சினிமாவிலும் திருநங்கைகள் சாதிக்கலாம்!



இயக்குநர் ராமின் ‘பேரன்பு’ படம் வெளியாகி பரவலான பாராட்டுகளை அள்ளிக்கொண்டு இருக்கிறது. படத்தில் மம்முட்டியின் மனைவியாக நடித்தவர் அஞ்சலி அமீர். இவர் ஒரு திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய ஹீரோ ஒருவருக்கு திருநங்கை ஜோடியாகி இருப்பது இந்திய சினிமாவிலேயே இதுதான் முதல்முறை.அஞ்சலியிடம் பேசினோம்.

“உங்க பின்னணி?”

“கோழிக்கோடு நகரத்துக்கு அருகிலுள்ள தாமரைச்சேரிதான் என்னோட சொந்த ஊர். நான் எட்டு மாத குழந்தையா இருந்தப்ப, கோழிக்கோட்டில் நடந்த விபத்தில் என் அம்மா செத்துட்டாங்க. அந்த சம்பவத்துக்குப் பிறகு என் அப்பா அமீர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார். நான் என் அம்மா வழி பாட்டி வீட்டில்தான் வளர்ந்தேன்.

அப்பாவுக்கு ரெண்டு மகன்கள். எனக்கு அவங்க தம்பிகள்தான். ஆனா, அம்மாவோட உறவினர்கள் கூட இருக்கும் அளவுக்கு அப்பாவோட உறவினர்கள் கூட நெருக்கம் கிடையாது. எப்பவாச்சும் அப்பாவும், தம்பிகளும் என்கிட்ட பேசினா பேசுவேன்.

பிஎஸ்டபிள்யூ படிச்சேன். அதாவது, சோஷியல் ஒர்க் கோர்ஸ் படிச்சேன். கோழிக்கோட்டிலும், பிறகு கோயமுத்தூரிலும் என்ஜிஓ கம்பெனியில் சோஷியல் ஒர்க் பண்ணேன். அப்ப மலையாள டிவி சேனல்களில் அழைப்பு வந்தது. எல்லா புரோகிராம்களிலும் கலந்துக்கிட்டேன்.

கேரளாவிலுள்ள மக்களுக்கு என்னை அடையாளம் தெரிய ஆரம்பிச்சது. அதுதான் எனக்கு மாடலிங் செய்ய வாய்ப்பு தந்தது. ஜுவல்லரி, நைட்டீஸ் விளம்பரங்களில் நடிச்சேன். ஃபேஷன் ஷோக்களில் கலந்துக்கிட்டேன். அழகிப் போட்டியில் பங்கேற்ற எனக்கு விருது கிடைச்சது.”

“சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”

“சின்ன வயசுல இருந்தே சினிமா மேல் நிறைய மோகம். நடிப்புன்னா அவ்வளவு உயிர். என் போட்டோக்களை கையில் வெச்சுக்கிட்டு வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். உடனே ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, திடீர்னு அந்தப் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திட்டாங்க. இந்த நேரத்தில்தான் டைரக்டர் ராம் ஆபீசில் இருந்து அழைப்பு வந்தது. நான் பண்ண சில மலையாள டி.வி புரோகிராம்களை மம்முட்டி சார் பார்த்திருக்கிறார். அவர்தான் ராம் சார் கிட்ட என்னைப் பற்றி சிபாரிசு பண்ணார். உடனே சென்னைக்கு வந்தேன். மேக்கப் டெஸ்ட், வீடியோ டெஸ்ட் நடந்தது. எல்லாத்திலும் பாஸானேன். பிறகுதான் ‘பேரன்பு’ படத்தில் நடிச்சேன்.”

“அடுத்து?”

“இப்ப தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். மலையாள ‘சுதர்சன புருஷன்’ படத்தில், மோகன்லாலின் தீவிர ரசிகையா நடிச்சேன். ரிலீசுக்குப் பிறகு எனக்கு நல்ல பேர் கிடைச்சது. இப்ப ரெண்டு மலையாளப் படம், ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கிறேன். ‘இன் தி நேம் ஆஃப் அல்லா’ என்ற மலையாளப் படத்தில் நான்தான் ஹீரோயின்.

தொடர்ந்து இப்படித்தான் நடிப்பேன், அப்படித்தான் நடிப்பேன்னு சொல்ல மாட்டேன். எந்த கேரக்டரா இருந்தாலும், கதைக்கு அது ரொம்ப முக்கியமானதா இருந்தா நடிப்பேன். நான் இறந்துபோன பிறகும், நூறு வருஷம் கழிச்சு யார் பார்த்தாலும், நான் ஏதாவது ஒரு படத்தில் நடிச்ச ஒரு கேரக்டர் பேசப்படணும் என்பதுதான் என்
விருப்பம்.”

“திருநங்கைகளுக்கு சினிமாவில் மரியாதை இருக்கா?

“ஆரம்பகால சினிமாக்களில் திருநங்கைகள் பற்றி கேவலமா பேசுவாங்க. கிண்டல் பண்ணுவாங்க. பாடல் காட்சியில் திருநங்கைகளை நடக்கவிட்டு கேலி செய்வாங்க. இப்ப அந்த நிலைமை ரொம்பவே மாறியிருக்கு என்றுதான் சொல்லணும். அதை நினைச்சு ரொம்ப சந்தோஷப்படறேன். சமூகத்தில் நடக்கிற எல்லா மாற்றங்களையும் சினிமா கிரகிச்சுக்கும். அதே மாதிரி சினிமாவில் சொல்லப்படக்கூடிய நல்ல கருத்துகள், பாமர மக்களுக்கும் போய்ச் சேரும்.

திருநங்கைள் இப்போ எல்லாத் துறைகளிலும் ஜெயிக்கிறாங்க. அரசியலிலும் கூட குறிப்பிடத்தக்க அளவில் ஈடுபட ஆரம்பிச்சிருக்காங்க. சினிமாத் துறையிலும் இப்போ எங்களுக்கு நல்ல மரியாதை கிடைச்சு இருக்கு. தொடர்ந்து நான் சினிமாவில் நடிக்கணும். அது மட்டும்தான் என் ஆசை.”
“திருமணம்?”

“எங்க வாழ்க்கைக்குன்னு ஒரு வரைமுறை இல்லாத நிலையில், கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழும் முறை பற்றி நிறைய பேர் கேட்கறீங்க. எனக்கு பாய் பிரெண்ட் பிடிக்கும். அதுக்காக, லிவிங் டுகெதர் முறையை தேர்வு செய்வீங்களான்னு கேட்காதீங்க. என் கவனம் முழுக்க சினிமா, சினிமா, சினிமா மட்டும்தான்.”

- தேவராஜ்