டைரக்டர் ஆனார் கூத்து வாத்தியாரின் பேரன்!



‘‘இது வித்தியாசமான பீரியட் படம். பதினேழாம்  நூற்றாண்டில் ஆரம்பித்து எண்பதுகளில் முடிகிற கதை. இரண்டு ஊர்களுக்கான நீயா நானா மோதலை ரொம்பவே வித்தியாசமா சொல்லியிருக்கோம். ஜனரஞ்சகமான படங்களில் இருக்கும் காமெடி, ஆக்‌ஷன், எமோஷன் இதிலும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும்’’ என்று உற்சாகத்தோடு பேச ஆரம்பித்தார் ‘எங் மங் சங்’ படத்தின் இயக்குநர் அர்ஜுன்.

“படத்தோட தலைப்பு ஜாக்கிசான் டைட்டில் மாதிரி இருக்கே?”

“எங்க நாராயணன், மங்களம், சங்கர் ஆகிய இந்த மூவர்தான் கதையோட ஹைலைட் கேரக்டர்கள். இந்த மூன்று கேரக்டர் களின் பெயர் சுருக்கம்தான் ‘எங் மங் சங்’. எங்க நாராயணனாக பிரபு தேவா, மங்களமாக ஆர்.ஜே.பாலாஜி, சங்கராக அஸ்வின் நடிக்கிறார்கள். அதுமட்டுமில்ல, இப்போதெல்லாம் ஜனங்க போஸ்டரைப் பார்க்கும் போதே அது எந்த மாதிரியான படம் என்று யூகித்துவிடுகிறார்கள். எங்க படத்தோட தலைப்பை நாங்க ப்ளஸ்சாகத் தான் பார்க்கிறோம்.”

“என்ன சொல்கிறார் உங்க ஹீரோ பிரபுதேவா?”

“70, 80 களில் புரூஸ்லீ, ஜெட்லீ படங்கள் தமிழில் டப் பண்ணி வெளியிடுவார்கள். அந்த மாதிரி இந்தக் கதைக்கு குங்பூ சண்டை பண்ணுமளவுக்கு உடல் வாகு உள்ள ஹீரோ தேவைப்பட்டார். கிட்டத்தட்ட அப்படி உடல்வாகு உள்ளவராக பிரபுதேவா இருந்தார். படத்துல பிரபுதேவா குங்பூ மாஸ்டராக வர்றார். அவருடைய கேரக்டரில் காமெடி, ஆக்‌ஷன், எமோஷன்னல் எல்லாம் கலந்திருக்கும்.

இயக்குநரின் நடிகராக வெளிப் படுத்துவதுதான் பிரபுதேவாவின் ஸ்பெஷல். ஆனால் அவருக்கு ஸ்கிப்ரிட் தெளிவாக இருக்க வேண்டும். காட்சியைப் பற்றி முழுமையாக டீடெயில் பண்ணணும். அவருக்கு சினிமாவைப் பற்றி எல்லாம் தெரியும். அந்த வகையில் சீன்ல சின்ன சொதப்பல் இருந்தாலும் நடிக்கமாட்டார். சின்ன தப்பு தெரிந்தாலும் அதைக் கண்டுபிடித்து முடிந்தளவுக்கு அந்த காட்சியை மெருகேற்ற உதவி செய்வார். பேப்பரில் 100 சதவீதம் ரிசல்ட் இருந்தால் அதை ஸ்பாட்டுக்கு வந்து 200 சதவிகிதமா மாற்றிவிடுவார்.”

“லக்ஷ்மி மேனன்?”

“அவங்களுக்கும் இது வித்தியாசமான படம். இந்தப் படத்துக்கு முன் நிறைய கிராமத்து வேடம் பண்ணியிருக்கிறார். அதெல்லாம் இப்போ கரண்ட்ல இருக்கிற கேரக்டர் மாதிரி இருக்கும். இது 80களில் நடக்கும் கதை என்பதால் ஃப்ரெஷ் லுக்லே லக்ஷ்மி மேனனைப் பார்க்கலாம்.

அந்தக் காலத்தில் ஒரு வீட்ல பெண்பிள்ளை இருந்தால் ‘உன்னை முறை மாமனுக்குத் தான் கட்டி வைக்கப் போறோம்’ என்று சொல்லி வளர்ப்பார்கள். அந்த மாதிரி இதில் பிரபுதேவாவுக்காகவே அவங்க வீட்ல லக்ஷ்மி மேனனை வளர்ப்பாங்க. அவரும் கேரக்டரை உள்வாங்கி பண்ணினார். கேரக்டருக்காகக் கணிசமாக உடல் எடையைக் குறைத்தார். அதைப் படம் பார்க்கும்போது ரசிகர்களும் என்ஜாய் பண்ணுவாங்க.

