சவுக்குமர தேகம்..சண்டை போடவும் தெரியும்!



ஜீ.வி.பிரகாஷ், ரா.பார்த்திபன் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் ‘குப்பத்து ராஜா’. இந்தப் படத்தில் நடன இயக்குநர் பாபா பாஸ்கர் டைரக்டராக அவதாரம் எடுத்திருந்தார். படத்தில் தேக்குமர தேகத்தோடு பிரும்மாண்டமான வடிவத்தில் பூனம் பாஜ்வா வலம் வந்தாலும், வெடவெடவென்று சவுக்குமரம் கணக்காக, ஒல்லிக் குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரியாக ரசிகர்களின் மனதை அள்ளியவர் பாலக் லால்வாணி. அவரிடம் பேசினோம்.

“ஃபேமிலி பேக்ரவுண்ட் ப்ளீஸ்?”

“அப்பா ஜித்தன் லால்வாணி இந்தி சினிமா மற்றும் டி.வி. நடிகர். அம்மா ஃபேஷன் டிசைனர். பிரத்யேகமாக ஒரு பிராண்ட் வைத்து நடத்துமளவுக்கு ஃபேஷன் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். ஒரே தம்பி பத்தாவது படிக்கிறான். நான் சைக்காலஜி, தத்துவம் படித்துள்ளேன். சினிமா பேஷன் என்பதால் நடிக்க வந்துவிட்டேன்.”

“தமிழில் வாய்ப்பு எப்படி அமைஞ்சது?”

“நான் நடித்த தெலுங்குப் படங்களைப் பார்த்துவிட்டுதான் ‘குப்பத்து ராஜா’ இயக்குநர் பாபா பாஸ்கர் அழைத்தார். தமிழில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறும் என்று நினைக்கவே இல்லை. ‘குப்பத்து ராஜா’ படத்தை நான் தேர்வு செய்யக் காரணம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாகச் சொல்லியிருந்தார்கள். இங்கே அறிமுகமாக இதைவிட சிறப்பாக வேறு படம் கிடைக்காது என்பதால் தமிழில் நடிக்க முடிவு பண்ணினேன்.”

“தமிழ் சினிமா அனுபவம் எப்படி?”

“இந்தப் படம் பண்ணும் போதே எனக்கு இரண்டு தமிழ்ப் படங்கள் கிடைத்தது. அவ்வகையில் நானும் தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாக மாறியதில் சந்தோஷம். வாழ்க்கையில் கஷ்டம் என்று எதுவுமில்லை. எந்த ஒரு விஷயத்தையும் சிரமமாக ப்பார்த்தால்தான் சிரமமாகத் தெரியும். ஒவ்வொரு விஷயத்துக்காகவும் முயற்சிக்கும் போது புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம். அதனால் எதையும் நான் சிரமமாகப் பார்க்கமாட்டேன்.

மும்பையில் பிறந்து வளர்ந்த அல்ட்ரா மாடர்ன் பெண். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பற்றி சுத்தமா தெரியாது. படம் பார்த்துவிட்டு எப்படி உங்களால் குப்பத்து கேரக்டரை எளிதாகப் பண்ண முடிந்தது என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஒரு நடிகையின் வேலையே அதுதான். இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதன்படி மாறுகிறவர்கள்தான் சிறந்த நடிப்பை வெளிக் கொண்டு வரமுடியும். என்னுடைய கேரக்டரின் நடை, உடை, ஸ்டைல், மேனரிசம் எல்லாமே எனக்கே வித்தியாசமாக இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் ஜீ.வி.பிரகாஷ், பூனம் காம்பினேஷன் காட்சியில் நடித்தேன்.

பார்த்திபன் சார், எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்களுக்கு காட்சியை அதிகமாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. அந்த ஜாம்பவான்களுடன் நடித்தது மறக்க முடியாதது. இயக்குநர் கொடுத்த நம்பிக்கையில் அடுத்தடுத்து கேரக்டருக்குள் எளிதாக டிராவல் பண்ணி நடிக்க
முடிந்தது.”

“ஜீ.வி.பிரகாஷ் எப்படி பழகினார்?”

