அடுத்த அமலா ரெடி!அறிமுக இயக்குநர் சிவசக்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் படம் ‘குத்தூசி’. அதில் தாவணி கட்டிய தாஜ்மகாலாக அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அமலா ரோஸ் குரியன். படத்தின் கதாநாயகனுக்கு இணையாக அமலா ஏற்றிருக்கும் கதாபாத்திரமும் முக்கியத்துவம் உள்ளதால் கோலிவுட்டின் கவனம் இவர் மீதும் குவிந்திருக்கிறது.

அமலா, அமலாபால் ஆகியோரைத் தொடர்ந்து தமிழுக்கு வந்திருக்கும் மூன்றாவது அமலா இவர். பனி பெய்துகொண்டிருந்த ஒரு மாலையில் கடற்கரைச் சாலையிலிருந்த ஒரு டீ ஷாப்பில் அவரைச் சந்தித்துப் பேசினோம்.“பயோடேட்டா ப்ளீஸ்...”“சொந்த ஊர் கோட்டயம். மீரா ஜாஸ்மின், நயன்தாரா என்று உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான அழகு தேவதைகள் பிறந்த ஊர். அப்பா மான்சன் ஆபிரகாம் குரியன் துபாய் ரிட்டர்ன் பிசினஸ்மேன். அம்மா மான்சன் ஹோம்மேக்கர். அம்மா, அப்பாவுக்கு நான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு. படிச்சது சைக்காலஜி. இப்போ எம்.ஏ பண்றேன்.”

“சினிமாவுக்கு வருவோம்னு நினைத்ததுண்டா?”
“சினிமாவுக்கு வருவோம்னா? என்ன அப்படி கேட்டுட்டீங்க. நான் மூணு வயசுலேயே நடிக்க ஆரம்பித்தவள் என்று வீட்ல சொல்வாங்க. மலையாளத்தில் மாலா அரவிந்தன்னு பிரபலமான குணச்சித்திர நடிகர் இருக்கிறார். அவர் நடித்த படத்தில்தான் என் முதல் சினிமா பிரவேசம் நடந்தது.

அதுமட்டுமில்லே. நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு தரமான சம்பவம் நடந்தது. அதைச் சொன்னா சினிமாவை நான் எப்படி நேசிக்கிறேன்னு உங்களுக்குப் புரியும். ஒரு நாள் டீச்சர்  ஒரு வெள்ளை பேப்பரை கொடுத்து ‘உங்களுடைய எதிர்கால லட்சியம் என்னன்னு எழுதிக் கொடுங்க' ன்னு சொன்னாங்க. எல்லாரும் டாக்டர், என்ஜினியர், வக்கீனுஎழுதிக் கொடுத்தாங்க. நான் எழுதிக் கொடுத்த பேப்பரை பார்த்ததும் டீச்சரோட முகம் வியப்படைந்தது.

அப்படி என்ன எழுதினேன்னு கேட்கிறீங்களா? சினிமா நடிகையாகி ஆஸ்கார் விருது வாங்கணும் என்று எழுதிக் கொடுத்தேன். அப்படி நான் எழுதிக் கொடுக்க இன்னொரு காரணம், அப்போது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு செய்திகள் பேப்பரில் வெளியாகி இருந்தது. அந்த வகையில் சினிமா என்பது சின்ன வயதிலேயே தெரிந்தோ தெரியாமலோ ஊறிப் போன விஷயம்.”

“வீட்ல என்ன சொன்னாங்க?”
“என் வீடு மட்டுமில்ல, எந்த வீட்டிலும் சினிமாவுக்கு போறேன்னு சொன்னா பிழைக்கிற வழியைப் பாருன்னு பக்குவமா புத்திமதிதான் சொல்வாங்க. அந்த மாதிரிதான் என் வீட்டிலும் ஆரம்பத்தில் கொஞ்சம் மக்கர் பண்ணாங்க. ஒரே செல்ல மகள் என்பதும் ஒர்க் அவுட்டாகவில்லை. நாளடைவில் எனக்குள் இருக்கும் சினிமா ஆர்வத்தைப் புரிந்துக்கொண்டு சம்மதம் சொன்னார்கள்.”

“முதல் படம்?”

“டிவியில் தான் என்னுடைய கேரியர் ஆர்ம்பமானது. பிரபல இயக்குநர் லால் ஜோஸ் இயக்கிய ரியாலிட்டி ஷோவில் பருவ மங்கையாக தலை காண்பித்தேன். தொடர்ந்து சின்னத்திரை என்னை வாரி அணைத்துக் கொண்டதால் ஆங்கர், டிவி ஷோ என்று பல தளங்களில் பிஸியோ பிஸி என்று அலைந்தேன்.

