விஜய் சேதுபதியோடு மீண்டும் அஞ்சலி!நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேடிப்பிடித்து நடிப்பது என்றால் விஜய்சேதுபதிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அந்த வரிசையில் விஜய் சேதுபதி பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாயகி அஞ்சலி. இயக்கம் அருண்குமார். இவர் விஜய்சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கியவர்.

இந்தப் படத்தை கே.புரொடக்‌ஷன் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் யுவன் சங்கர் ராஜா, இர்பான் மாலிக் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இதே கூட்டணி தயாரித்த படம்தான் சமீபத்தில் ஹிட்டடித்த ‘பியார் பிரேமா காதல்’ படம்.கே புரொடக்‌ஷன்ஸ் ‘பாகுபலி-2’ படத்தை வெளியிட்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிறுவனம் சத்ய சிவா இயக்கத்தில் ராணா, ரெஜினா,  சத்யராஜ் நடிக்கும் ‘மடை திறந்து’ என்ற படத்தையும், தெலுங்கில் ‘1945’ என்ற படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் முப்பது நாட்கள் நடை பெற்று முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில்  40 நாட்கள் இடைவிடாமல் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ளது.

விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டில் படமாகிறது என்பது சிறப்பம்சம்.‘‘விஜய் சேதுபதி படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களாக இருக்கும். அதே மாதிரி இந்தப் படத்தின் கதையும் சூழலும் வித்தியாசமாக அமைந்துள்ளதால் படப்பிடிப்பை வெளி நாடுகளில் நடத்துகிறோம். இது அழுத்தமான கதையும் கமர்ஷியலும் கலந்த படமாக இருக்கும்.

ஒரு புதிய படத்துக்கான கதை எழுதும்போது அதிகம் மெனக்கெடல் இருக்க வேண்டும்.  அப்படி இந்தப் படத்துக்கு அதிகமான மெனக்கெடலுடன் கதை எழுதினேன். விஜய் சேதுபதி-அஞ்சலி இருவரும் ‘இறைவி’ படத்தில் ஏற்கனவே ஜோடியாக நடித்ததால் நல்ல புரிதலுடன் நடித்துள்ளார்கள்.

இசை யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தோட வெற்றியில் அவருடைய பங்கும் அதிகமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக், எடிட்டர் ரூபன் என்று ஏராளமான திறமைசாலிகள் படத்துல இருக்காங்க. படத்துக்கான தலைப்போடு மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்’’ என்கிறார் இயக்குனர் அருண்குமார்.

- எஸ்ரா