கனா இயக்குநர் அருண்ராஜா காமராஜ்டைட்டில்ஸ் டாக்-102

‘கனவு, ஆழ்மனதுக்கு நம்மை இட்டுச் செல்ல உதவும் ராஜபாதை’ என்று சிக்மண்ட் ஃபிராய்ட்  ‘கனவுகளின் விளக்கம்’ (The Interpretation of Dreams) என்கிற புத்தகத்தில் கூறியிருப்பார். கனவுகள் பெரும்பாலும் நம் வாழ்க்கையின் படிமங்களில் இருந்து வெளிப்பட்டாலும் கனவுகள் நம்முடைய உள்மனதின் ஆசைகளை, லட்சியங்களை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் கனவு காண்கிற விஷயத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாதபோது நான் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா?

சொந்த ஊர் குளித்தலை. சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பம். படிச்சது என்ஜினியரிங். பொதுவா என்ஜினியரிங் முடித்ததும் வெளிநாட்ல வேலைக்கு சேரணும் என்ற கனவு இளைஞர்களிடம் இருக்கும்.

ஆனால் என்ஜினியரிங் படிக்கும்போது அது எனக்கான படிப்பாகத் தெரியவில்லை. என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தை, படிச்ச படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமே இல்லை. ஏன்னா, அப்பா படித்தது தமிழ் இலக்கியம். மருத்துவத்துறையில் வேலை செய்தார்.

தமிழ் மீடியம் என்பதால் வேலைக்கு உதவியாக இருக்கும் என்று பர்சனாலிட்டி டெவலப்மென்ட் வகுப்புக்கு போனேன்.  அங்கு எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது எனக்குத் தோன்றிய விஷயம், பெயர் சொன்னால் நாலு பேருக்கு தெரியணும். அதுதான் என் லட்சியம் என்றேன்.

 எல்லோருக்கும் பாரதி யார் என்று தெரியும். அந்தளவுக்கு இல்லை என்றாலும் நான் வாழும் போதாவது யார்  என்று தெரியணும். என்னுடைய பிறப்புக்கு அர்த்தம் இருக்க வேண்டுமென்று நினைத்தேன். இன்னார் பையன் என்று தெரிவதற்காகத் தான் அப்பா பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டேன்.

அப்படி செலக்ட் பண்ணியது தான் சினிமா. நடிகன், பாடலாசிரியர் என்று பல தளங்களில் இயங்கினாலும் இயக்குநராக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. சினிமாவுக்கான தகுதிகளான கதை எழுதுவது, கதை சொல்வது எனக்கு கைவந்த கலை. அதன் அடிப்படையில் சினிமாவில் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். என்னுடைய கனவுக்கு உயிர் கொடுத்தது சிவகார்த்திகேயன். அவர் தான் ஒரு அப்பா குழந்தை கையை பிடித்து வழி நடத்துவது போல் எனக்கு சினிமாவை கற்றுக் கொடுத்தார்.

சிவகார்த்திகேயன் வெளியேதான் காமெடி பண்ற மாதிரி தெரியும். ஆனால் வேலைன்னு வரும்போது கண்டிப்பா நடந்து கொள்வார். என் அப்பாவுக்குப் பிறகு நான் அதிகமா பயப்படுவது அவருக்குத்தான்.

காமெடி என்பது அவரின் நேச்சர். ஆனால் வேலை விஷயத்தில் சிரியஸ், எமோஷனல், கண்டிப்பு என்று நிர்வாகிக்கான அனைத்து குணாதிசயமும் அவரிடம் இருக்கும். தப்பான விஷயத்துக்கு துணை போக மாட்டார். உழைக்கும் விஷயத்திலும் கண்டிப்பானவர்.

இன்று காமெடி பண்ணுகிறவர்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அவர்கள் சீரியஸான விஷயங்களுக்கு குரல் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.  தீவிர சிந்தனையாளராக இருப்பார்கள். சமூக மாற்றத்துக்கான கருத்துக்களை காமெடி வழியாக சொல்லியிருப்பார்கள். சிந்திக்கிறவர்களால்தான் காமெடி பண்ண முடியும். சிவாவிடம் எப்போதும் எடுத்தோம்,  கவிழ்த்தோம் என்ற நிலை இருக்காது. அதேபோல் ஒரு வேலையை சிறப்பாக செய்யும் போது அவரைப் போல் தட்டிக் கொடுக்கவும் முடியாது.

இன்று நான் தெரியக் காரணமே அவர்தான். தன் தோள் மீது உட்காரவைத்து அழகு பார்த்துள்ளார். வெற்றி தோல்வி என்பது முடிந்தபிறகு பேசும் விஷயம். ஆனால் பாதையை உருவாக்குவதுதான் கடினம். எனக்கு பாதை அமைத்துக் கொடுத்தவர் சிவா.

