வேதமானவன்



திருந்த விடுங்கள்!

ஓய்வு பெற்ற நீதிபதி மூ.புகழேந்தி இயக்கியிருக்கும்  படம் இந்த ‘வேதமானவன்.’நாயகன் மனோ ஜெயந்த் மீன் வியாபாரி. அவருக்கு ஒரு காதலி. அந்த கிராமத்தில் நகைக்காக  பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். மனோ ஜெயந்த் மீது போலீஸின் சந்தேகப் பார்வை திரும்பவே வலை விரித்து பிடிக்கத் திட்டமிடுகிறார்கள். மீன் விற்கும் மனோவும் அந்த வலையில் சிக்குகிறார். சட்டம் தன் கடமையை செய்த பிறகு திருந்தி வாழ நினைக்கிறார் மனோ.

ஜெயில் ரிட்டன் மனிதர்களை இந்த சமூகம் திருந்தி வாழ அனுமதிக்கிறதா, நாயகன் ஏன் நகைகளை கொள்ளையடிக்கிறார், அதற்கான காரணம் என்ன என்பதுதான் மீதிக்கதை.மனோ ஜெயந்த், யதார்த்தமாக நடித்து மனதில் நிற்கிறார். நாயகி ஊர்வசி ஜோஷி அழகாக இருக்கிறார். டெல்லி கணேஷ் அனுபவ நடிப்பு மூலம் தன் இருப்பைக் காட்டிகொள்கிறார்.

செளந்தர்யனின் இசை டிரெண்டில் இல்லை என்றாலும் மனதைத் தொடுகிறது. ஒளிப்பதிவாளர் எஸ்.கண்ணன் கிராமத்து அழகை கண் முன் நிறுத்துகிறார். குற்றவாளிகள் திருந்தி வாழ சமூகம் சந்தர்ப்பம் தரவேண்டும் என்று தான் வழங்கிய தீர்ப்பை, சினிமாத்தனம் இல்லாமல் அப்படியே படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் மூ.புகழேந்தி.