இளம்பெண்ணாக மாறும் பாட்டி!



‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படங்களைத் தொடர்ந்து ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ படத்தில் நடிக்கிறார் ஷில்பா மஞ்சுநாத். ஹீரோயினிஸப் படமான இதில் இவருக்கு இரட்டை வேடமாம்.

 கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி தயாரித்து இயக்கியுள்ள இதில் நாயகனாக விவேக் நடிக்கிறார். இவர் ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’  ஆகிய படங்களில் நடித்தவர். முக்கிய வேடத்தில் சச்சு, இயக்குநர் சரவண சுப்பையா,  லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லி கணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷில்பா மஞ்சுநாத்திடம் பேசினோம்.“நாயகிகளுக்கு இரட்டை வேடம் என்பது சினிமாவில் ரொம்ப அபூர்வம். எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது?”
“நான் தமிழில் ஒப்பந்தமான முதல் படமே  ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ தான். ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ வாய்ப்புகள் எல்லாம் பின்னால்தான் அமைந்தது. ஆனால், அந்தப் படங்கள் ரிலீஸ் ஆகி, என்னுடைய முதல் படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி விட்டது.

தமிழில் அறிமுகமாகும் முதல் படமே இரட்டை வேடம் என்பதில் எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் விஜயன் கதையை சொல்லும்போதே, இது ஷ்யூர் ஷாட் என்று தெரிந்துவிட்டது. ரசிகர்களுக்கும் சம்திங் ஸ்பெஷலாக இப்படம் அமையும்.”
“தமிழில் உங்களுக்கு எப்படி வரவேற்பு இருக்கிறது?”

“ரொம்பவே நல்லா இருக்கு. ‘காளி’யில் பி அண்ட் சி ரசிகர்களும், ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படம் மூலமாக ஏ கிளாஸ் ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள். இப்போ ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ மூலம் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவருவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இதில் இரட்டை வேடத்தில் நடித்தது ரொம்பவே சவாலாக இருந்தது. ஆடிஷனில் கலந்துகொண்டபோது பொட்டு வைக்காத என் முகத்தைப் பார்த்து இயக்குநர் தயங்கினார். ‘இது கொஞ்சம் ஹோம்லி கேரக்டர்’ என்றார்.

உடனே அங்கிருந்த உதவி இயக்குநரிடம் பேனா வாங்கி, அவர் கண் எதிரிலேயே பொட்டு வைத்து இயக்குநரை அசத்தினேன். ஷுட்டிங் முடிந்த பிறகு, ‘நான் நினைச்சதைவிட ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க’ என்று இயக்குநர் பாராட்டினார்.”
“படத்தோட கதை என்ன?”

“கதைப்படி எனது பாட்டி சச்சு, ஒருகட்டத்தில் என்னைப்போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்ணாக மாறிவிடு
கிறார். என்னுடைய உருவத்தில், அதேசமயம் சச்சு அம்மாவின் மேனரிஸங்களை, அவரது பாடி லாங்குவேஜை, வசனம் பேசும் விதத்தை என ஒவ்வொன்றையும் மிகச்சரியாகச் செய்ய வேண்டி இருந்தது.

என்னுடைய கேரக்டர் கமல்ஹாசன் மாதிரி அமைதியாக இருக்கும். ஆனால் சச்சு அம்மாவின் கேரக்டரோ வடிவேலு மாதிரி ஒரே கலாட்டாவாக இருக்கும். சச்சு அம்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்கவேண்டி இருந்தது. இதனால் நடக்கும் களேபரங்கள் எல்லாம் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும்.

ஒரே நேரத்தில் இரண்டுவிதமான கேரக்டர்களுக்குமான காட்சிகள் படமக்கப்பட்டதால் இரண்டு கேரக்டர்களுக்குமான உடைகள், வாட்ச், செருப்பு முதற்கொண்டு எல்லாவற்றிலும் ஆரம்ப நாட்களில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. ஆனால் போகப்போக சரியாகி விட்டது. இதற்காகவே சச்சு அம்மா நடிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பை கூர்ந்து கவனித்து வந்தேன்.

நான் அப்படி கவனித்தேன் என்பது கூட இப்போதுவரை அவருக்குத் தெரியாது. இதில் சச்சு அம்மாவின் இளம்பருவ கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் ‘ரெட்ரோ’ காட்சிகளும் உண்டு. முதல் படத்திலேயே ரெட்ரோ காட்சிகளும் எனக்கு கிடைத்தது இன்னொரு அதிர்ஷ்டம்தான். இரண்டு வேடங்கள் தான் என்றாலும் கிட்டத்தட்ட நான்கைந்து விதமான நடிப்பை இதில் கொடுக்க வேண்டி இருந்தது. அதேசமயம் இயக்குநர் விஜயன் கதையை உருவாக்கி இருந்த விதம், அழகாக எனது கதாபாத்திரங்களை உள்வாங்கி நடிக்க உதவியாக இருந்தது.”

“எந்தமாதிரியான படங்கள் செய்ய விருப்பம்?”

“என்னைப் பொறுத்தவரை சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்று பிரித்துப் பார்க்கமாட்டேன். எல்லாப் படங்களுக்கும் ஒரே வகையான உழைப்பைக் கொடுப்பது என்னுடைய பாலிஸி. இதுவரை எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு ஒவ்வொரு முறையும் நான்கைந்து முறைக்கு மேலே ஆடிஷன்களில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. காரணம், நான் ஏற்ற பாத்திரங்கள் பலவிதமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டி இருந்தது. இப்போது என்னுடைய திறமையை எல்லோரும் உணர்ந்துவிட்டார்கள் என்பதால், நிறைய வாய்ப்புகள் ஆடிஷன் இல்லாமலேயே கிடைக்கிறது.”

“நெக்ஸ்ட்?”

‘‘இப்போது ஒரு கன்னடப் படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தாலும் எல்லாமே லவ்வர் கேர்ள் கதாபாத்திரங்களாகவே வருகின்றன. பெரும்பாலும் நான் ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்கள் போலவே வருவதால் அவற்றைத் தவிர்த்து விடுகிறேன். நடிப்பில் புகுந்து விளையாடும் சவாலான கதாபாத்திரங்கள் என்றால் அதை மிஸ் பண்ணக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.”

- சுரேஷ்ராஜா