விமானத்தில் கருகிய கனவு!



மின்னுவதெல்லாம் பொன்தான் 6

இன்றும் கூட சாலையில் எங்கேயாவது “கேட்டேளே அங்கே.... அதை பார்த்தேளா இங்கே....” என்கிற பாடலைக் கேட்டதுமே, அப்படியே நின்று முழுப்பாடலையும் கேட்டுவிட்டுச் செல்கிறவர்கள் இருக்கிறார்கள்.நாற்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாட்டுதான் இப்போதைய ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ ரேஞ்சுக்கு வைரல் ஹிட்டு.

‘அன்னக்கிளி’ படத்தில் இரட்டை இயக்குநர்கள் தேவராஜ் - மோகன் இயக்கத்தில்தான் முதன்முதலாக இளையராஜா தமிழுக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து ‘பாலூட்டி வளர்த்த கிளி’, ‘உறவாடும் நெஞ்சம்’ என்று அதே இயக்குநர்களோடுதான் பணியாற்றினார். முதன்முறையாக வேறு ஓர் இயக்குநரோடு அவர் கைகோர்த்த படம்தான் ‘பத்ரகாளி’. அதில் இடம்பெற்ற பாடல்தான் ‘கேட்டேளே அங்கே...’

செம குத்துப் பாட்டான இந்தப் பாட்டு முடிந்ததுமே, ‘ரிக்கார்ட் டான்ஸாமில்லே ரிக்கார்ட் டான்ஸ்... இது போதுமா?’ என்று ராணி சந்திரா, சிவக்குமாரைக் கேட்பார். வியர்க்க விறுவிறுக்க ஆடி கிறுகிறுத்துப் போன சிவக்குமார் சொல்லும் பதிலும், படத்தின் ரெக்கார்டிலேயே இடம்பெற்றிருந்தது.

எனக்குத் தெரிந்து மடிசார் அணிந்து இப்படியொரு புயல் ஆட்டத்தை அதற்கு முன்போ, பின்போ வேறெந்த நடிகையும் ஆடியதில்லை. இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர், அச்சு அசலாக ராணிசந்திராவை அக்ரஹாரத்துப் பெண்ணாகவே மாற்றியிருந்தார்.

1965ல் ‘மிஸ் கேரளா’ பட்டம் வாங்கியவர் ராணிசந்திரா. அழகிப் போட்டியில் பட்டம் வென்றவருக்கு திரையுலகின் கதவுகள் திறக்கப்படும் வழக்கம் அப்போதே இருந்தது. 1968ல் ‘அஞ்சு சுந்தரிகள்’ என்கிற மலையாளப் படம் மூலமாக 19 வயதில் சினிமாவுக்கு வந்தார். அடுத்து அவருக்கு நின்று மூச்சு வாங்கக்கூட நேரமில்லாத அளவுக்கு வாய்ப்புகள் குவிந்தன. எப்போதும் படப்பிடிப்பிலேயே இருந்தார்.

மலையாளத்தில் மிகக்குறுகிய காலத்தில் அதிகம் படங்கள் நடித்த நடிகை அவர். அதாவது வருடத்துக்கு சுமார் பத்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இருப்பினும் அவருக்கு தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. ‘பொற்சிலை’, ‘தேன் சிந்துதே வானம்’ போன்ற படங்களில் அவருக்கு சின்னச் சின்னதாகத்தான் கேரக்டர்கள் அமைந்தன. பெரிய வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.

அப்படி கிடைத்த வாய்ப்புதான் ‘பத்ரகாளி’. அப்போது தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டிங் இயக்குநராக கோலோச்சிக் கொண்டிருந்த ஏ.சி.திருலோகச்சந்தர், அக்ரஹாரத்துக் கதை ஒன்றை எழுதிவிட்டு, பொருத்தமான ஹீரோயினைத் தேடிக்கொண்டிருக்க அவரது கண்களில் ராணி சந்திரா நடித்த மலையாளப்படம் ஒன்று மாட்டியது. ‘இவர்தான் நான் தேடிக் கொண்டிருக்கும் பத்ரகாளி’ என்று கூறிவிட்டு அப்படியே அள்ளிக்கொண்டு வந்தார்.

அப்போது சிவக்குமார் பெரிய நட்சத்திரம். பெரிய இயக்குநரின் இயக்கத்தில், பெரிய நட்சத்திரத்தின் ஜோடியாக நடிக்கிறோம் என்று மகிழ்ச்சியின் உச்சத்துக்குப் போனார் ராணி சந்திரா.

வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவின் நெம்பர் ஒன் நடிகையாக உருமாறிவிடலாம் என்கிற நம்பிக்கையை படப்பிடிப்பிலும் பெற்றார். படம், தயாரிப்பில் இருந்தபோதே ராணிசந்திரா பற்றிய செய்திகளையும், படங்களையும் வெளியிடுவதில் பத்திரிகைகள் பெரும் ஆர்வம் காட்டின.

காலம் அத்தனை எதிர்பார்ப்புகளையும் மெய்யாக்கி விடுமா என்ன? அது ஒரு கணக்குப் போடுமே?

கலை நிகழ்ச்சி ஒன்றுக்காக தன்னுடைய குடும்பத்தினரோடு துபாய்க்குச் சென்றிருந்தார் ராணி சந்திரா. சென்னை திரும்புவதற்காக மும்பையில் மாற்று விமானத்தில் ஏறினார். அந்த விமானம் டேக்-ஆஃப் ஆகும்போதே விபத்தில் சிக்கி எரிந்தது. பயணிகள் 95 பேரும் இறந்துபோனார்கள். ராணிசந்திரா, அவரது தாயார் மற்றும் இரண்டு தங்கைகளும் அப்படியே கருகிப் போனார்கள்.

‘பத்ரகாளி’ படத்தில் மேற்கொண்டு அவர் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிக்க வேண்டி இருந்தது. அவரைப் போன்ற சாயல் கொண்ட புஷ்பா என்கிற துணை நடிகையை வைத்து படத்தை எடுத்து முடித்தார் திருலோகச்சந்தர்.

பொதுவாக ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஒருவர் இறந்துவிட்டால், அந்தப் படம் வெளியானபிறகு பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்பது அப்போது வரையிலான தமிழ் சினிமா சென்டிமென்ட். அந்த சென்டிமென்டை உடைத்து ‘பத்ரகாளி’ பிரமாதமான வெற்றி பெற்றது.

மறைந்துவிட்ட நடிகை ‘கேட்டேளே அங்கே’ என்று திரையில் ஆடியபோது, கூட சேர்ந்து ஆடவேண்டிய ரசிகர்கள் கண்ணீர் மல்க படம் பார்த்தார்கள். ராணி சந்திராவின் நடிப்பும் பெரும் பாராட்டுகளை அள்ளியது.

ஒருவேளை அவர் உயிரோடு இருந்திருந்தால், அவர் கனவு கண்டமாதிரியே தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக ஆகியிருக்கக் கூடும்.இன்றும் எங்கேயாவது ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ என்று பி.சுசீலாவின் குரல் உருகும்போது எனக்கு ராணிசந்திராவின் திடீர் மரணம் நினைவுக்கு வந்து, அந்த நாள் முழுக்கவே சோகமாகி விடுகிறது.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்