அம்பேத்கராக சமுத்திரக்கனி!



“நான் இயக்கிய முதல் படமான ‘பச்சை என்கிற காத்து’ வெளியாகி ஆறு வருஷம் ஆயிடிச்சி. இன்னும் ரசிகர்கள் என்னைப் பார்க்குறப்போ எல்லாம் அந்தப் படத்தைப் பத்திதான் பேசுறாங்க. குறைந்த பட்ஜெட்டில் எடுத்த அந்தப் படம்தான் சினிமாவில் எனக்கு விசிட்டிங் கார்டு. அடுத்து நான் இயக்கிய ‘மெர்லின்’ படமும் எனக்கு இயக்குநரா நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

என்னோட அந்தப் படங்களைப் பார்த்துட்டுதான் தயாரிப்பாளர் பெவின்ஸ் பால், ‘பற’ படத்தை இயக்குகிற வாய்ப்பைக் கொடுத்தார். என் கிட்டே கதையே கேட்காம, உங்க திறமை தெரியும்னு சொல்லி இந்தப் படத்தை தயாரிக்க அவர் முன்வந்தார்” என்று நிறுத்தி நிதானமாகப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் கீரா.“படத்தோட டைட்டிலே இலக்கியத்தரமா பிரமாதமா வந்திருக்கு!”

“நண்பர்களும் அதுதான் சொல்லுறாங்க. ‘பற’ என்றால் விடுதலை என்கிற பொருளிலும் எடுத்துக்கலாம். என்னுடைய ஒவ்வொரு படமும் வெவ்வேறு ஜானர்லே இருக்கும். இப்ப பண்ணியிருக்கும் ‘பற’  படமும் வித்தியாசமான ஜானர். சென்னையில் சினிமா வாய்ப்பு தேடிய சமயத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்தேன். துறைமுகத்துல வேலை.

அப்போது எங்கிட்ட ஸ்டீபன் என்றவர் க்ளீனராக வேலை பார்த்தார். அவர் சென்னையின் பூர்வகுடி. வசிப்பிடமோ ப்ளாட்பாரத்தில். அவருக்கு ஒரு காதலி. இந்தக் கதைக்கு அந்த க்ளீனர் கதாபாத்திரம்தான் முதல் இன்ஸ்பிரேஷன். மற்றவர்களைப் போல் சமூகத்தில் அங்கீகாரம் மிக்க குடிமகனாக வாழணும்னு ஸ்டீபன் சில விஷயங்களை முன் னெடுக்கிறார்.

அடுத்து, ஆரணி பக்கம் உள்ள தெள்ளந்தி என்ற கிராமத்தில் இருந்து ஒரு இளம் ஜோடி ஊரைவிட்டு ஓடி வருகிறார்கள். அது கம்யூனிச மண்ணாக இருந்தாலும் சாதி கட்சிகளின் அத்துமீறலால் சென்னைக்கு வருகிறார்கள்.

இன்னொரு பக்கம், பணக்காரக் குடும்பத்து பையன் வெளிநாட்டில் வசிக்கிறார். அப்பா மட்டும் சென்னையில் தனிமையில் வசிக்கிறார். அவருக்கு தன்னைப் போல தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணுடன் நட்பு மலர்கிறது. இருவரும் புரிதலுடன் வாழ்க்கை தொடங்க பதிவுத் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

இதற்கிடையே இரவு நேரத்தில் கிளப்பில் ஆடைகளை அவிழ்த்து நடனம் ஆடும் குழுவில் இருக்கும் பஃபூன் கேரக்டர் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார். சமூக போராட்டங்களை முன் நடத்திச் செல்லும் தோழர்களுக்காக வாதாடும் போராளி வழக்கறிஞர் சமுத்திரக்கனி... இப்படி வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கை ஒரு இரவு தொடங்கி மறுநாள் பகலில் முடிவடைகிறது.