“பெரிய இசையமைப்பாளர். நடிகராகவும் கலக்கி வருகிறார். பாசிட்டிவ் எனர்ஜி உள்ளவர். என்னுடைய பெர்ஃபாமன்ஸுக்கு உடனடியா அவரிடமிருந்து பாராட்டு வரும். படத்துக்கு படம் வெரைட்டி காண்பித்து வருகிறார். ‘குப்பத்துராஜா’வில் ஏற்று நடித்த ராக்கெட் கேரக்டரே அதற்கு சான்று. அமைதியானவர். பழகுவதற்கு இனிமையானவர். பலமான சினிமா பின்னணி இருந்தாலும் பந்தா இல்லாதாவர். தனிப்பட்ட விதத்தில் தமிழ் மொழியைப் புரிந்து நடிப்பதற்கும் வார்த்தைகளின் அர்த்தத்தை தெரிந்து நடிப்பதற்கும் உதவியாக இருந்தார்.”

“அடுத்து?”

“வைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்’ படம் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணி நடந்து வருகிறது. இதில் பத்திரிகையாளராக வர்றேன். ஆதியுடன் நடிக்கும் ‘பார்ட்னர்’ ஒரு ஷெட்யூல் முடிந்துள்ளது. நானும் ஹன்சிகாவும் லீட் பண்ணியிருக்கிறோம். படத்துல எனக்கு டாக்டர் கேரக்டர்.  இவ்விரண்டு படங்களும் தமிழில் எனக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

“எந்த மொழியில் நடிக்க ஆர்வமா இருக்கீங்க?”

“எப்போதுமே எனக்கு மொழி ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. இந்தி, ஆங்கிலம், மராத்தி, தெலுங்கு உட்பட ஏராளமான மொழிகள் எனக்குத் தெரியும். தமிழைப் பொறுத்தவரை பேசும்போது புரிந்துக் கொள்ள முடியும். விரைவில் தமிழில் சரளமாகப் பேச முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு நடிகை எந்த மொழியில் நடிக்க வேண்டும் என்பதை கதைகள்தான் தீர்மானிக்கிறது. ஒரே மொழியில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பது என்னுடைய திட்டமும் இல்லை. நான் குளோபல் சிட்டிஸன். நல்ல கதைகள் உள்ள பட வாய்ப்புகள் எந்த மொழியிலிருந்தாலும் பண்ணுவேன். நல்ல கதை மட்டுமே என்னுடைய ஒரே எதிர்பார்ப்பு.”

“சினிமாவில் நீங்கள் அடைய விரும்பும் இடம்?”

“காலங்கள் கடந்தும் என்னைப் பற்றி பேசப்பட வேண்டும். பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்ற இடத்தை அடைய வேண்டும். ஆக்டர் என்ற இடத்தில் இருப்பவர்களுக்கு பட எண்ணிக்கை முக்கியமாக இருக்கும். ஆர்ட்டிஸ்ட்டுக்கு பெர்ஃபாமன்ஸ்தான் முக்கியம்.”

“தமிழ் சினிமாவில் உங்களைக் கவர்ந்த அம்சம்?”

“தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பரீட்சார்த்த முறையில் ‘டூ லெட்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உட்பட ஏராளமான படங்கள் வருகிறது. இங்கிருப்பவர்களின் கிரியேட்டிவிட்டி மலைக்க வைக்கும் வகையில் இருக்கிறது. வேலை விஷயத்தில் ஒழுக்கநெறியைக் கடைப்பிடிக்கிறார்கள். தொலைநோக்குப் பார்வையோடு படம் எடுக்கிறார்கள். வாணிபத்தையும் தாண்டி சினிமாவை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு முனைப்புடன் படம் எடுக்கிறார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்ற மனப்பான்மையோடு வேலை செய்யும் தமிழ்நாட்டுக்காரர்
களுடன் நான் வேலை செய்வதை பாக்கியமாகவும் சந்தோஷமாகவும் பார்க்கிறேன்.”

“உங்க நடிப்பில் அசால்ட் தெரிகிறதே... நடிப்பை எங்கு கற்றுக் கொண்டீர்கள்?”

“இப்படிச் சொல்கிறேன் என்று என்னை மமதையாகப் பார்க்க வேண்டாம். நடிப்பு என்பது என் ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாகப் பார்க்கிறேன். இறைவன் எல்லோருக்குள்ளும் ஒரு திறமையை வைத்திருக்கிறார். அந்த வகையில் நடிப்பை எனக்கு கிடைத்த வரமாகப் பார்க்கிறேன். அதுமட்டுமில்ல, நடிப்பை ஒருவரிடம் மட்டுமே கற்றுக் கொள்ள முடியாது. தினம் தோறும் நாம் பழகும் மனிதர்களிடமிருந்தே நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். கல்லூரியில் படிக்கும்போது நவீன நாடகத்தில் ஈடுபாடு அதிகம். மேடைக்குப் பின்னால் இருந்து நிறைய வேலையை செய்திருக்கிறேன்.

