சினிமாவாக ரெடியாகியிருக்கிறது தமிழகத்தை உலுக்கிய பிரபல கொலைவழக்கு!



சென்சாரின் சிலந்தி வலையில் சிக்கித் தவித்த படம், ஒரு வழியாக டைட்டில் மாற்றத்தோடு ரிலீஸ் ஆகியிருக்கிறது. அந்தப் படம்தான் ‘நுங்கம்பாக்கம்’.“சென்னை மாதிரியான ஒரு மெட்ரோபாலிடன் சிட்டியில், பிஸியான ரயில்வே ஸ்டேஷனில் நடந்த கொடூரமான கிரைம் அது. நாட்டையே உலுக்கிப் போட்டுடிச்சு.

அதுபோன்ற ஒரு குற்றம் திரும்ப நடக்கக் கூடாதுங்கிற நோக்கத்தோடுதான் இந்தப் படத்தை எடுத்தேன். சுவாதியோட தனிப்பட்ட வாழ்க்கையோ, ராம்குமாரோட தனிப்பட்ட வாழ்க்கையோ இந்தப் படத்துல கிடையாது. இந்த கொலை எப்படி நடந்தது, ராம்குமாரை எப்படி போலீஸ் பிடிச்சாங்க, இந்த விஷயங்கள்தான் படத்துல இருக்கும். அதேசமயம் வேறு விஷயங்களும் இருக்கிறது” என சஸ்பென்ஸ் வைத்து பேச ஆரம்பிக்கிறார் டைரக்டர் ரமேஷ் செல்வன்.

“இந்த சம்பவம் தொடர்பா மக்கள், மீடியா மூலமா நிறைய தகவல்கள் பரவியது. மக்கள் இந்த சம்பவத்தை எப்படி பார்த்தாங்க, அவங்களோட கண்ணோட்டம் என்னாங்கிறதும் படத்துல சொல்லியிருக்கேன். சென்சார் போர்டுக்கு படம் காட்டினதும் ஏகப்பட்ட கரெக்‌ஷன் சொன்னாங்க. கேரக்டர்கள் பெயர் எல்லாம் மாத்த சொன்னாங்க. பிறகு படம் பெயரும் மாத்த சொன்னாங்க. இதையெல்லாம் பண்ணிட்ட பிறகு இப்போ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கு.

ஒரு உண்மைச் சம்பவத்தை வியாபாரம் பண்ற டைரக்டர் நான் கிடையாது. இதுவரைக்கும் நான் பண்ணின படங்கள்ல நல்ல கருத்துகள் தான் சொல்லியிருக்கேன். யாரோட தனிப்பட்ட வாழ்க்கையையும் நான் படமா எடுக்கல. பொது இடத்துல நடந்த ஒரு சம்பவத்தைத்தான் படமா எடுத்திருக்கேன். இதுபற்றிய விழிப்புணர்வு மக்கள்கிட்ட வரணும்கிறது மட்டும்தான் நோக்கமா இருந்துச்சு.

ஏன்னா, தூத்துக்குடிலேயும் இதுபோல ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதனாலதான் இந்தப் படம் எடுக்கிற எண்ணமே எனக்கு வந்துச்சு. காதலை ஏத்துக்காமபோனா அதுக்காக தண்டனை கொடுக்கிற உரிமை யாருக்கும் கிடையாது.

அவங்களை விட்டு விலகிடணும்கிறதுதான் படத்தோட கன்டென்ட். போலீஸ் தரப்பு, வக்கீல் தரப்பு, மக்கள் தரப்புன்னு மூணு பேரோட பார்வையில இந்தக் கதையை சொல்லியிருக்கேன். இந்தப் படம் ரிலீஸ் ஆகுறதுக்கு தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் முக்கிய காரணம். அவங்க முழு அளவுல எனக்கும் என்னோட படத்துக்கும் துணையாக இருந்தாங்க.

போலீஸ் ஆபீஸரா அஜ்மல் நடிச்சிருக்கார். டைரக்டர் வெங்கடேஷ் வக்கீல் கேரக்டர் பண்ணியிருக்கார். கூத்துப்பட்டறைலேருந்து மனோங்கிற பையன் நடிச்சிருக்கான். ஐராதான் ஹீரோயின்.அடுத்ததாக அசாமைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் பற்றிய படத்தை இந்தியில எடுக்கப்போறேன்.

உலக தடகள சாம்பியன்ஷிப்ல தங்கம் வென்றவர். இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிஞ்சிருச்சி. மலைவாழ் இனத்தைச் சேர்ந்த ஒரு பொண்ணு, உலக அளவுல இந்தியாவோட பெயரை பெருமைப்பட வச்சிருக்கார். அவரோட கதையை படமாக்குறதை பெருமையா நினைக்கிறேன்” என்றார் ரமேஷ் செல்வன்.

- ஜியா