சர்கார்



சரவெடி தீபாவளி!

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனின் பிரும்மாண்டத் தயாரிப்பு. விஜய் - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் கூட்டணியில் ‘துப்பாக்கி’, ‘கத்தி’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படைப்பு என்று ரிலீஸுக்கு முன்பே ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய படம் ‘சர்கார்’.ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நூறு சதவிகிதம் பூர்த்தி செய்திருக்கிறது.

என்.ஆர்.ஐ. பிசினஸ்மேன் சுந்தர் ராமசாமி, அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வருகிறார். செல்லும் நாடெங்கும் வெற்றிக்கொடி நாட்டும் அவரால், தங்களுக்குப் பிரச்சினை வருமோ என்று இந்தியத் தொழில் நிறுவனங்கள் எல்லாம் கதிகலங்குகின்றன. சுந்தர் ராமசாமியோ ‘ஓட்டு போடத்தான் வந்திருக்கிறேன், வேறெதற்காகவும் அல்ல’ என்று சொன்னதும்தான் நிம்மதி அடைகிறார்கள்.

வாக்குச்சாவடியில் திடீர் திருப்பம். சுந்தர் ராமசாமியின் ஓட்டை கள்ள ஓட்டாக வேறு யாரோ போட்டு விட்டார்கள். தன்னுடைய ஒரு ஓட்டுக்காக சட்டரீதியாகப் போராடுகிறார் சுந்தர் ராமசாமி. இந்தப் போராட்டத்தின் விளைவாக தற்கால அரசியலின் கீழ்மைகளை எதிர்கொள்கிறார். மக்கள் படும் பிரச்சினைகளை நேரடியாகப் பார்க்கிறார்.

சுந்தர் ராமசாமி ஓட்டு போட்டாரா, மக்களுக்கு என்ன செய்தார் என்பதுதான் விறுவிறு ‘சர்கார்’.அமெரிக்காவில் அழகிகளோடு ஆட்டம் போடும் போதும் சரி, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோடு சடுகுடு ஆடும்போதும் சரி, விஜய் சும்மா ‘கில்லி’யாக நிற்கிறார். ஒரே ஒரு ஓட்டு என்பது எத்தகைய மாற்றங்களை விளைவிக்கும் என்று ஆதாரபூர்வமாக அவர் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும் வாதங்களின்போது கரகோஷங்களை அள்ளுகிறார்.

மின்னல் வேக ஸ்டன்ட் காட்சிகளைப் பார்க்கும்போது இவருக்கு வயசே ஆகாதா என்று ஆச்சரியப்பட வைக்குமளவுக்கு சுறுசுறுப்பு. நடனத்திலும் இன்னும் அதே வேகம். ‘சர்கார்’ படத்தை விஜய்யின் ஒன்மேன் ஷோ என்று சொன்னாலும் மிகையாகாது.

கீர்த்தி சுரேஷுக்கு பாந்தமான வேடம். பப்ளி அழகில் கிறங்க வைக்கிறார். ‘என் மீது உனக்கு ஈர்ப்பு இருக்கிறதா?’ என்று செந்தமிழில் விஜய்யிடம் காதலைக் கோரும் இடம் அழகோ அழகு. இரண்டாம் பாதியில் இவரது கேரக்டருக்கு இன்னமும் இயக்குநர் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

முதலமைச்சராக வரும் பழ.கருப்பையா அசால்ட்டான பாடிலேங்குவேஜிலும், திருத்தமான வசன உச்சரிப்பிலும் திகில் ஏற்படுத்துகிறார். அவருடைய விசுவாசமான நண்பராக ராதாரவி செம மிரட்டு மிரட்டுகிறார். விஜய்யுடனான நேருக்கு நேர் வாதங்களில் ராதாரவி போட்டி போட்டு தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

படத்தின் சர்ப்ரைஸ் கேரக்டர் வரலட்சுமி. முதல் பாதி முழுக்க போனிலேயே அரசியல் நடத்துபவர், நேரடியாகக் களமிறங்கி விஜய்யோடு நடத்தும் பரமபத விளையாட்டு பிரமாதம். கண்களிலேயே வில்லத்தனத்தைக் காட்டி, ‘சபாஷ், சரியான போட்டி’ என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.

பிரேம்குமார், துளசி, யோகிபாபு, ராஜேஷ், லிவிங்ஸ்டன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் படம் நெடுக வருகிறார்கள். அவரவர் பங்களிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மிரட்டல் என்றால், பாடல்கள் அதகளம். ‘சிம்டாங்காரன்’ பாட்டுக்கு தியேட்டரே சேர்ந்து விஜய்யோடு ஆடுகிறது. ‘ஒரு விரல் புரட்சி’, இளைஞர்களின் தேசியகீதம் ஆகியிருக்கிறது. ‘ஓ எம் ஜி பொண்ணு’ பாட்டு மனசுக்கு இதம்.

கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, கர் பிரசாத்தின் எடிட்டிங், ஆர்ட் டைரக்டர் சந்தானத்தின் கலை என்று டெக்னிக்கல் டீம் படத்தின் பிரும்மாண்ட தரத்துக்கு உதவியிருக்கிறது.காலத்தின் தேவையறிந்து, இந்திய ஜனநாயகத்தின் வலிமையை உரத்து ஒலிக்கிறது ‘சர்கார்’.