இந்தியில் மோஸ்ட் சீனியர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் மக்ரந்த் தேஷ்பாண்டே. ஏராளமான இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்துள்ளார். படங்களையும் இயக்கியுள்ளார். எண்ணிக்கையில் அடங்கா ஸ்டேஜ் ஷோக்கள் பண்ணியவர். அவருடன் பயணித்தபோது சினிமாவை பரந்த நோக்கத்துடன் பார்க்க முடிந்தது. மேடைக்குப் பின்னால் இருந்து நிறைய கற்றுக் கொண்டது இப்போது யூஸ்ஃபுல்லாக இருக்கிறது.”

“பிடித்த நடிகை?”

“நயன்தாரா மேடத்தின் தீவிர ரசிகை நான். அவங்க ஒர்க்கிங் ஸ்டைலைத்தான் நான் ஃபாலோ பண்ணுகிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பதால் இதைச் சொல்லவில்லை. நயன்தாரா மேடத்தை நான் பல வருடங்களாக ஃபாலோ பண்ணுகிறேன். அவருடைய பெர்ஃபாமன்ஸை பாராட்ட வார்த்தையே இல்லை. லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் அவருடைய வழிகளை என்னைப் போல் சினிமாவில் சாதிக்க நினைக்கும் பலர் ஃபாலோ பண்ணுவார்கள் என்று நினைக்கிறேன்.

சமீபத்தில் ‘ஐரா’ பார்த்து வியந்து போனேன். டபுள் ஆக்‌ஷனில் வெளுத்து வாங்கியிருந்தாங்க. இரண்டு கெட்டப்புக்கு தேவைப்படும் வித்தியாசத்தை மிகச்சரியாகக் கொடுத்திருந்தாங்க. இரண்டு நயன்தாராவில் மாடர்ன் கேரக்டரை வெகுவாக ரசித்தேன். அப்புறம் அனுஷ்கா மேடத்தையும் பிடிக்கும். ‘பாகு பலி’யில் அவங்க நடிப்பை தேசமே பாராட்டியதே.”

“நடிக்க விரும்பும் வேடம்? ”

“பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் என்பதைத் தாண்டி, என்னால் எல்லா வகை வேடங்களிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் நடிக்கும் படங்களில் எனக்கு ஸ்கோப் இருக்கணும். இந்தியில் அனுஷ்கா சர்மா ஏற்று நடித்தது மாதிரியான வேடங்களில் நடிக்க ஆர்வமா இருக்கிறேன்.”

“பிடிச்ச நடிகர்?”

“தெலுங்கில் மகேஷ்பாபுகாரு பிடிக்கும். தமிழில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன். மலையாளத்தில் துல்கர் சல்மான் என்று பெரிய லிஸ்ட்டே இருக்கு. இவங்களோடு எல்லாம் ஒரு படத்திலாவது நடிக்கணும்னு ஆசை. பெரிய இயக்குநர்கள் படங்களிலும் நடிக்கணும்னு விரும்பறேன். எல்லாம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

“சினிமா தவிர வேறு என்ன உங்களுக்கு தெரியும்?”

“முறைப்படி நடனம் பயின்றவள் என்பதால் நடனம் தெரியும். ஏராளமான ஸ்டேஜ்ஷோவும் பண்ணியிருக்கிறேன். மார்ஷியல்ல் ஆர்ட்ஸ் தெரியும். நடிகை என்பதால் ஃபிட்னஸ் விஷயத்தில் கவனமா இருப்பேன். கட்டுப்பாடு இல்லாமல் நல்லா சாப்பிடுவேன். ஆனால் எல்லாமே அளவோடு இருக்கும். வெஜ், நான்வெஜ் இரண்டும் பிடிக்கும். அம்மா சமையல் என்றால் வெளுத்து வாங்குவேன். தமிழகத்தில் பில்டர் காப்பி, இட்லி, சட்னி, சாம்பார் பிடிக்கும்.”

- சுரேஷ்ராஜா