100



கண்ட்ரோல்ரூம் காவலரின் கதை!

தமிழ் சினிமாவில் ஏராளமான போலீஸ் கதைகள் வந்திருந்தாலும், இது புதுசு எனுமளவுக்கு  போலீஸ் கண்ட்ரோல் ரூமை மையப்படுத்தி வெளிவந்துள்ளது இந்த ‘100’.அவசர ஆபத்துக்குத்தான் 100 என்பது அனைவரும் அறிந்தது. அப்பிரிவில் வேலை செய்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன்.

காக்கிச் சட்டைக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேலையில் சேருகிறார் அதர்வா. ஆனால், அவருக்கு போலீஸ் கண்ட்ரோல் ரூமில் வேலையை ஒதுக்குகிறார்கள். விருப்பமே இல்லாமல் பணியைத் தொடர்கிறார். அப்படி 99 அழைப்புகளைக் கடந்துவிட்ட அதர்வாவுக்கு 100வது அழைப்பு வருகிறது. பெண் ஒருவர் பயத்துடன் ‘‘என்னை யாரோ கடத்திவிட்டார்கள், காப்பாற்றுங்கள்’’ என்று நடுங்கிய குரலில் உதவி கேட்கிறார்.

மற்ற காவலர்கள் அந்த போன் அழைப்பை அலட்சியப்படுத்த, அதர்வாவோ அப்பெண்ணின் தவிப்பில் இருக்கும் உண்மையை உணர்ந்து காப்பாற்ற முயற்சிக்கிறார்.அதர்வாவின் பிசிக்கல் ஃபிட்னஸ் அவரை போலீஸாக ஏற்றுக்கொள்ள வைக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் தெறிக்க விடுகிறார்.  ஆனால், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்ததைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஜோடியைப் பார்க்கும் போது டீச்சரிடம் டியூஷன் படிக்கும் பள்ளி மாணவன் போல் தெரிகிறது.

யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் காமெடி சரவெடி. போலீஸ் டியூட்டி அவருக்கு பொருந்தவில்லை என்றாலும் கண்ட்ரோல் ரூமில் அவர் பண்ணும் லூட்டி அனைத்தும் பியூட்டி. ராதாரவி, ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி ஆகியோர் வழக்கம்போல் தங்கள் பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதர்வாவின் நண்பராக வரும் மகேஷும் குறை வைக்கவில்லை.

படத்தின் முதுகெலும்பு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசையில் முன்னணி இசையமைப்பாளருக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் அசத்தலான லைட்டிங், கேமரா கோணங்கள் மூலம் கவனிக்க வைக்கிறார்.குறிப்பாக கார் டூ கார் பெண்ணை காப்பாற்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் 100 ஆக உயர்கிறது.

சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் கதை என்றாலும் அதை ஆரம்பத்திலேயே சொல்லாமல், கமர்ஷியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேற லெவலில் எடுத்துள்ளார் இயக்குநர் சாம் ஆண்டன். மொத்தத்தில் இந்த ‘100’... நூறு நாள் ஓடுவதற்குத் தகுதியான படம்.