காதல் கடிதம் வந்ததா?



மின்னுவதெல்லாம் பொன்தான்-24

ஒரு படத்தில் யார் ஹீரோ, யார் ஹீரோயின், இயக்குவது யார், எந்த கம்பெனி படம் எதையும் பார்க்காமல் ‘இசை இளையராஜா’ என்ற பெயர் இருந்தால் பூஜை போட்ட அன்றே படம் விற்பனையாகிக் கொண்டிருந்த ஒரு காலக்கட்டம் அது. பிரசாத் ரெக்கார்டிங் தியேட்டர் வாசலில் சூட்கேஸ் நிறைய பணத்துடன் ராஜாவின் தரிசனத்துக்காக தயாரிப்பாளர்கள் வரிசைகட்டிக் கொண்டிருந்த நேரம்.

அவரின் இசை இல்லாமல் ஒரு படம் வெளிவந்தது. அது ‘சேரன் பாண்டியன்’. அதுவரை இளையராஜாவின் இசையை மட்டுமே தேடித்தேடி காதுக்குள் சேகரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்தப் பாடல்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கொடுத்தன. ‘காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா...’ என்ற பாடலைக் கேட்டு காதலிக்கு கடிதம் எழுதாதவர்கள் கூட எழுத ஆரம்பித்தார்கள்.

‘அன்னக்கிளி’யில்  இளையராஜா அறிமுகமானபோது எழுந்தமாதிரியான அதிர்வலைகளை ரசிகர்களுக்கு தன் முதல் படத்திலேயே தந்த அந்த இசையமைப்பாளர் சவுந்தர்யன்.தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பூம்புகார் கல்லூரியில் டிகிரி படித்தவருக்கு இசை மீத தீராத ஆர்வம். அதனால் இசைக்கருவிகள் இசைப்பதை முறைப்படி கற்றுக் கொண்டு சென்னைக்கு வந்தார். ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்பு தேடியபோது அவர் கடைசியாக ஏறியது சூப்பர் குட் ஆர்.பி.சௌவுத்ரியின் அலுவலகம்.  மேசையைத் தட்டி அவரிடம் பாட்டு போட்டுக் காட்ட, அப்போதுதான் செளத்ரி, ‘சேரன் பாண்டியன்’ படத்தை துவக்கி இருந்தார்.

“இந்தப் படத்தோட டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரை பாரு. அவருக்கு உன் பாட்டு பிடிச்சிருந்தா நீதான் இசை அமைப்பாளர்” என்று அனுப்பி வைத்தார். அவரும் பாடல்களை கேட்டுவிட்டு அங்கீகரித்தார். இசை அமைப்பாளர் ஆனார் சவுந்தர்யன்.‘சேரன் பாண்டியன்’ படத்தில் மொத்தம் 7 பாடல்கள். ஒரே படத்தில் மெலடி, துள்ளல், டூயட், சோகம் என அத்தனை உணர்வுகளையும் பாடலில் வடித்துத் தந்தார். இன்றைக்கு ஒலி்த்தாலும் நின்று கேட்க வைக்கிற பாடல்கள் அவை.

‘காதல் கடிதம்’ பாடலை பி.சுசீலாதான் பாடுவதாக இருந்தது. ஆனால் சவுந்தர்யன், இந்தப் பாடலுக்கு புதுசா ஒரு குரல் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து அவர் அறிமுகப்படுத்திய பாடகிதான் சொர்ணலதா. முதல் படத்திலேயே இப்படியான ஆளுமையும் சவுந்தர்ய
னிடம் இருந்தது.

இருக்கிற திறமையை எல்லாம் ஒரு படத்தில் இறக்கி வைத்த மாதிரி ஆகிப்போச்சு சவுந்தர்யன் இசை. பிறகு ‘புத்தம்புது பயணம்’, ‘முத்துக் குளிக்க வாரீங்
களா’, ‘முதல் சீதனம்’, ‘சிந்து நதி பூ’, ‘கோபுர தீபம்’ என்று வரிசையாக பல படங்களுக்கு இசை அமைத்தார். ‘சிந்து நதி பூ’வெல்லாம் செம ஹிட்டு. இருந்தாலும் சவுந்தர்யனுக்கு ஏனோ எதிர்பார்த்த வகையில் வாய்ப்புகள் தொடர்ச்சியாக அமையவில்லை. ஒரு கட்டத்தில் புதியதாக படங்கள் அமையவே இல்லை.

“இசையை உருவாக்கத் தெரிஞ்ச எனக்கு, அதை வியாபாரம் பண்ணத் தெரியலை. சினிமாவிலே வெகுளியாக, வெள்ளந்தியாக இருப்பது தவறு.  இதுதான் என்னோட பின்னடைவுகளுக்கு காரணம்” என்பார் சவுந்தர்யன். என்றாலும் என்றாவது ஒரு நாள் விட்ட இடத்தைப் பிடிப்பேன் என்று பிடிவாதமாக இன்னும் போராடிக்கொண்டேதான் இருக்கிறார்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்