கிறார்கள்.

சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்கு தேவையான ஒளிப்பதிவை மிகச் சரியாக செய்திருக்கிறார் முகேஷ். இனிமையான பாடல்கள் மூலமாக படத்துக்கு யார் இசை என்று கேட்கவைக்கிறார் சைமன் கே.கிங். பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. குறிப்பாக ‘டிக் டிக்’ கடிகார ஓசையில் கிலி ஏற்படுத்தி இருக்கிறார்.

ஹாலிவுட் திரில்லர் பாணியில் காட்சிகளில் அமைதியழகைக் கொண்டு வந்திருப்பதின் மூலம் தன்னுடைய இயக்கத் திறமையை பிரும்மாண்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார் டைரக்டர் ஆண்ட்ரூ லூயிஸ்.