இந்த ஒரு நாளில் ஏற்படும் மாற்றங்கள், பிரச்சனைகள், சிக்கல்கள் என்ன? அவர்கள் எப்படி ஒரே நேர்கோட்டில் இணை கிறார்கள்? எல்லோருடைய வாழ்விலும்,  எளிய பிரச்சனை இருந்தாலும் ஒரு கட்டத்தில் பூதாகரமான பிரச்சனையாக எப்படி வெடிக்கிறது? தமிழ் சமூகத்துக்கு நாம் என்ன முன்வைக்கப் போகிறோம் போன்ற கேள்விகளை உள்ளடக்கிய படமாதான் ‘பற’ இருக்கும்!”

“சமுத்திரக்கனின்னாலே போராளின்னு ஆயிடிச்சி...”

“அதுக்கு என்ன பண்ணுறது? இதுமாதிரி கேரக்டர் செய்ய எந்தத் தயக்கமும் இல்லாம ஒப்புக்கற நடிகர் அவர்தான். கனி அண்ணனுக்கு அம்பேத்கர் என்ற போராளி வக்கீல் வேடம். இந்தக் கதையை எழுதும்போதே அம்பேத்கர் கதாபாத்திரத்தில் கனி அண்ணனை மனசில் வெச்சிதான் எழுதினேன். பொதுவா அண்ணல் அம்பேத்கரை இந்திய தேசியப் பார்வையில்தான் பார்க்கிறோம். இதில் தமிழ்தேசியப் பார்வையில் அண்ணலை ஆராய்கிறேன்.

கதை எழுதும்போது கனி அண்ணனை மனதில் வைத்து எழுதினாலும் படப்பிடிப்பு துவங்கியபிறகுதான் அவரைச் சந்தித்தேன். அவருடைய காட்சிகளுக்கான சீன் பேப்பரை மட்டும் வாங்கி படித்துவிட்டு ஓக்கே  சொன்னார். அவருடைய பிஸி ஷெட்யூலுக்கு மத்தியிலும் தேதி கொடுத்து இந்தப் படத்தை நல்ல படியா பண்ணிக் கொடுத்தார்.

சமுத்திரக்கனி அண்ணனின் கால்ஷீட்டுக்கு டிமாண்ட் அதிகமாவே இருக்கு. ஆனால் அவர் எவ்வளவு எளிய மனிதர் என்பது அவருடன் பழகியவர்களுக்குத் தெரியும். முகம் பார்த்துப் பழகாமல் எல்லோரையும் நேசிக்கக் கூடியவர்.

அந்த வகையில் மனிதர்களை நேசிக்கும் கதைகளைத்தான் பண்ணுகிறார். அதனால் எங்களைப் போன்ற இயக்குநர்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை. அவருடைய இன்வால்வ்மென்ட் எங்களுக்கு உதவியாக இருந்தது. படம் முழுக்க நின்னு விளையாடி இருக்கிறார். அவர் வந்த பிறகு படத்தோட வேல்யூ அதிகமாயிடிச்சி.”

“வேற யாரெல்லாம் இருக்காங்க?”

“ஸ்டீபன் கேரக்டர் நித்திஸ் வீரா வர்றார். ‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடிக்குழு’ உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆரா என்ற கேரக்டரில் கேரளாவைச் சேர்ந்த வெண்பா பண்ணியிருக்கிறார். பஃபூனாக முனீஸ்காந்த். இளம் காதலர்களாக சாந்தினி, சாஜுமோன் வர்றாங்க.

வயதானவர்களாக பத்திரிகையாளர் குமரேசன், கவிஞர் நாச்சியாள் சுகந்தி வர்றாங்க. இவர்களோடு முத்துராமன், சூப்பர்குட் சுப்ரமணி, வின்னர் ராமச்சந்திரன்னு நிறைய பேர் இருக்கிறார்கள். படத்துல நிறைய நட்சத்திரங்கள் இருந்தாலும் அவரவருக்கான முக்கியத்துவமும் தேவையும் இருக்கும்.”

