முட்டை கதிர் இவர்தான்!சமீபத்தில் வெளிவந்த ‘தாதா 87’ படத்தில் நாயகனின் நண்பராக முட்டை என்ற கேரக்டரில் நடித்து காமெடியில் ஸ்கோர் பண்ணியவர் கதிர். இவர் சின்னத்திரை நேயர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான். விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தவரை படப்பிடிப்பு இடைவேளையில் சந்தித்தோம்.

‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சது பி.சி.ஏ. சின்ன வயதிலிருந்து சினிமா மீது பேஷன் அதிகம். எனக்கு மிமிக்ரி நல்லா வரும். அதுதான் நான் சின்னத்திரைக்கும் வண்ணத்திரைக்கும் வருவதற்கு காரணமாக அமைந்தது.ஆதித்யா சேனலில் ஒளிபரப்பான ‘காமெடிக்கு நான் கியாரண்டி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பைக் கொடுத்தார்கள்.

இப்போ ‘ஒரு ஜோக் சொல்லட்டுமா’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன். என்னுடைய நிகழ்ச்சியில் யானை ஜோக் சொல்வதுதான் ஹைலைட். அந்த நிகழ்ச்சியை குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி. சின்னத்திரையிலிருந்து அடுத்தக் கட்ட நகர்வாக சினிமாவில் வாய்ப்பு தேடினேன். ‘மதுரைவீரன்’, ‘உள்குத்து’, சக்கைப் போடு போடு ராஜா’ உட்பட ஏராளமான படங்களில் அக்கடா துக்கடா என்றில்லாமல் கெளரவமான வேடம் கிடைத்தது.

சமீபத்தில் வெளிவந்த ‘தாதா 87’ படத்தில் நாயகனின் நண்பனாக படம் முழுக்க நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘முட்டை’ என்ற என்னுடைய கேரக்டரை ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டு பாராட்டினார்கள். இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்தப் படம் துவங்கும் போது நானாகப் போய் வாய்ப்பு கேட்டேன். சாரும் படப்பிடிப்பு சமயத்தில் தகவல் கொடுக்கிறேன் என்று சொல்லி மறக்காமல் என்னை அழைத்து வாய்ப்பு கொடுத்தார்.

சாருஹாசன் சார் லெஜண்ட். அவரிடம் சினிமாவைப் பற்றிய நுட்பங்களை நிறைய கற்றுக் கொண்டேன். எந்தக் காட்சிக்கு எப்படி ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து சரியாக ரியாக்‌ஷன் கொடுப்பார். பொதுவா வயதில் மூத்தவர்களுக்கு ஞாபக சக்தி குறைவாகக் காணப்படும். ஆனால் சாரு ஐயா டயலாக்கை ஞாபகம் வைத்து பேசுவார். தன்னுடைய காட்சி முடிந்துவிட்டாலும் ஒய்வு எடுக்காமல் ஸ்பாட்லயே இருப்பார். இன்னொரு முக்கியமான விஷயம், நேரம் தவறாமல் படப்பிடிப்புக்கு வந்துவிடுவார்.

தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கும் ‘தமிழரசன்’, சிவகார்த்திகேயன் நடிப்பில் மித்ரன் இயக்கும் படம் உட்பட கைவசம் பத்து விரல்கள் உயர்த்துமளவுக்கு படங்கள் இல்லையென்றாலும் ஐந்து விரல்கள் உயர்த்துமளவுக்கு படங்கள் உள்ளது.

சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு யாரும் ரோல் மாடல் கிடையாது. சக நடிகர்கள் எல்லாரையும் என்னுடைய ரோல் மாடலாகப் பார்க்கிறேன். எல்லாரிடமும் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்கிறேன். அதுக்காகவே படப்பிடிப்பு சமயத்தில் என் ஷாட் முடிந்தும் ஸ்பாட்டை விட்டு நகராமல் நடப்பவைகளை உன்னிப்பாக கவனிப்பேன்.

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் உதவும் கரங்கள் வேண்டும். கடவுள் புண்ணியத்தில் விஜய் ஆண்டனி, யோகிபாபு போன்ற நல்ல உள்ளங்கள் சப்போர்ட் பண்ணுகிறார்கள். என்னுடைய சின்னத்திரை ஷோ பார்த்துவிட்டுத்தான் விஜய் ஆண்டனி சார் ‘திமிருபுடிச்சவன்’ வாய்ப்பை வழங்கினார். யோகி பாபு நாயகனாக நடிக்கும் ‘ஜாம்பி’ படத்தில் முக்கியமான வேடம் கிடைத்தது.

என்னுடைய அடையாளம் காமெடி பண்ணுவது என்றாலும் திறமையை வெளிப்படுத்தக்கூடிய எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் பண்ணுவேன். என் தொழில் சினிமா. அந்த வகையில் எனக்கு வேலை வேண்டும்” என்று மடமடவென்று பேசினார் கதிர்.

- எஸ்