ஒரு படத்தில் ஹீரோயின் இருக்கணும் என்ற டெம்ப்ளேட் கேரக்டராக நிச்சயம் இருக்கமாட்டார். அவரைச் சுற்றி நிறைய திருப்பங்கள் இருக்கும்.”
“தங்கர்பச்சானை அவருடைய படங்களில் மட்டும்தானே பார்க்க முடியும்?”

“கிளைமாக்ஸ்லே எமோஷனல் ப்ளாக் இருக்கும். அதைப் பண்ணுவதற்கு பிரகாஷ்ராஜ் மாதிரி சிலரை செலக்ட் பண்ணி வைத்திருந்தோம். பிரபுதேவா சார்தான் அப்பா கேரக்டருக்கு தங்கர்பச்சான் பொருத்தமா இருப்பார் என்று சொல்லி தங்கர்பச்சான் சாரை அறிமுகம் செய்துவைத்தார்.  கதையே அவரை வைத்துதான் நகரும். ஒரு அப்பாவுடைய ஆசை நிறைவேறியதா என்பதுதான் படம். அந்த வகையில் படத்தில்அவருக்கு வலுவான கேரக்டர். பிரமாதமா பண்ணியிருக்கிறார்.”

“ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாகவே ஆயிட்டாரு...”“இது, ‘எல்.கே.ஜி’க்கு முன்னாடியே கமிட் ஆன படம். ‘எல்.கே.ஜி’ ஹிட்டுக்குப் பிறகு அவருடைய ரேஞ்சே வேற லெவல். காமெடி நடிகராக அவரைப் பார்த்தபோது இருந்த அதே மதிப்பு, மரியாதையைத்தான் இப்போதும் கடைப்பிடிக்கிறார். அவர் இதற்குமுன் பண்ணிய படங்களில் டயலாக் ஓரியண்ட்டட் காமெடி பண்ணியிருக்கிறார். இதுல அப்படியொரு அவசியம் இல்லை. படத்துல சிச்சுவேஷன் காமெடி அதிகம். அப்படி   சிச்சுவேஷனுக்கு ஏற்ப ரியாக்ட் பண்ணும்போது முகத்தைப் பார்த்தாலே சிரிப்பு வரும். தவிர   முனீஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோரும் இருக்கிறார்கள்.”

“இதுலே ‘பாகுபலி’ வில்லனை எப்படி மடக்கினீர்கள்?”

“அவரு எங்களுக்கு பெரிய பிளஸ். ‘பாகுபலி‘க்குப் பிறகு பிரபாகர் தெலுங்கில் செம பிஸி. தமிழில் நடிக்கணும் என்பது அவருடைய விருப்பம். ‘பாகுபலி’க்குப் பிறகு இந்தப் படம் தமிழில் லேண்ட்மார்க் படமாக அமையும் என்று நினைத்து கமிட்டானார். நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகப் பண்ணியிருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு அவரை தொடர்ந்து வில்லனா பார்க்கலாம்.”

“பீரியட் படத்துக்கு டெக்னீஷியன்ஸ் பங்கு முக்கியமாச்சே?”

“ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். சீனியர் கேமராமேன். படப்பிடிப்பு துவங்கிய முதல் பத்து நாட்களில் பிரபுதேவா போர்ஷன் இல்லை. அந்த நாட்களில் குருதேவின் சப்போர்ட் பெரியளவில் உதவியாக இருந்தது. நான் சீனை ஆர்டர்படி எடுக்க நினைத்தபோது எந்த ஷாட்டை  எப்போது எப்படி எடுத்தால் காட்சி சிறப்பாக வரும் என்பதை ப்ராக்டிக்கலா சொல்லிக் கொடுத்தார்.

ஒரு வேலையை கஷ்டப்பட்டு செய்யாமல் இஷ்டப்பட்டு எப்படி எளிமையாகச் செய்யலாம் என்ற அவருடைய ஸ்டைல் எனக்குப் பிடித்திருந்தது. அப்படி இரண்டு மணி நேரத்துல முடிக்கிற வேலையை ஒரு மணி நேரத்துல பண்ணிக் கொடுத்தார். எண்பதுகள் கதை என்பதால் படத்துக்கான டோன் எப்படி இருக்க வேண்டும், காஸ்டியூம்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்று எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தி படத்தை வேற லெவலுக்கு கொண்டு போனார்.

