அம்மாவின் கனவை நனவாக்க நடிகன் ஆன அரசு!



சமீபத்தில் வெளி வந்த ‘பேய் எல்லாம் பாவம்’ படத்தின் மூலம் ஹீரோவாக புரோமோட்டானவர் அரசு. அவரின் சினிமாப் பயணத்தைப் பற்றிக் கேட்டோம்.‘‘அப்பா, அம்மா வைத்த பெயர் பேரரசன். செல்லமா அரசு. சொந்த ஊர் சேலம். அப்பா நடராஜன் மத்திய அரசு ஊழியர். அம்மா விஜயலட்சுமி.

அடிப்படையில் நான் நேஷனல் ஸ்விம்மர். ஒரு பயிற்சியின் போது காலில் அடிபட்டதால் விளையாட்டுக்கு குட்பை சொல்லவேண்டியதாகிவிட்டது. படிப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது மறைந்த என்னுடைய அம்மாவின் கனவு.
சின்ன வயதில் ரஜினி மாதிரி வரணும் என்று அடிக்கடி சொல்வேணாம். அதுக்காகவே அம்மா என்னை சினிமா நாலெஜ்ஜோடு வளர்த்தாங்க. நிறையபேர் சினிமா வுக்கு போனால் உருப்படமாட்டான் என்று சொன்ன போது அம்மாதான் என்னை உற்சாகப்படுத்தி சினிமாவில் சான்ஸ் தேட உதவி செய்தார். எனக்காக நிறைய செலவுகளை யும் செய்தார் அப்பாவும் எனக் காக நிறைய தியாகங்கள் பண்ணியுள்ளார்.

சினிமா கனவுகளோடு சென்னை வந்ததும் கலாதர் மாஸ்டரிடம் நடிப்பு, நடனம் என்று சினிமாவுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை கற்றுக் கொண்டேன்.என்னுடைய முதல் படம் ‘ஐவர்’. அந்தப் படத்துக்குப் பிறகு சினிமாவில் ஏற்பட்ட சில கசப்பான அனுபத்தால் சிறிது தேக்க நிலை ஏற்பட்டது.

வாய்ப்பு தேடும் கால கட்டத்தில் அம்மா என்னுடன் ஆடிஷனுக்கு வருவார். சில இடங்களில் செலக்ட்டாவேன். சில பல காரணங்களால் தடை வரும். நடுவுல ‘வல்லதேசம்’, ‘என்னை அறிந்தால்’  போன்ற படங்களில் பண்ணினேன். ‘பேய் எல்லாம் பாவம்’ படம் என்னை ஹீரோவாக அடையாளப்படுத்தியது.

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் சாருடன் நடித்தது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.  அவரிடம் சினிமா மட்டுமில்லாமல் வாழ்க்கைக்கான பாடத்தையும் கற்றுக் கொண்டேன். வாழ்க்கையில் எவ்வளவு உயரத்துக்கு போனாலும் அம்மா, அப்பாவை மறந்துடாதே என்று அவர் சொன்னது எப்போதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அஜித் சார் பெரிய ஹீரோவாக இருந்தாலும் செட்ல முதல் ஆளாக விஷ் பண்ணுவார். ஒருமுறை என் தோளின் மீது யாரோ கை போடுவது தெரிந்ததும் கையை கேஷுவலாக உதறிவிட்டு திரும்பிப் பார்க்கும் போது அஜித் சார் இருந்தார். பதறிப் போய் அவரிடம் ‘சாரி’ கேட்டேன். அவர் கூலா விஷ் பண்ணிட்டு மேக்கப் ரூமுக்கு போய்விட்டார். அதுதான் ‘தல’.

‘ஓலம்’ குறும்படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது வாங்கியது சினிமாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. விருது கொடுத்த தனஞ்செயன் சார் வெகுவாகப் பாராட்டினார்.தற்போது பிரபல இயக்குநர் படத்தில் முக்கியமான ரோல் பண்றேன். மலையாளம்,  துளு ஆகிய மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சினிமா தவிர, ஆதரவற்ற குழந்தைகளுக்காக என்னுடைய சொந்த செலவில் ஆசிரமம் நடத்துகிறேன். என் சம்பாத்தியம் எல்லாம் என்னுடைய ஆசிரமக் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்துக்காக அர்ப்பணித்து வருகிறேன்.

ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கமாட்டேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள மாதிரி சின்ன ரோல் கிடைத்தாலும் நடிப்பேன். நல்ல நடிகனாக வரணும் என்பது என்னுடைய  அம்மா ஆசை. அதை நிறைவேற்றும் விதமா என்னுடைய சினிமா பயணம் இருக்கும்’’ என்றார்.

- ரா