குத்தூசிஉழுவார் உலகத்தார்க்கு ஆணி!

ஊரில் இருக்கும் தன்னுடைய விவசாய நிலத்தை விற்பனை செய்துவிட்டு பெற்றோருடன் நிரந்தரமாக வெளிநாட்டில் செட்டில் ஆக திட்டமிடுகிறார் திலீபன். அந்த சமயத்தில் ஊர் பிரச்சனைக்காக தனது ஆசையை விட்டுவிட்டு விவசாயத்தை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கும்போது தடைகளை சந்திக்கிறார். தடைகளை மீறி நிலத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பதை மண்வாசனையோடு சொல்லியுள்ளார்கள்.

எளிமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக இருக்கிறார் திலீபன். நாயகி அமலாரோஸ் குரியன் காதல் காட்சிகளில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் பல இடங்களில் ஸ்கோர் பண்ணுகிறார். ஜெயபாலனின் நடிப்பும் விவசாயத்தைக் காப்பதற்காக அவர் பேசும் வசனங்களும் அருமை. யோகிபாபு யதார்த்தமான நகைச்சுவையால் ரசிக்க வைக்கிறார்.

பாகியின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான விறுவிறுப்பை வழங்கியுள்ளது. கண்ணனின் இசையும் நன்று. வயல்வெளியில் நடக்கும் சண்டைக் காட்சியில் மாஸ்டர் ராஜசேகரின் உழைப்பு தெரிகிறது. சாட்டையடி வசனங்களால் கவனிக்க வைக்கிறார் வீருசரண்.

கோவில் கோபுரக் கலசங்களில் நம் முன்னோர்கள் நெல் விதைகளை ஏன் வைக்கிறார்கள் என்பதற்கு இயக்குநர் தந்த விளக்கம் வியக்க வைக்கிறது. இயற்கை விவசாயத்தை மீட்க இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை மிக அழகாக உணர்த்தியிருக்கும் இயக்குநர் சிவசக்திக்கு ஒரு பூங்கொத்து.