மின்னுவதெல்லாம் பொன்தான்-18அது 1990.
தமிழ்நாட்டில் நீங்கள் எந்த ஊருக்குப் போனாலும் பஸ் ஸ்டேண்டுகளிலும், டீக்கடைகளிலும் ஒலிக்கும் பாடல்களாக, ‘குயிலு குப்பம் குயிலு குப்பம் கோபுரம் ஆனதென்ன...’, ‘ஏய் ராசாத்தி ரோசாப்பூ வா வா...’ ஆகியவைதான் இருந்தன. பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த ‘என்னுயிர் தோழன்’தான் அந்தப் படம். இசைஞானியின் இசையை சிறப்பு என்று சொல்வது, அல்வா தித்திக்கும் என்று சொல்வதற்கு ஒப்பாகும்.

அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சிகள் வரவில்லை. தூர்தர்ஷன் மட்டும்தான். வெள்ளி இரவு தூர்தர்ஷனில் பாடல்கள் மட்டும் ஒளிபரப்பாகும் ‘ஒலியும் ஒளியும்’ சூப்பர்ஹிட் நிகழ்ச்சி. அதில் அதிகமுறை போடப்பட்ட பாடல்களாகவும் இப்பாடல்களே அமைந்தன.

ஒரு பாடலில் அறிமுக ஹீரோ பாபுவுடனும், அடுத்த பாடலில் தென்னவனுடனும் (அப்படத்தில் வில்லன், இப்போது குணச்சித்திர நடிகர்) ஆடியவர் ரமா.
கேரளாவில் இருந்ேதா, மும்பையில் இருந்ேதா ஹீரோயின்களை தேடித்தேடிக் கண்டு பிடித்து அழைத்து வந்த பாரதிராஜா, நம் மண்ணிலேயே கண்டெடுத்த மாநிற வைரம் ரமா. பாரதி ராஜாவின் கண்டு பிடிப்புகள் எல்லாமே திரையுலகில் மிகப்பெரிய இடத்துக்கு செல்வார்கள். ஆனால் ரமாவின் கதை வேறு.

ரமா, பிறந்தது வளர்ந்தது எல்லாமே புதுக்கோட்டை. அப்போது அவர் பெயர் சாந்தி. நடுத்தரக் குடும்பம்.புதுக்கோட்டை மாவட்ட பள்ளி அளவில் எங்கு விளையாட்டுப் போட்டி நடந்தாலும் மைக்குகளில் அதிகமுறை சாந்தி என்றுதான் பெயர் ஒலிக்கும். அந்த அளவிற்கு தடகள விளையாட்டில் உள்ளூர் நட்சத்திரம் அவர். களையான முகம், மாநிறம் என தனித்த அழகோடு இருந்தார் சாந்தி.

ஒரு கட்டத்தில் தடகள விளையாட்டில் இருந்து வாலிபாலுக்கு மாறினார். அடுத்தடுத்து சாதித்து மாநில பெண்கள் வாலிபால் அணி கேப்டன் ஆனார். குடும்பமும் அவருக்கு வசதியாக சென்னைக்கு குடிபெயர்ந்தது. வாலிபால் வட்டாரத்தில் நல்ல பெயருடன் வந்தார் சாந்தி. விளையாட்டில் கப்புகளோடு ரெயில்வே துறையில் வேலையும் கிடைத்தது.

சாந்தியின் தந்தையும், இயக்குனர் பாரதிராஜாவும் நண்பர்கள். ‘முதல் மரியாதை’ படம் வெளிவந்த நேரம் சாந்தியும், அவரது தந்தையும் படத்தை பார்த்துவிட்டு நேராக பாரதிராஜா அலுவலகத்திற்கு சென்று அவரைச் சந்தித்தார்கள். அப்போது சாந்தியை பார்த்த பாரதிராஜா, “உம்பொண்ணு நல்ல லட்சணமாக களையா இருக்காய்யா. நிச்சயம் இவளை நான் நடிக்க வைப்பேன்” என்று உறுதிகூறி அனுப்பி வைத்தார்.

சில வருட இடைவெளிக்குப் பிறகு சாந்தியை அழைத்து பாரதிராஜா நடிக்க வைத்ததுதான் ‘என்னுயிர் தோழன்’. வழக்கம்போல தனது ஹீரோயினுக்கு ஆர் என்ற எழுத்தில் தொடங்கும் வகையில் ரமா என்று பெயரும் வைத்தார்.‘என்னுயிர் தோழன்’ படத்தில் சிறப்பான நடிப்பைக் கொடுத்தார் ரமா. அல்லது கொடுக்க வைத்தார் பாரதிராஜா. படப்பிடிப்பில் அவரிடம் ரமா பலமுறை அடிவாங்கியது தனிக்கதை. படம் வெளிவந்து வெற்றி பெற்றது. பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் பரவியது. பாரதிராஜாவின் ஸ்டைலில் குளோசப்பில், பூக்களுக்கு நடுவிலும், ஆற்றங்கரையிலும், வயல்வெளிகளில் ஓடி ரசிகர்களைக் கவர்ந்தார் ரமா.

ரமாவுக்கு சினிமாவில் நடிப்பதில் அவ்வளவு விருப்பம் இல்லை. அது அவரது அப்பாவின் ஆசை.பெரிய இயக்குநரின் படம். அதனால் ஒரு படத்துடன் ஒதுங்கிவிடலாம் என்றுதான் ஆரம்பத்தில் கருதினார்.அதன்பிறகு சினிமாவில் தொடர்ந்தால் பெரிய இடத்துக்கு வரலாம் என்று ஆசை காட்டப்பட, ‘அந்தி வரும் நேரம்’ என்ற படத்தில் நடித்தார். அந்த படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. சினிமாவை விட்டு ஒதுங்க நினைத்த ரமாவை சினிமாவே ஒதுக்கியது.

அடுத்து சில வாய்ப்புகள் வந்தும் அவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார் ரமா. ஒரு வேளை, ‘அந்தி வந்த நேரம்’ வெற்றி பெற்றிருந்தால் பெரிய கனவுக் கன்னியாக வந்திருக்கா விட்டாலும், சரிதா, அர்ச்சனா மாதிரி பெர்ஃபாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட்டாக நல்ல இடத்தை ரமா பிடித்திருக்கக் கூடும்.

அப்போது சினிமா வேண்டாமென்று விலகியவரை, இருபது ஆண்டுகள் கழித்து சினிமாவே மீண்டும் அழைத்தது. ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இன்றைக்கு கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் அம்மா ரமாதான். ‘கத்தி’ படத்தில் விஜய்க்கு அம்மா, ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் அம்மா, விஜய் சேதுபதி, நயன்தாரா, த்ரிஷா என ஹீரோ, ஹீரோயின்கள் அத்தனை பேருக்கும் இப்போது இவர்தான் அம்மா.

இதில் ஒரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், தன்னை அறிமுகப்படுத்தி–்ய பாரதிராஜாவுக்கு ஜோடியாக ‘குரங்கு பொம்மை’ படத்திலும் நடித்து விட்டார். மின்னுவதெல்லாம் பொன்தான். என்ன.. ரமா, கொஞ்சம் லேட்டாக மின்னிய பொன்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்