மங்கிஸ்தா கிங்கிஸ்தாவுக்கு சர்வதேச அங்கீகாரம்!



நடனத்தை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான படம் ‘கூத்தன்’. புதுமுகம் ராஜ்குமார் ஹீரோவாக நடித்த இந்தப் படத்துக்கு பாலாஜி இசையமைத்திருந்தார். இவர் ஷாம் நடித்த ‘இன்பா’, பாக்யராஜின் ‘துணை முதல்வர்’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.

‘கூத்தன்’ படத்துக்காக டி.ராஜேந்தர் பாடிய ‘மங்கிஸ்தா கிங்கிஸ்தா’ பாடல் இணையத்தில் வைரலாகப் பரவியது. கவுண்டமணியின் வசனங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பாடல் தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த பாடல்களுக்கே உலக  இசை ரசிகர்கள் ராப் வெர்ஷன் பாடல்களைஉருவாக்குவார்கள். அதுபோல் இப்போது பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜூலியா கிரிஷ்டல் ‘மங்கிஸ்தா கிங்கிஸ்தா’ பாடலை தன் குரலில் பாடி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

உலக அளவில் இப்போது இந்தப் பாடல் ராப் ரசிகர்களிடையே பெரிய அளவில் ஹிட்டடித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் பாலாஜியிடம் பேசினோம்.‘‘கடந்த சில வருடங்களாக கன்னடத்தில் பிஸியாக இருந்ததால் தமிழில் தொடர்ந்து படம் பண்ணமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ‘கூத்தன்’ இசைக்கு முக்கியத்துவமுள்ள படம் என்பதால் உடனடியாக கமிட் பண்ணினேன். வாய்ப்பளித்த தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன், இயக்குநர் வெங்கி ஆகியோருக்கு என் நன்றி எப்போதும் இருக்கும்.

‘மங்கிஸ்தா கிங்கிஸ்தா’ பாடலை டி.ராஜேந்தர் சார் பாடும்போதே ஹிட்டாகும் என்று நினைத்தேன். பொதுவா கவர் வெர்ஷன் பாடலை ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் பாடியுள்ளார்கள். ஏ.ஆர்.  ரஹ்மான், அனிரூத் ஆகியோரின் பாடலை ஆங்கிலம் தெரிந்த அமெரிக்கர்கள், லண்டன்வாசிகள் பாடியுள்ளார்கள். ‘முக்காலா முக்காபுலா’ கவர் வெர்ஷன் பாடலை கனடா பெண் பாடியுள்ளார். ‘பல்லேலக்கா’ பாடலை லண்டன் இசைக்குழு பாடியுள்ளது.

‘மங்கிஸ்தா கிங்கிஸ்தா’ பாடலைப் பாடிய பிரேசிலைச் சேர்ந்த ஜூலியாவுக்கு போர்ச்சுகீசிய மொழி மட்டுமே தெரியும். ஆங்கிலமும் தெரியாது. இசைக்கலைஞர்களுக்கு என்று உலகளவில் ஒரு குழு இருக்கிறது. அதில் நான் உறுப்பினர். அவரும் ஒரு உறுப்பினர் என்பதால் இணையம் வழியாக சவுண்ட் டிராக் வாங்கி பாடி அசத்தினார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் இதுவரை எந்த ஒரு தமிழ்ப் பாடலுக்கும் கவர் வெர்ஷன் பாடியதில்லை. அந்த வகையில் ‘கூத்தன்’ பாடல் உலகளவில் ஹிட்டாகியிருப்பது மிகப் பெரிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது.தற்போது ‘கத்திரி வெயில்’, ‘இருளி’ உள்பட சில கன்னடப் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். எனக்கு தென்னிந்திய மொழிகள் அத்துப்படி என்பதால் எந்த மொழியிலும் என்னால் உணர்வுபூர்வமாக இசையமைக்க முடியும்’’ என்றார்.

- ராஜா