விஜய் ஆண்டனிக்கு இளையராஜா இசை!



விஜய் ஆண்டனி என்றாலே பொதுவாக திரில்லர், கிரைம், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன் என்று கதையை எதிர்ப்பார்ப்பார்கள் ரசிகர்கள். ‘பிச்சைக்காரன்’ படத்தில் அந்த இமேஜையெல்லாம் உடைத்து சென்டிமென்டில் பின்னிப் பெடல் எடுத்தார். அதே ரூட் பிடித்து அவர் நடித்திருக்கும் படம்தான் ‘தமிழரசன்’.

குடும்பம், மனைவி, மகன் என்று குடும்ப உணர்வுகளை சொல்லும் கதை. இதற்கு முன்பு வித்தியாசமான பல பாத்திரங்களில் விஜய் ஆண்டனி நடித்திருந்தாலும்  இந்தப் படத்தில் மாறுபட்ட மாஸ் ஹீரோவாக தெரிவார். வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்த பெரிய ஹீரோ பண்ணக் கூடிய ஃபுல் மீல்ஸ் படத்தில் விஜய் ஆண்டனி நடித்திருப்பது சம்திங் ஸ்பெஷல் தான்.

“போன தீபாவளி நேரத்திலதான் கதைய சொன்னேன். இந்த கதை அவர கவரும் படியா இருந்ததால முதல் பாதி கதைய கேட்டதுமே இந்த கதைய நானே பண்றேன்னு சொன்னாரு. ஓக்கே சொன்ன ஒரு மாதத்திலே பட வேலைகளை ஆரம்பித்துவிட்டோம்.  சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் இன்று மக்கள் போராட வேண்டி இருக்கு. அப்படி ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் ஹீரோ அத எதிர்த்து போராடுகிறார்.

சில பிரச்சனைகள் வரும்போது எல்லாம் நாம் பெரும்பாலும் நமக்கு எதுக்குப்பா வம்பு என்று கடந்துவிடுவோம். அப்படி கடந்து செல்லாமல் அந்த பிரச்சனையை எதிர்த்து நிற்கும் போது என்ன நடக்கும் என்பதற்கான பதில் படம் பார்க்கும் போது கிடைக்கும். மற்றபடி நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சனையை பற்றி பேச போகிறது. அது சஸ்பென்ஸ்” என்கிறார் இயக்குநர் பாபு யோகேஷ்வரன்.

“எதை சொல்லப் போகிறார் இந்த தமிழசரன்?”

“முதலில் விஜய் ஆண்டனியை மனதில் வைத்து இந்தக் கதையை எழுதவில்லை. புது முக நாயகனுக்கும் எழுதல. இந்த கதைய மக்கள் கிட்ட கொண்டு போக பொருத்தமாக நான்கு ஹீரோ இருந்தாங்க. முதல்ல விஜய் ஆண்டனி சார்கிட்ட இந்த கதை சொன்னப்ப அவருக்கு கதை பிடிச்சிருந்தது.

விஜய் ஆண்டனி சார் இயக்குநர்கள் சொல்லுவதை கேட்டு கொள்பவர். அவரோடு வேலை பார்க்கும் போது நமக்கும் எனர்ஜி லெவல் கூடும். ஹீரோயிசம் என்று எதுவும் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஹீரோ. படப்பிடிப்புக்கு வரும்போது எல்லாம் இசையமைப்பாளர், எடிட்டர் என்பதை எல்லாம் தாண்டி நடிகராக மட்டுமே வருவார்.”

“ரம்யா நம்பீசன்?”

“விஜய் ஆண்டனிக்கு மிக பொருத்தமாக இருக்கும் ரம்யா நம்பீசனின் நடிப்பு  அவரின் எல்லா படத்தை விடவும் ஒரு படி அதிகமாகவே இருக்கும். எல்லோரையும் கவரக் கூடியப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியோடு தொடருமளவுக்கு இந்த ஜோடி பேசப்படும்.”
“சுரேஷ் கோபி நடிப்புக்கு டூ விட்டிருந்தாரே?”

