அட்வான்ஸ் புக்கிங்கில் கோகோ மாக்கோ புரட்சி!



“இளைஞர்களுக்கே உரித்தான உத்வேகத்துடன் செயல்படும் ஒவ்வொருவருக்குமான படமாகக் கொண்டாடப் படும் வகையில், காதல், நகைச்சுவை மற்றும் இசை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும், காதலர் தினத்தை ஒட்டிய ஒரு பயண அனுபவத்தைத் தரும் படமாக ‘கோகோ மாக்கோ’ வந்திருக்கிறது” என்கிறார் அறிமுக இயக்குநர் அருண்காந்த்.

இவர் யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை. என்றாலும் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு தயாரித்து நடிக்கவும் செய்துள்ளார். சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா எளிமையாக நடைபெற்றபோது, விழா அரங்கு அருகில் தனது அலுவலகத்தில் இருந்த இயக்குநர் கே.பாக்யராஜ் இந்த இளைஞர் பட்டாளத்தின் வித்தி யாசமான முயற்சியைக் கேள்விப்பட்டு, எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் உடனடியாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதில் நாயகனாக சரத்குமாரின் சகோதரர் மகன் ராம்குமார் நடிக்கிறார். இவர் ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். நாயகிகளாக தனுஷா, சாரா ஜார்ஜ் நடித்துள்ளார்கள். இவர்களோடு சாம்ஸ், ஒய்.ஜி.மகேந்திரா, டெல்லி கணேஷ், அஜய் ரத்னம், சந்தான பாரதி, வினோத் வர்மா, தினேஷ் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது. ஒளிப்பதிவு சுகுமாரன் சுந்தர். எடிட்டிங் வினோத் தர். படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்.

‘‘ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை கோக்கு மாக்காக இளமையாக யோசித்து ரசிகர்களை சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இந்தப்படத்தை எடுத்திருக்கிறேன். கோயமுத்தூர் குசும்பு என்று சொல்வார்களே அதைத்தான் ‘கோகோ மாக்கோ’ என்று தலைப்பாக வைத்துள்ளேன்.காதலர் தினம் அன்று ஹீரோ, ஹீரோயின் ரோடு ட்ரிப் செல்கிறார்கள்.

இவர்களை இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் ஒரு இளைஞர் தன் நண்பருடன் சேர்ந்து பாலோபண்ணி மியூசிக் ஆல்பம் தயாரிக்க திட்டமிடுகிறார். இந்த முயற்சியில் மியூசிக் டைரக்டராக அவர் எப்படி ஜெயிக்கிறார் என்பது படம். 12 நாட்களில் முழுப்படத்தை முடித்திருந்தாலும், பொழுதுபோக்குடன் ஒரு அழுத்தமான சமூகக் கருத்தையும் சொல்லியுள்ளேன்.

‘புளூட்டோ’ என்கிற ஒளிப்பதிவாளராக வரும் சாம்ஸின் பார்வையில் இந்தக்கதை நடப்பதாகக் காட்டியிருக்கிறோம். படம் முழுவதும் ஆங்கிலத்தில் பேசி நடித்திருக்கிறார். வசனங்களை முன்னரே எழுதாமல், காட்சிக்கும் அது நடக்கும் இடத்திற்கும் அந்தக் காட்சியில் பங்குபெறும் கதாபாத்திரங்களுக்கும் ஏற்றவாறு உடனுக்குடன் எழுதி படமாக்கினேன்.

படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே எடுத்திருக்கிறோம். எடிட்டிங்கில் அதிகம் தூக்கியெறியப்படாத படம், அதாவது zero wastage film இதுவாகத்தான் இருக்கும். இந்தப் படத்துக்கு என்றில்லை... சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை இருக்கிறது. கோலிவுட்டில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் நிறையவே இருக்கிறது. என் படத்தைப் பொறுத்தவரை நானே தீர்த்துக் கொண்டேன்.

என்னுடைய இணையதளத்தில் புக்கிங் ஓப்பன் பண்ணிவிட்டேன். ரசிகர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மூன்று தியேட்டர்களை ஆப்ஷனாக கொடுக்கலாம். டிமாண்ட் பொறுத்து தியேட்டர் கிடைக்கும். இதன் மூலம் கலெக்‌ஷனை நானே தியேட்டருக்கு வழங்க முடியும்.
பிப்ரவரி 14, 2019. படம் குறித்த நாளில் வெளியாகவில்லை என்றால், முழுப்பணமும் திரும்பி வந்துவிடும்.

அல்லது, வீட்டிலேயே பார்த்துக் கொள்கிறேன் என்று விரும்பினால், டிக்கெட் விலையான 150 ரூபாயில் 100 ரூபாய் திரும்பப்பெற்றுக் கொண்டு 50 ரூபாயில் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம். இதில் முன்பதிவு செய்ய கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

அறிமுகமான 24 மணி நேரத்தில் 5000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பிரபல நிறுவனங்கள் தியேட்டர் தர சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் பாடல், கதை, திரைக் கதை, ஆர்ட் டைரக்‌ஷன், சவுண்ட் என்ஜினியர், காஸ்டியூமர் என்று 14 துறைகளை நானே கையில் எடுத்துள்ளேன். ஒரு பொறுப்பு கையில் இருந்தாலே நாக்கு தள்ளுகிற நிலையில் அதிக பொறுப்புகள் வகித்தாலும் என்னால் எளிதாக வேலை செய்ய முடிந்தது.

சொந்தமாக போஸ்ட் புரொடக்‌ஷன் கம்பெனி வைத்திருப்பதாலும் நானே தயாரிப்பதாலும் என் ஜாய் பண்ணி இந்தப் படத்தை எடுத்துள்ளேன். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் என் ஜாய் பண்ணி பண்ணினால் சுலபம் என்பதுதான் படத்தோட கருத்து. அந்த வகையில் இந்தப் படத்தை ரசித்து எடுத்துள்ளேன்.

எனக்கு சொந்த ஊர் கோயமுத்தூர். யு டியூப்பில் ஸ்டில் போட்டோகிராபி தொடங்கி பைனல் ஒர்க்கான டி.ஐ எப்படி பண்ணுவது  என்பது வரை கற்றுக் கொண்டேன். இண்டிபெண்டன்டாக கற்றுக் கொண்டால் தான் தனித்துவம் வெளிப் படும் என்பதால் யாரிடமும் உதவியாளராகச் சேரவில்லை. என் கையெழுத்து என் மாதிரி இருந்தால்தான் மதிப்பு. இந்தப் படம் எல்லா ரூல்ஸையும் உடைத்திருக்கும். இன்டர்நேஷனல் குவாலிட்டியில் படம் வந்திருக்கு’’ என்றார்.

- எஸ்