சினிமாவின் எதிர்காலம் 3D தான்!



ஹாலிவுட் நடிகை ரோஸா சல்ஸார் எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி

ஹாலிவுட்டின் ஹரி என்று போற்றப்படும் இயக்குநர் ராபர்ட் ரோட்ரிக்யூஸின் லேட்டஸ்ட் படமான ‘அலிடா : பேட்டில் ஏஞ்சல்’ படத்தின் ஹீரோயின் ரோஸா சல்ஸார். ‘மேஸ் ரன்னர்’ சீரிஸ் படங்களின் வாயிலாக ஏற்கனவே பிரபலமாகியிருக்கும் ரோஸாவுக்கு
‘அலிடா’, கேரியர் பிரேக்காக அமைந்திருக்கிறது. இத்தனைக்கும் இப்படத்தில் இவர் பின்னணி நடிப்புதான் கொடுத்திருக்கிறார். பின்னணிப் பாடகி கேள்விப்பட்டிருப்பீர்கள். பின்னணி நடிகை என்றால்?

“எங்கள் ‘வண்ணத்திரை’க்கு பேட்டி அளிக்க முடியுமா?” என்று மின்னஞ்சலில் கேட்டவுடனேயே, மகிழ்ச்சியாக உடனே ஒப்புக்கொண்டார். சாட்டிங் மூலமாக அவரிடம் பேசினோம்.“நீங்கள் நடித்திருக்கும் ‘அலிடா’ பற்றி சொல்லுங்களேன்.”

“இது கொஞ்சம் வித்தியாசமான அனுபவம். படம் பார்க்கும்போது ‘அலிடா’ கேரக்டர் மட்டும் உங்களுக்கு வித்தியாசமாகத் தெரியும். அதாவது அதில் நடித்திருப்பது நான்தான். ஆனால், நீங்கள் திரையில் பார்ப்பது 3டியில் உருவாக்கப்பட்ட எனது பொம்மை. கிட்டத்தட்ட ‘கோச்சடையான்’ படத்தில் உங்கள் ரஜினி நடித்திருப்பது மாதிரி. ஆனால், ‘கோச்சடையான்’ படத்தில் எல்லா கேரக்டர்களுமே 3டியில் உருவாக்கப்பட்டவர்கள்.

‘அலிடா’வில் என்னுடைய கேரக்டர் மட்டும்தான் 3டி இமேஜ். மற்ற கேரக்டர்கள் எல்லாம் நிஜமான நடிகர்களே நடித்தவை. செயல் கிரகிப்பு நடிப்பு (performance capture) என்று சொல்லப்படக்கூடிய இந்தத் திறன், எதிர்காலத்தில் எல்லா நடிகர்களிடமும் எதிர்பார்க்கப்படும். அடுத்தகட்ட சினிமா என்பது முழுக்க 3டி டெக்னாலஜியாகத்தான் இருக்கும். இந்தியாவிலும் கூட ‘எந்திரன்’, ‘2.0’ போன்ற படங்களின் மூலம் தொழில்நுட்ப உச்சத்தை எட்டிவருகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.”

“எப்படி இந்தப்பட வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது?”
“இது ஜப்பானிய மாங்கா காமிக்ஸை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. இதைப்பற்றி ஜேம்ஸ் கேமரூன் ரொம்ப காலமாகவே பேசிவருகிறார். இப்படத்தில் அலிடாவாக நடிக்க ஆடிஷன் நடக்கிறது என்று கேள்விப்பட்டதுமே ஆர்வத்தோடு போய் கலந்து கொண்டேன். படத்தின் இயக்குநர் ராபர்ட், எனக்கு ஏற்கனவே நண்பர்தான். ஆனால், ஆடிஷன் முடிந்து பல மாதங்கள் எந்தப் பதிலும் இல்லை. திடீரென அழைத்தார்கள். போய் நடித்துக் கொடுத்தேன். என் வாழ்க்கையிலேயே மிகவும் அரிதாகக் கிடைத்த வாய்ப்பு என்று கருதுகிறேன்.”

“படத்தில் நீங்கள் நேரடியாக நடிக்காமல் ஏன் 3டி இமேஜுக்காக பின்னணியில் நடித்தீர்கள்?”
“நீங்கள் அலிடா படம் பார்த்தால் இந்தக் கேள்வியை கேட்க மாட்டீர்கள். அலிடா அடிப்படையில் ஒரு cyborg. அதாவது ‘எந்திரன்’ படத்தின் சிட்டி ரோபோ மாதிரி. cyborgகளின் அசைவுகள் மனிதர்களின் இயல்புக்கு முரணானவை. அதாவது கைகளை ஆட்டுவது, நடப்பது எல்லாமே வேறு மாதிரி இருக்கும். அவை கண் சிமிட்டுவதில்லை.

புன்னகை பூப்பதில்லை. எனவே, இந்த கேரக்டருக்கு நேரடியாக ஒரு நடிகையை நடிக்க வைப்பதைக் காட்டிலும், அந்த நடிகையின் நடிப்பை மட்டும் கணினியில் பிரதியெடுத்து, ஒரு 3டி இமேஜை நடிக்கவைத்தாலே படத்தில் சிறப்பாக வெளிப்படும்.”“படத்தில் சண்டைக்காட்சிகள் அமர்க்களமென கேள்விப்பட்டோம்...”“நன்றி.

படத்தில் அலிடா பொம்மை எவ்வளவு சண்டை போடுகிறதோ, அதற்காக பின்னணியில் ப்ளூமேட் ஸ்டுடியோவில் நான் சண்டை போட வேண்டியிருந்தது. ‘டைட்டானிக்’, ‘அவதார்’ படங்களின் பிதாமகன் ஜேம்ஸ் கேமரூனின் தயாரிப்பு மற்றும் திரைக்கதையில் நடிக்கிறோம் என்பதற்காகவே எத்தகைய சிரமத்துக்கும் என்னை உட்படுத்திக்கொள்ளத் தயாராக இருந்தேன்.”

“அடுத்து நீங்களே படம் இயக்கப் போவதாக...”
“சென்னை வரை அந்தத் தகவல் வந்துவிட்டதா? இதே performance capture முறையில் ஒரு படம் இயக்கும் ஆசை எனக்கு வந்திருக்கிறது. இயக்குநர் ராபர்ட் ரோட்ரிக்யூஸ், தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரூன் இருவருடைய வழிகாட்டுதலில் என்னுடைய ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்.”‘வண்ணத்திரை’ வாசகர்கள் சார்பாக, ரோஸாவை வாழ்த்தினோம்.

- யுவகிருஷ்ணா