படிக்கும் போது அதிகமா கனவு காண்பேன். அதில் ஒரு கனவுதான் என்ஜினியர். அதை அடைந்துள்ளேன். அந்த வகையில் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள திருப்திகரமான  மனநிலை அவசியம். நமக்கு வேண்டும் என்பது கிடைத்துவிட்டால் திருப்தி கிடைக்கும். மற்றவர்கள் கொண்டாடவில்லை என்றாலும் நான் திருப்தி அடைந்தாலே அதுவே வெற்றி. மற்றவர்கள் கொண்டாடி நான் திருப்தி அடையவில்லை என்றால் அது உண்மையான வெற்றி அல்ல.

அடிப்படையில் திருப்தி மனநிலைதான் கனவாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் நமக்கு பிடித்த மாதிரி வாழணும். பிடித்த விஷயங்களை செய்யணும். பிடித்த விஷயங்களுக்காக போராடணும். போராடும்போதும் அனுபவித்து போராடினால் வலி தெரியாது.

கனவு பலிக்க உண்மையா கனவு காணவேண்டும். அதில் ஜெயிப்போம் என்கிற நம்பிக்கை வேண்டும். அப்படி நம்பிக்கை இருந்தால் கனவு பலிக்கும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக வரமுடியும். அது நடக்கும். ஏன்னா, எண்ணங்கள் தான் வாழ்க்கை. அதை எப்போதும் எல்லா சமயங்களிலும் நினைக்க வேண்டும்.

மீன் தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்க முடியும் என்பது முட்டாள்தனம். தனிமனிதன் கனவு காணும் போது அவனுடய தன்மை, சூழ்நிலை பொறுத்து கனவு காணும் போது அதை எளிதில் அடையமுடியும். யானை சிறுத்தையைப் பார்த்து ரன்னிங்ரேஸில் கலந்து கொள்வது தப்பாக இருக்கும்.

நாம் எதில் தனித்துவமாக இருக்கிறோமோ அதை இனம் கண்டு அதில் கவனம் செலுத்தி காரியத்தில் இறங்கும்போது வெற்றி காணலாம்.

ஒவ்வொருவரும் அவரவருக்கான தனித்துவம் எதில் இருக்கிறது என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும். அவர் மாதிரி ஆவேன், இவர் மாதிரி ஆவேன் என்று போகிற போக்கில் சொல்வது பலன் அளிக்காது. ஏன்னா அப்படி பகல் கனவில் எத்தனையோ பேர் வாழ்க்கையை தொலைத்தவர்கள் இருக்கிறார்கள்.

ஓவியம் வரையத் தெரிந்தவர் அதில் எவ்வளவு பெரிய ஆளா வரமுடியும் என்று யோசிக்கும் போது பெரிய உயரத்தை அடைய முடியும். திருப்தியும் கிடைக்கும். படமே வரைத் தெரியாத ஒருவர் பிக்காசோவா வரணும் என்று நினைப்பது கூடாத காரியம்.

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாம். அது தவறு இல்லை. ஏன்னா இப்போது அதுக்கெல்லாம் டெக்னாலஜி வந்துவிட்டது. ஏன்னா அந்த பழமொழி ‘முடியாது’ என்று எதிர்மறை சிந்தனையை தூண்டும் விதமாக இருக்கிறது. முடியும் என்ற விஷயத்தில் ஆசைப்படுவது தவறு இல்லை.  முடியும் என்று சொல்பவர் கொம்புத் தேனுக்கு மாற்று வழி கண்டுபிடிப்பார். அப்போது லட்சியத்தை அடைய முடியும். ஆனால் நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்கிற போக்கு போணி ஆகாது.

கனவுகளுக்கு எல்லைகள் இல்லை. வெவ்வெறு வடிவத்தில் கனவு காணலாம். அந்த கனவுப் பாதையில் பயணிக்கும்போது சந்தோஷம் கொடுக்கும். எல்லைகள் இல்லாததுதான் கனவு. அறிவியல் உலகத்தில் இன்று எல்லாமே சாத்தியமாகி வருகிறது. பால் வீதியில் வசிக்க முடியுமா என்று கூட யோசிக்கிறார்கள்.

செவ்வாய் கிரகத்தில் ஒரு அரை கிரவுண்ட் வாங்க முடியுமா என்று கூட நினைக்கிறார்கள். அப்படி கனவு காண்கிறவர்களுக்கு வானமும் எல்லை கிடையாது. தூக்கத்தை சுவாரஸ்யப்படுத்துவது கனவு அதுபோல் வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்துவது கனவு.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)