காட்டு காட்டுன்னு காட்டை காட்டப் போறாங்க!காட்டை மையமாக வைத்து தமிழில் கதை சொல்லி நாளாயிற்று. அந்தக் குறையைத் தீர்க்க வருகிறது ‘அதோ அந்த பறவை போல’. அமலாபாலை ரஃப் & டஃப் லுக்கில் காட்டியிருக்கும் அறிமுக இயக்குநர் வினோத்திடம் பேசினோம்.“எனக்கு எல்லா பொறுப்புகளை நானே ஏத்துக்கிட்டு பண்ணணும்னு ஆசை கிடையாது. எல்லா பொறுப்புகளையும் பிரிச்சுக் கொடுத்து பண்ணணும்னுதான் ஆசை.

மலையாள சினிமாவில், தெலுங்கு சினிமாவில் எல்லாம் அப்படித்தான் நடக்குது. இந்தியிலேயும் ஸ்கிரிப்ட்டுக்கு தனி ஆளுங்க இருக்காங்க. ஹாலிவுட்டில் சொல்லவே வேணாம். தமிழ் சினிமாலேயும் நடக்குது. ஆனா குறைவா நடக்குது. நானும் என்னோட கதையைத்தான் படமாக்க விரும்பி தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லப்போனேன். அப்போ நாங்க ஒரு கதை கேட்டோம்.

அதை டைரக்ட் பண்ண முடியுமான்னு கேட்டாங்க. அந்தக் கதையைக் கேட்டதும், அசந்து போனேன். காரணம், என்னோட முதல் படமா இது இருந்தாதான் நல்லா இருக்கும்னு நினைச்சேன். இந்தப் படத்தோட கதை, திரைக்கதை, வசனம் அருண் ராஜகோபாலன். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியர். அவருக்குள்ள இருந்த திறமையைப் பார்த்தும் பிரமிச்சேன்.

திரைக்கதை ரைட்டிங்கில் கைதேர்ந்தவங்களைப் போல அவரோட ஸ்கிரிப்ட் இருந்துச்சு. இதைப் படமாக்குறதுதான் சவாலா தோணுச்சு. உடனே ஒத்துக்கிட்டேன். இந்த மாதிரி ஸ்கிரிப்ட் டிபார்ட்மென்ட்டை தனியா பிரிச்சிக் கொடுக்கும்போதுதான் பலவித திறமைகள் உள்ளே வரும். அந்தப் படமும் பலவிதங்கள்ல பக்கா ஸ்கிரிப்ட்டோடு அமையும்” என்று வினோத்தே பேச்சை ஆரம்பித்தார்.

“இந்தக் கதையில் அப்படி என்ன விசேஷம்?”

“காட்டுக்குள்ள டிரெக்கிங் போறது இன்னிக்கு யங்ஸ்டர்ஸ் மத்தியில ரொம்பவே ஃபேஷனாகியிருக்கு. அப்படி போகும்போது ரொம்பவே கவனமா, பாதுகாப்பு ஏற்பாடுகளோடு போகணும். இல்லேன்னா உயிருக்கே ஆபத்துங்கிறது நிறைய பேருக்கு தெரிய மாட்டேங்குது. ஆம்பள பசங்க டிரெக்கிங் போயிட்டு பிரச்னையில சிக்கினாலே வெளியே வர்றது கஷ்டம்.

ஒரு பொண்ணு தனியா போயிட்டு மாட்டிக்கிட்டா என்ன ஆகும்கிறதுதான் கதை. டிரெக்கிங் போற அமலா பால், காட்டுல வழி தவறிப்போயிடுறாரு. அப்போ அங்கே அவருக்கு நடக்கிற விஷயங்கள், சந்திக்கிற மனிதர்கள், மிருகங்கள்னு படம் திரில்லாவும் இருக்கும். ஆக்‌ஷன் அட்வெஞ்சராவும் இருக்கும்.”

