ஹனிமூனுக்கு போன சாந்தினி!



‘சித்து +2’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தினி. அக்மார்க் தமிழ்ப் பெண்ணான இவருக்கு இண்டஸ்ட்ரியில் நல்ல பெயர் இருப்பதால் எப்போதும் கை வசம் கணிசமான படங்களை வைத்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகும் மோஸ்ட் வாண்டட் நடிகை என்று பெயர் பெற்றுள்ளார். சாந்தினியின் அழகிய முகமும், வசீகரமான புன்சிரிப்பும், வெளிப்படையான பேச்சும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ன. இதனால் திரு மணத்துக்குப் பிறகும் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

அவருடன் பேசினோம்.“தமிழ் சினிமாவுலே இப்போ உங்க காட்லேதான் அடைமழை பொழிகிறதாமே?”

“இப்போ பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் அறிமுகமானப்போ எனக்கான வரவேற்பு குறைவாகத்தான் இருந்தது. ஆனால், இப்போ என் திறமை மீது நம்பிக்கை வைத்து நல்ல ஸ்கிரிப்ட் வருகிறது. நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.”

“திருமண வாழ்க்கை எப்படி போகுது?”

“ரொம்ப நல்லா இருக்கு. சில சமயம் நான் திருமணமான பெண்ணா என்று கேட்குமளவுக்கு இருக்கும். காதல் கணவர் கொடுக்கும் சுதந்திரத்தால் திருமணமான ஃபீலே வரமாட்டேங்குது.”

“ஹனீமுனுக்கு எங்கே போயிருந்தீங்க?”

“பாரீஸ், சுவீஸ், பெல்ஜியம், ஆம்ஸ்டர்டாம் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று இருந்தோம். ஹனிமூனை அங்குதான் கொண்டாடினோம். புத்தாண்டு அன்று பாரீஸில் இருந்தோம். டிஸ்னியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை மறக்க முடியாது. டிஸ்னி வேறு லெவல் என்று சொல்லலாம். ஈபிள் டவர் உட்பட ஒரு இடம் விடாமல் சுற்றினோம். பெல்ஜியம் அமைதியான இடம். நிறைய சாக்லேட் வாங்கினோம். ஆம்ஸ்டர்டாம் பார்ப்பதற்கு அழகான ஊர். பஸ், டிராம் என்று எல்லா டிரான்ஸ்போர்ட்டிலும் ஊர் சுற்றியது த்ரில்லாக இருந்தது. படப்பிடிப்பில் பிஸியாக இருந்த எனக்கு ஹனிமூன் ட்ரிப் ரிலாக்ஸ் கொடுத்தது.”

“காதல் கணவர் நந்தா என்ன சொல்கிறார்?”

“எங்களோடது ஒன்பது வருட லவ். பாய் ஃப்ரெண்டா இருந்தபோது எப்படி என் மீது கேர் எடுத்தாரோ அதைவிட பல மடங்கு இப்போது கேர் எடுத்துக் கொள்கிறார். என்னுடைய கேரியருக்கு சப்போர்ட் பண்ணுகிறார். எல்லோரும் கல்யாணத்துக்குப் பிறகு நடிப்பது கஷ்டமாக இருக்கும் என்றார்கள். ஆனால் எனக்கு அப்படியொரு சூழ்நிலை ஏற்படவில்லை. எங்களைப் பொறுத்தவரை எல்லாமே சுமுகமாக நடக்கிறது.

அவரும் படப்பிடிப்புக்கு போகிறார். ஆனால் குடும்ப நிர்வாகம் திட்டமிடலோடு நடக்கிறது. நான் செல்லமா வளர்ந்த பொண்ணு. அம்மா, அப்பா ஸ்தானத்தில் இருந்து என்னை கணவர்தான் கண்கலங்காம பார்த்துக் கொள்கிறார். நல்ல கணவர் அமைந்ததால் இல்லற வாழ்வின் இனிமையை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பீர்களா?”

“திருமணம் நடந்த அடுத்த நாளே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இண்டஸ்ட்ரியிலும் என்னை திருமணமான  பெண்ணாகப் பார்க்கவில்லை. வழக்கம் போல் என்னைத் தேடி நல்ல படங்கள் வருகிறது. சமீபத்தில் கூட பிரபல வெற்றிப் பட இயக்குநர் படத்தில் சிங்கிள் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளேன். அதற்கான அறிவிப்பு சிக்கீரத்தில் வெளிவரவுள்ளது. திருமணத்துக்கு முன் என்னை எப்படி பார்த்தீர்களோ அதே சாந்தினியை தொடர்ந்து பார்க்கலாம். நடிப்புக்கு முழுக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.”

