குணமா வாயிலே சொல்லணும்!



“சமீபத்துல ஒரு குழந்தை பேசும் ‘குணமா வாயிலே  சொல்லணும்’ என்ற வீடியோவை பார்த்திருப்பீங்க. அதுதான் ‘லட்டு’ படத்தோட கான்செப்ட்” என்கிறார் இயக்குநர் வஜ்ரவேல் ஆனந்த். இவர் கே.பாலசந்தர் படைப்புகளுக்கு எடிட்டராக பணியாற்றியவர். அவரிடம் படத்தைப் பற்றிகேட்டோம்.‘‘இயக்குநர் கே.பாலசந்தர் சாரிடம் வேலை செய்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும்.

உதவி இயக்குநராக சேர வேண்டும் என்றுதான் கே.பி.சாரை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். ஆனால் எடிட்டிங் பிரிவில்தான் வேலை கிடைத்தது. ‘கல்கி’ படத்தில் உதவி எடிட்டராகவும், கே.பி.சாரின் சின்னத்திரை படைப்புகளில் எடிட்டராகவும் வேலை பார்த்துள்ளேன். படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்வேன்.

‘ஹலோ’ என்னுடைய முதல் படைப்பு. இப்போதுள்ள யங் ஜெனரேஷன் ஷார்ப்பானவங்க. அவங்ககிட்ட நல்லதோ. கெட்டதோ எதை சொன்னாலும் குணமா சொல்லணும். குணமா சொன்னால் ஏற்படும் நன்மை, மூர்க்கமாக சொன்ணால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை  இதில் அழுத்தமாக சொல்லியுள்ளேன். அம்மா இல்லாத இரட்டையர் இருவரை சிங்கிள் பாதர் எப்படி வளர்க்கிறார் என்பதையும் அதை சார்ந்த இன்னும் பல விஷயங்களையும் சுவாரஸியமாக காட்சிப்படுத்தவுள்ளேன்.

கதாநாயகனாக குணா பாபு நடிக்கிறார். இவர் ‘இரும்புத் திரை’, ‘தமிழ் படம் 2.0’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘காளி’ போன்ற ஏராளமான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். குணா அடிப்படையில் ஆக்டிங் ஸ்கூல் மாணவர் என்பதால் ஆக்டிங் சென்ஸ் அதிகமுள்ளவர். இந்தப்  படம் அவரை நாயகனாக முன்னிறுத்தும் படமாக இருக்கும்.நாயகியாக ஸ்வேதா அறிமுகமாகிறார். சென்னை பொண்ணு. சினிமா மீது ஆர்வம்  அதிக
முள்ளவர்.

குழந்தை நட்சத்திரங்களாக விஷ்வேஷ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கேடி என்கிற கருப்பு துரை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இசை ரிஷால் சாய். ‘மகான் கணக்கு’,  ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’, ‘சதுரன்’ போன்ற படங் களுக்கு இசையமைத்துள்ளார். சிதம்பரம் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். ‘கனிமொழி ’ உள்பட ஏழெட்டு படங்கள் பண்ணியவர். ஐரிஸ் புரொடெக் ஷன்ஸ் பி. ராதாகிருஷ்ணன், கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் அமுதா ஆனந்த் தயாரித்துள்ளார்கள்.

கே.பாலசந்தர் சாரின் அடையாளம் பெர்பக்‌ஷன், டைமிங். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் முழுமையா நேர்த்தியா  பண்ணுவார். இந்தப் படத்தை பார்க்கும்போது அவருடைய ஆசிர்வாதம் எனக்கு இருக்கு என்று தெரிந்து கொள்வீர்கள்’’ என்றார் வஜ்ரவேல் ஆனந்த்.
 

- எஸ்