“இசை?”“விமல்ராஜ். ஏற்கனவே சில படங்கள் பண்ணியிருக்கிறார். இந்தப் படம் மியூசிக் டைரக்டருக்கு  திருப்புமுனையா இருக்கும். படத்துல மொத்தம் நான்கு பாடல்கள். பாடல்களை சினேகன், உமாதேவி, சாவி எழுதியுள்ளார்கள்”
“மற்ற டெக்னீஷியன்ஸ்?”

“சிபின் சிவன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். நான் இயக்கிய சில டாக்குமெண்டரிகளுக்கு அவர்தான் ஒளிப்பதிவு பண்ணியிருந்தார். கடுமையான உழைப்பாளி. சினிமாவில் கேமராமேன்கள் கேமராவைத் தூக்கமாட்டார்கள்.

வியூ பாயிண்ட்ல உட்கார்ந்து வேலை செய்வார்கள். என்னுடைய கேமராமேனுக்கு ஸ்டடி கேம் தேவையே இருக்காது. அவரே எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணுவார். சொந்தமா ஹெலிகேம் வைத்திருக்கிறார். அதையும்  அவரே இயக்குவார்.

எடிட்டிங் சாபு ஜோசப். ‘வல்லினம்’ படத்துக்கு சிறந்த எடிட்டருக்கான விருது பெற்றவர். ஆர்ட் டைரக்‌ஷன் நா.கருப்பையா. தயாரிப்பாளர் பெவின்ஸ் பால் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. ஏற்கனவே ‘கலிங்கா’ படத்தைத் தயாரித்தவர். விஜயா ராமச்சந்திரன் இணைந்து தயாரித்துள்ளார். இது காதலர்களுக்கான ஆட்டமும் கொண்டாட்டமுமான படமாக இருக்கும். ஆனால் மனதை வலிக்கச் செய்யும் காட்சி களும் படத்தில்
உண்டு.”

“சென்ஸார் இப்போ ரொம்ப கெடுபிடி ஆகிட்டிருக்கே?”

“இது மிக மிக அபத்தமானது. அரசாங்கம் ஏன் படைப்பாளிகளைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. படைப்பாளிகள் மட்டுமில்லாமல் சமூக மாற்றத்துக்கான கருத்துக்களை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி கருத்து சொல்வதால் ஆட்சியோ, அதிகாரமோ பறிபோய்விடாது. ஒரு படைப்பு மக்கள் மத்தியில் போய்ச் சேருவதற்கு முன்பே அதைத் தடுப்பது தவறு.

மேலை நாடுகளில் நிர்வாணக் காட்சிகள் கதைப்படி அமைகிறது. அப்படியே அனுமதிக்கிறார்கள். இங்கு அப்படியான காட்சிகளை மறுதலிக்கிறார்கள். ஆபாசம் என்ற பெயரில் ஏ, யு ஏ, என்று பல பிரிவுகளாக வகுத்தும் வயது வித்தியாசத்தைப் பிரித்தும் தான் சர்டிபிக்கேட் தருகிறார்கள். அப்படி இருந்தும் சென்சார் செய்யப்பட்ட படங்களை ஏன் தடுக்கிறார்கள் என்று தெரியலை. இது போன்ற நடவடிக்கைகள்  படம் ஓடுவதற்கு உதவியாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.”

“அடுத்து?”
“அடுத்தடுத்து படம் பண்ணிக்கிட்டே இருக்க நான் அவசரப்படலை. மெதுவா, பொறுமையாதான் செய்யுறேன். இப்போ ‘குறவன்’ என்ற படத்தை இயக்குகிறேன். கதை, தயாரிப்பு நிறுவனம் முடிவாகிவிட்டது. இந்தப் படத்திற்காக முன்னணி நடிகர்
களிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.”

- சுரேஷ்ராஜா