“திருமதி சாந்தினியாக நடிக்கும் போது நிபந்தனைகள் ஏதாவது உண்டா?”

“குறிப்பாக எந்த கண்டிஷனும் இல்லை. திருமணத்துக்கு முன்னும் சரி, இப்போதும் சரி எப்போதும் எனக்கு நல்ல கேரக்டர்ஸ்தான் கிடைத்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு வேறு மாதிரி நடிப்பேன் என்று எந்த நிபந்தனையும் இல்லை. ஆக்டராக இருந்த நான் இப்போது ஹோம் மேக்கராக மாறினாலும் சினிமாவை எப்போதும் போல்தான் பார்க்கிறேன்.

ஆடியன்ஸுக்கு ஒருவேளை நான் திருமணமானவர் என்று தெரிந்தாலும் எனக்கு அப்படியொரு ஃபீல் வரவில்லை. எங்கள் காதல் நீண்ட நாள் காதல் என்பதால் அப்போது எனக்கு என்ன சுதந்திரம் இருந்ததோ அதே சுதந்திரம் இப்போதும் கிடைத்துள்ளது. என்னுடைய புரஃபஷன் சினிமா என்பதால் என்னைத் தேடி வரும் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வேன்.”

“கைவசம் உள்ள படங்கள்?”

“பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. ‘சதுரங்க வேட்டை-2’, அரவிந்தசாமியுடன் ‘வணங்காமுடி’, ‘காதல் முன்னேற்ற கழகம்’, ‘அமீர் தயாரிப்பில் ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘நான் அவளை சந்தித்தபோது’, ‘கறிச்சோறு’, ‘மைடியர் லிசா’, ‘பற’, ‘பெட்டிக்கடை’ன்னு நிறைய. ‘கறிச்சோறு’ படத்தில் முதன் முறையா இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். அமீர் சார் பேனரில் நடிக்கும் படத்திலும் கனமான ரோல்.”

“அரவிந்தசாமியுடன் நடித்துள்ளீர்கள். அவருடன் நடித்த அனுபவம் பற்றி?”

“மிகச் சிறந்த மனிதர். அவருடைய நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவருடன் நடித்ததற்காக என்னை ஆசீர்வதிக்கப்பட்டவளாகக் கருதுகிறேன். என்னுடைய திருமணத்துக்கு அழைக்கும் போது அவர் அமெரிக்காவில் இருந்தார். அழைப்பிதழ் கொடுக்க முடியாத சூழல் இருந்தது. மெசேஜ் மட்டுமே பண்ணினேன். திருமணத்துக்கு முதல் கெஸ்ட்டா வந்து என்னை வாழ்த்தினார்.”

“ஆக்‌ஷன் ரோல் பண்ணுவீங்களா?”

“ஒரு ரசிகையாக எல்லா வகையான படமும் எனக்கு பிடிக்கும். ஸ்கூல் நாட்களில் அத்லெடிக்கைவிட டான்ஸ், டிராமா ஆகியவற்றில் தான் ஆர்வம் அதிகம். காக்கி உடையில் நடிக்கணும் என்பது எல்லா நடிகர், நடிகைகளுக்குள்ளும் இருக்கும் ஆசை. எனக்கும் அப்படியொரு ஆசை இருக்கு. சில வாய்ப்பு வந்தது. என்னைப் பொறுத்தவரை சின்ன பட்ஜெட் படமாக இல்லாமல் சரியான படத்தில் பண்ணணும்னு நினைக்கிறேன்.”
“நீங்க அஜீத்தோட தீவிர ரசிகையாமே?”

“2007ல், நான் +2 முடித்திருந்த நேரம் தல நடிச்ச ‘பில்லா’ வெளியாகி இருந்தது. அந்தப் படத்தில் தல, யுவனின் அந்த தீம் மியூசிக்கில் அசத்தலாக நடந்து வரும் சீனைப் பார்த்துதான் அவரது தீவிர ரசிகையானேன்.”“உங்கள் அழகு ரகசியம்?”“விரும்பியவைகளைச் சாப்பிடுவேன். ஆனால் எல்லாமே ஒரு அளவோடு இருக்கும். சிறிது நேரம் எளிமையான உடற்பயிற்சி.”

- சுரேஷ்ராஜா