சுட்டிக்குழந்தை இப்போது கட்டிளம் காளை!



நாகார்ஜுனா - அமலா தம்பதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ஹலோ’. இந்தப் படம் ஐம்பது கோடிக்கு மேல் வசூலாகி சாதனை செய்திருந்தது.தற்போது தமிழிலும் அதே பெயரில் வெளியாகிறது.
கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு ரம்யாகிருஷ்ணன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு ஜெகபதிபாபு, அஜெய், சத்யகிருஷ்ணா, அனீஸ்குருவில்லா, வெண்ணிலா கிஷோர்  ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை விக்ரம்.கே.குமார் இயக்குகிறார். இவர் மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’, ‘சூர்யா நடித்த ‘24’ போன்ற படங்களை இயக்கியவர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார் ஸ்ரீ லக்ஷ்மி ஜோதி கிரியேஷன்ஸ் A.N.பாலாஜி.படம் பற்றி நாயகன் அகில்... ‘‘நான் குழந்தையாக நடித்த ‘சுட்டிக் குழந்தை’ படத்தை வெற்றிபெறச் செய்த தமிழக மக்கள் மீது எப்பொழுதும் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. அதே போல் என் அம்மா தமிழ்ப் படத்தில் அறிமுகமாகித் தான் புகழ் அடைந்தார்.

நான் ஏற்கனவே சில படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். ஏன்னா, இந்தப் படம் தமிழில் வெளிவருகிறது. இந்தப் படத்தையும் தமிழ் ரசிகர்கள் வெற்றிபெறச் செய்வார்கள் என்று நம்புகிறேன். ரொமான்டிக், ஆக்‌ஷன், திரில்லர் கலந்த பக்கா கமர்ஷியல் சினிமா இது. இப்படத்தில் எனக்கும் கல்யாணிக்குமான ஆன் ஸ்கிரீன் பிரமாதமா இருக்கும்.

இருவருக்கும் சினிமா பற்றிய புரிதல் இருந்ததால் ரொமான்ஸ் காட்சிகளில் இயல்பாக நடிக்க முடிந்தது. கல்யாணி ரொம்ப ஷார்ப்பான நடிகை. இயக்குநர் சொல்வதை அப்படியே தன்னுடைய ஸ்டைலில் மிக அழகாக வெளிப்படுத்துவார். இந்தப் படத்தின் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளுக்காக இங்குள்ள ஸ்டன்ட் கலைஞர்களுடன் தாய்லாந்து  ஸ்டன்ட் கலைஞர்களும் சேர்ந்து பணியாற்றியுள்ளார்கள்.

படத்தின் ஐந்து பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது. இயக்குநர் விக்ரம் கே.குமார் கடின உழைப்பாளி. காதல், சயின்ஸ் பிக்‌ஷன் ஜானர்ல பண்ணினாலும் வித்தியாசமாக பண்ணக்கூடியவர். ‘ஹலோ’ யூத் ஆடியன்ஸுக்கான கம்ப்ளீட் என்டர்டெயினராக இருக்கும்’’ என்றார்.

- எஸ்