த்ரிஷாவை பார்த்ததே இல்லை! த்ரிஷாவாக நடித்த கவுரி சொல்கிறார்



‘96’ படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருப்பவர் கவுரி கிருஷ்ணன். சென்னை பெண்ணான இவர் இப்போது பெங்களூரில் காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறார்.
“கேரளாவின் வைக்கம்தான் நான் பிறந்த ஊர். சென்னையில் பிளஸ் டூ வரை படிச்சேன். இப்ப பெங்களூருல பி.ஏ ஜர்னலிஸம் படிக்கிறேன். இது ரெண்டாவது வருஷம். அப்பா, அம்மா சென்னையில் இருக்காங்க. நானும், அண்ணனும் பெங்களூருல தங்கி படிக்கிறோம். லீவு கிடைச்சா போதும், சென்னைக்கு வந்துடுவேன்” என்று பேச ஆரம்பித்தார்.

“ஜர்னலிஸம் படிக்கிற உங்களுக்கு சினிமாவில் எப்படி வாய்ப்பு கிடைச்சது?”

“டைரக்டர் பிரேம் குமாரின் ‘96’ படத்துக்கு ஆடிஷன் நடக்குதுன்னு கேள்விப்பட்டேன். துபாயில் இருக்கும் கிருஷ்ணகுமார், பிரேம்குமாரோட நெருங்கிய நண்பர். அவர் மூலமா எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சது.

முதல்ல ஆடிஷன் நடந்தது. பிறகு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்தாங்க. ரெண்டுலயும் நான் ஓக்கே ஆனேன். முதல் காட்சி கும்பகோணத்தில் இருக்கிற ஸ்கூல்ல எடுத்தாங்க. நானும், ஆதித்யா பாஸ்கரும் நடிச்சோம். பர்த் டே காட்சி அது. ரெண்டு பேருமே ரொம்ப நேச்சுரலா நடிச்சோம்.”

“ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கு?”

“ஷூட்டிங் நடக்கிறப்பவே, இந்த ஸ்கிரிப்ட் ஜனங்களுக்கு ரொம்ப பிடிக்கும்; எங்க கேரக்டர் பெரிய அளவில் ரீச் ஆகும்; படம் பெரிய ஹிட்டடிக்கும்னு நம்பிக்கை இருந்தது. இப்ப அது நடந்திருக்கு. கேரளா, பெங்களூரு, தமிழ்நாடுன்னு நான் எங்கே போனாலும், ஆடியன்ஸ் என்னை நல்லா அடையாளம் கண்டுக்கிட்டு பேசறாங்க. நிறைய செஃல்பி எடுக்கிறாங்க. இந்த வரவேற்பைப் பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
“த்ரிஷா என்ன சொல்றாங்க?”

“விஜய் சேதுபதி சாரை மீட் பண்ணிட்டேன். இன்னும் த்ரிஷாவை மீட் பண்ணலை. அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கலை. படத்தில் ரெண்டே ரெண்டு காஸ்ட்யூமில், டான்ஸ் பண்ணாம, கிளாமர் பண்ணாம, பிரமாதமா நடிச்சு பேர் வாங்கிட்ட த்ரிஷாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இந்த விஷயத்தை அவங்களை நேரில் பார்த்து சொல்லணும்னு ஆசை. அது எப்ப நிறைவேறும்னு தெரியலை.”

“அடுத்து?”

“இப்ப தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்துக்கிட்டிருக்கு. ஆனா, இன்னும் ஒன்றரை வருஷம் நான் காலேஜில் படிக்க வேண்டியிருக்கு. லீவு போட வசதியா இருந்து, நல்ல கேரக்டர் கிடைச்சா மட்டும்தான் நடிப்பேன். ஸ்கிரிப்ட்டும், என் கேரக்டரும் நல்லா இருந்தா போதும்.

சப்போர்ட்டிங் கேரக்டரா இருந்தாலும் நடிப்பேன். ஆனா, என்னை ஹீரோயினா நடிக்கச் சொல்லி கேட்கிறாங்க. காலமும், நேரமும் என்ன தீர்மானிக்குதோ அதன்படிதான் முடிவெடுக்கணும். இப்படித்தான் நடிப்பேன், இந்தக் கேரக்டர் மட்டும்தான் பண்ணுவேன்னு அடம்பிடிக்க மாட்டேன்.

தமிழ் சினிமா தகுதியுள்ள யாரை வேணும்னாலும் தன் தலைமேல் தூக்கி வெச்சு கொண்டாடும். எனக்கு முதல் படத்துலயே இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு. ஆடியன்ஸ் கொடுத்த அந்த கவுரவத்தை கடைசிவரை ரொம்ப கவனமா காப்பாத்துவேன். மற்றபடி என்னைப்பற்றி வர்ற காஸிப்புகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பலை.”

- தேவராஜ்