அம்ரீஷ் மியூசிக் பண்ணியிருக்கிறார். அவர் இசையமைத்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ பாடல்கள் எனக்கு பிடித்திருந்தது. அப்போதே அவர்தான் என் படத்துக்கு மியூசிக் டைரக்டர் என்று முடிவு பண்ணி வைத்திருந்தேன். முதல் முறை கேட்கும்போது மனதைத்தொடுமளவுக்கு பாடல்கள் கொடுத்தார். ஒரு நாளில் ஒரு பாடல் கிடைத்துவிடும். அவருடைய ஸ்டூடியோ அல்லது பிரபுதேவா சார் வீடு என்று எதாவது ஒரு இடத்தில் பாடல் கம்போஸிங் நடக்கும்.

டெக்னீஷியன்களில் முக்கியமா பைட் மாஸ்டர் சில்வா பற்றி சொல்ல வேண்டும். அவரை படத்தோட இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம். படத்துல மொத்தம் நான்கு ஆக்‌ஷன் ப்ளாக் வருது. எல்லாமே கதையோடு கலந்திருக்கும். பறத்தல், துரத்தல் பைட் இதுல இருக்காது. ஒவ்வொரு பைட் சீனிலும் ஒரு ஐடியா இருக்கும். லாஜிக் மிஸ் எந்த இடத்திலும் இருக்காது. குறிப்பா க்ளைமாக்ஸ் பைட் அல்டிமேட்டா இருக்கும். அந்த பைட் சீனுக்காக பிரபுதேவா ஒரு வாரம் ரிகர்சல் பண்ணினார்.

தயாரிப்பாளர்கள் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் இருவரும் சினிமா பாரம்பரியம் உள்ளவர்கள். அதனாலேயே அவர்களுடைய திட்டமிடல் சரியாக இருக்கும். இதுஃபேன்டஸி கதை என்பதால் செலவைப் பற்றி கவலைப்படாமல் செலவுசெய்திருக்கிறார்கள். படத்தின் ஒரு பகுதியை சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் எடுத்தோம். படத்துல பதினைந்து நிமிடம் வரும். ஆனால் அதற்கு பெரிய செலவை செய்திருக்கிறார்கள்.”
“நீங்க சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”

“சொந்த ஊர் நெய்வேலி. அப்பா நிலக்கரி நிறுவன ஊழியர். சினிமா பின்னணி எதுவும் இல்லை. தாத்தா கூத்து வாத்தியார். வீட்ல சில சமயம் ஒத்திகை நடக்கும். அதுதான் எனக்கும் கலைத்துறைக்குமான சின்ன தொடர்பு. கல்லூரிக்குப் பிறகு சினிமாவில் ட்ரை பண்ணப்போறேன் என்று சொன்னதும், அப்பா எம்.சி.ஏ. படிக்கச் சொன்னார்.

அதுக்கு அவர் சொன்ன காரணம்... சினிமா கைவிட்டாலும் படிப்பு உதவியாக இருக்கும் என்றார்.படிப்பைக் காரணம் காண்பித்து சென்னைக்கு வந்தேன். எம்.சி.ஏ. படிக்கும்போதே சினிமா தொடர்புகளை வளர்த்துக்கொண்டேன். என்னுடைய படிப்புக்கு ஐ.டி.நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைக்கான ஆஃபர் வந்தது, இண்டர்வியூ அட்டண்ட் பண்ணினால் மனம் மாறிவிடும் என்பதால் படிப்பு முடிந்ததும் சினிமாவுக்கு வந்துவிட்டேன்.
 
‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’, ‘ராட்சசன்’ படத்தில  ஸ்கிப்ரிட் ஒர்க் என்று மொத்தமே நான்கு படங்கள்லதான் வேலை பார்த்தேன். வாசன் விஷுவல் வென்ச்சர்ஸிடம் கதை சொன்னதும் ஓ.கே.பண்ணிவிட்டார்கள். இப்போதான் ஆரம்பித்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள ஃபைனல் வேலைகளை முடிக்கிற கட்டத்துக்கு வந்துள்ளோம். இது என்னுடைய படம் என்று சொல்வதை விட எங்க டீமோட படம் என்று சொல்லு மளவுக்கு எல்லாரும் அவங்களுடைய தி பெஸ்ட் கொடுத்திருக்கிறார்கள்.”

- சுரேஷ்ராஜா