“மலையாளத்திலும் எந்த படமும் பண்ணாமல் நடிப்பே வேண்டாம் என்று கேரளாவில் இருந்தவரை சந்தித்து கதை சொன்னேன். நான்கு வருடமாக நடிக்காமல் இருந்தவரை இந்த கதை நடிக்க சம்மதிக்க வைத்தது. சின்ன விசயங்களில் கூட அர்ப்பணிப்போடு தன் நடிப்பை வெளிப்படுத்தினார்.  அவருடைய பாத்திரத்தை பார்த்து ஒவ்வொரு நடிகருக்கும் தன் கேரியரில் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும்.

மற்றபடி ஸ்டைலான கேரக்டர்ல சோனு சூட் ஆன்டி ஹீரோவா பண்ணி இருக்காரு. இயக்குநர் மோகன் ராஜா மகன் பிரணவ் முக்கியமான ஒரு ரோல் பண்ணி இருக்காரு.  யோகி பாபு, ரோபோ சங்கர், முனிஸ்காந்த்னு காமெடி நடிகர்கள் இருந்தாலும் கதைக்கு தேவையான இடத்தில மட்டும் காமெடி பண்ணி இருக்காங்க.”

“இளையராஜா?”

“படத்தில் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுமே ஜாம்பவான்கள் தான். ஆனா ராஜா சார் அல்டிமெட். நீண்ட நாளுக்கு பிறகு எமோஷனல் திரில்லர் படத்துக்கு இசையமைக்கிறார். நான் மீடியாவில் இருந்து வந்தாலும் அவரைப் பொறுத்தவரை நான் புது முகம்தான். இந்தப் படத்தோட இசை நீண்ட காலத்துக்கு பேசப்படும்.

பழைய ராஜாவை கொண்டாடும் விதமா படத்தோட பின்னணி இசை இருக்கும். பழனி பாரதியும் என்னோட அசோசியேட் ஜெயராமும் பாடல்கள் எழுதி இருக்காங்க. ராஜா சார் முப்பது செகண்ட்ல ஒரு பாட்டுக்கு ட்யூன் கொடுத்தாரு. முப்பது நிமிடங்களில் மொத்த பாடலுக்கும் கம்போசிங் முடிஞ்சது. எனக்கான சுதந்திரத்தை ராஜா சார் எனக்கு கொடுத்தாரு. இசையில் மட்டும் இல்லாம எல்லாவற்றிலும் பெஸ்ட்டா இருக்கணும்னு கலைஞர்களையும், டெக்னீஷியன்களையும் தேடிப் போனேன்”

“மத்த டெக்னீஷியன்ஸ்?”

“ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் என் இருபது வருடகால நண்பர். அவரோட பிரசன்டேஷன்ல புதுசா ஒரு கலர் டோன் கிடைச்சிருக்கு. இந்த கதைய அவரு பண்ணா நல்லா இருக்கும்னு நினைச்சேன். மிலன் கலை இயக்குநராகவும். அனல் அரசு ஸ்டண்டையும் கவனித்து வராங்க.
எஸ்.என்.எஸ் மூவீஸ் கௌசல்யா ராணி படத்த தயாரிக்கிறாங்க. எங்க மேல உள்ள நம்பிக்கையாலும், கதையின் மேல உள்ள நம்பிக்கை காரணமாகவும் படத்தோட பட்ஜெட்ட விட அதிகமாவே செலவு செய்யிறாங்க.

ஆர்ப்பாட்டம் நடப்பது போல் ஒரு காட்சியை ஆயிரம் மாணவர்களை வைத்து நான்கு கேமராவில் படம் பிடித்தோம். சில காட்சிகளை வட கிழக்கு மாநிலங்களிலும் படமாக்கியுள்ளோம். படம் நல்ல முறையில் வர வேண்டும் என்று பாசிட்டிவ் எனர்ஜியோடு வேலை செய்பவர்கள் இப்படத்தில் இருப்பதால் என்னால் உற்சாகத்தோடு வேலை பார்க்க முடிகிறது.”

- சுரேஷ்ராஜா