“நிஜத்துலேயும் டிரெக்கிங் போகிறவங்க என்பதால் அமலா பாலை இந்த ரோலுக்கு தேர்வு பண்ணினீங்களா?”

“அப்படி நினைச்சு பண்ணலை. ‘மைனா’, ‘சாட்டை’ படங்களோட கோ புரொடியூசர் ஜோன்ஸ்தான் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தக் கதைக்கு அமலா பால் பொருத்தமா இருப்பாங்கன்னு அவர் சொன்னார். கதை படிச்சு முடிச்ச பிறகு நானும் இதையேதான் உணர்ந்தேன். அமலாபால் கிட்டே கதை சொன்னதும் ஷூட்டிங்கிற்கு இப்போவே போகலாம்ங்கிற மாதிரிதான் ஆர்வமா வந்தார்.

அவர் டிரெக்கிங் போறது படத்துக்கு பெரிய பலமா அமைஞ்சிருச்சின்னுதான் சொல்லணும். படத்துக்குள்ள அவங்க வந்ததுமே அந்த கேரக்டரையும் அவரையும் தனியா பிரிச்சிப் பார்க்க முடியல. முழு ஈடுபாடு காட்டினாங்க. காட்டுக்குள்ள கேரவனெல்லாம் போக முடியாது. ரெண்டு மூணு கிலோமீட்டர் தூரம் நடந்தே உள்ளே போகணும். காட்டுல சந்திக்கிற எல்லா பிரச்னைகளையும் சந்திச்சாங்க. ஆனா எந்த இடத்துலேயும் முகம் சுழிக்கல. இந்தப் படம் அவங்களோட சினிமா வாழ்க்கையில முக்கிய திருப்பமா இருக்கும்.”

“டெக்னீஷியன்ஸ்?”

“ஜேக்ஸ் பிஜய் இசை அமைச்சிருக்கார். படத்துல ஒரே ஒரு பாட்டுதான். அதுவும் டைட்டில்ல வர்ற மாதிரி இருக்கும். ஒளிப்பதிவு சாந்தகுமார் பண்ணியிருக்கார். இது அவருக்கு முதல் படம். எடிட்டிங் ஜான் ஆப்ரஹாம். அதே போல படத்தோட ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் பற்றி சொல்லியே ஆகணும். படத்துல சேஸிங் காட்சிகள், பலவிதமான ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கு. அது எல்லாமே ரசிகர்களை சீட்டோட நுனிக்கு கொண்டு போற மாதிரி இருக்கும். அதுக்கு முழுக் காரணம் சுந்தர் மாஸ்டர்தான்.”

“விளம்பரத்துறையில் இருந்து வந்ததா சொல்லுறாங்களே, உங்க பின்னணி?”

“இல்லை.  அதுக்கு முன்னாடியே சினிமாவுக்கு வந்துட்டேன். ‘தீ’, ‘பவானி’, ‘மாசி’ ஆகிய  படங்களில் டைரக்டர் கிச்சா சார்கிட்ட உதவியாளரா இருந்தேன். அதுக்குப்  பிறகு ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்துலே அசோசியேட் டைரக்டரா ஒர்க்  பண்ணினேன். இந்தச் சமயத்துலேதான் விளம்பரப் படங்களை இயக்குவதற்கு வாய்ப்பு  கிடைச்சது.

தொடர்ந்து மூன்று விளம்பரப் படங்களை இயக்கினேன். அதுக்கு  அப்புறமும் நிறைய விளம்பரப் பட வாய்ப்பு கள் வந்துச்சு. அதையெல்லாம்  ஏத்துக்கிட்டா, விளம்பரப் படங்கள்லேயே சிக்கிடுவேன்னு தோணுச்சு.  அங்கிருந்து ஒரே ஜம்ப்பா திரும்பவும் சினிமாவுக்கு வந்துட்டேன்.”

- ஜியா