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘தீவிரம்’ படம்தான் என்னுடைய முதல் படம். ஆனால் ஜோடியா நடித்தது துல்கருக்கு அல்ல. வில்லனுக்கு ஜோடியா வருவேன். தமிழில் ‘குத்தூசி’தான் நான் நாயகியாக அறிமுகமான முதல் படம். பிறகு, ‘ஒரு கனவு போல’ படம் பண்ணினேன். இரண்டு படங்களிலும் பெயர் சொல்லுமளவுக்கு அழுத்தமான வேடங்கள் கிடைத்தது.”

“நீங்கள் நடித்துள்ள படங்களை வைத்து பார்க்கும் போது கிளாமருக்கு செட்டாகமாட்டீங்க போலத் தெரியுதே?”

“அப்படிச் சொல்ல முடியாது. கிளாமராக இருந்தாலும் சரி, கிளாமர் இல்லை என்றாலும் சரி, என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தில் கமிட்டாகும் போது அதில் எனக்கான முக்கியத்துவம் எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பேன். என்னைப் பொறுத்தவரை நல்ல கேரக்டர்களில் நடிக்கணும். அதிக படங்கள் என்பதைக் கடந்து நல்ல பெர்ஃபாமிங் ஆர்ட்டிஸ்ட் என்று பெயர் எடுக்க விரும்புகிறேன்.  ஹீரோயின் என்று இல்லாமல் எல்லா வகை கேரக்டரும் பண்ணுவேன்.”

“தமிழ் - மலையாளம்.... என்ன வித்தியாசத்தை பார்க்கறீங்க?”

“அப்படி வித்தியாசம் இருக்கிற மாதிரி தெரியலை. இரண்டு இடங்களிலும் நல்ல தரமான படைப்புகள் வருகிறது. தமிழில் தொழில் நேர்த்தி சுத்தம். தமிழ் நாட்டுக்கு வந்து படப்பிடிப்பு களில் கலந்துக்கொண்டாலும் அயல் ஊரில் இருக்கிறோம் என்கிற ஃபீல் வந்ததில்லை. காரணம், தமிழர்களின் வெள்ளை மனம். அப்படி... தமிழில் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன். நாயகி களை மனதில் வைத்து கதைகள் எழுதுகிறார்கள். அதுமட்டுமில்ல, எனக்கு முதன் முதலாக கதாநாயகி வாய்ப்பு கொடுத்த தமிழ் சினிமாவை மறக்க முடியுமா?”

“சினிமாவுல உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார்?”

“பொதுவா யாரையும் நான் இன்ஸ்பிரேஷனா எடுத்துக் கொள்வதில்லை. ஏன்னா, இன்னிக்கு ஜெயித்த அத்தனைபேரும் எப்படி இந்த உயரத்துக்கு வந்தாங்க என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஏன்னா, அவங்க எந்த மாதிரி சூழலில் நடிக்க வந்தாங்க, அவங்க சந்தித்த அனுபவங்கள் என்ன, முதலிடத்துக்காக அவர்கள் பண்ண தியாகம் என்ன என்பது போன்ற கேள்விகள் அதில் உள்ளடங்கி இருக்கிறது.

அந்த வகையில் கண்ணை மூடிக் கொண்டு அவர் என் ரோல் மாடல், இவர் என் ரோல் மாடல் என்று சொல்வது அபத்தமா இருக்கும். என்னுடைய சூழல் வேறு. அவர்கள் சூழல் வேறு. என்னுடைய கனவு வேறு. அவர்கள் கனவு வேறு. இரண்டையும் வகைப்படுத்த முடியாது. என் வழி... தனி வழி... அந்த வகையில் எனக்கு நானே இன்ஸ்பிரேஷன்.”

“லட்சியம்?”

“நடிப்பைப் பொறுத்தவரை தனித்துவமான இடத்தை பிடிக்கணும். வரலாற்றில் நானும் ஒருவராக இல்லாமல் புதிய சகாப்தத்தை படைக்க வேண்டும். ஏன்னா, கடவுளின் மிகச் சிறந்த படைப்பாக என்னை நினைக்கிறேன். இது அழகைக் குறித்து சொல்லும் வார்த்தை அல்ல. மனிதநேயத்தைக் குறித்து சொல்கிறேன்.”

“சினிமா தவிர வேற என்ன பிடிக்கும்?”

“பாடுவது, ஆடுவது, கதை எழுதுவது என்று கலை ஆர்வம் அதிகம்.  எதிர்காலத்தில் சினிமாவுக்கான கதை எழுதும் ஐடியாவும் இருக்கு. சைக்காலஜி படித்திருப்பதால் இலவசமா கவுன்சிலிங் பண்றேன். சமீபத்திய கேரள இயற்கைச் சீற்றத்தின் போது என் அளவில் சில உதவிகள் பண்ணினேன்.

மற்றபடி, ஐயம் வெரி வெரி லொட லொட பார்ட்டி. என்னால் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்க முடியாது. எந்த சூழலாக இருந்தாலும் அந்த சூழலுக்குள் என்னை மாற்றிக் கொண்டு சகஜமாக ப்பேசுவேன்.”

- சுரேஷ்ராஜா