தமிழுக்கு இன்னொரு கனவுக்கன்னி!‘மதுர வீரன்’ படத்தைத்  தொடர்ந்து வி ஸ்டுடியோஸ் ஸ்ரீசரவண பவா பிலிம்ஸ் உடன் இணைந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்கும் படம் ‘கண்ணாடி’. இதில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இவர் ‘மாநகரம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘மாயவன்’ உட்பட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர்.

 நாயகியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். இந்தியில் புகழ் பெற்ற நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, பரிணீதி சோப்ரா, வாணி கபூர் போன்ற ஏராளமான வெற்றிப் பட ஹீரோயின்களை அறிமுகப்படுத்திய ‘யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் ஆன்யா சிங்கை ‘கைதி பேண்ட்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து ‘யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்’  நிறுவனம் ‘கண்ணாடி’ படத்தின் கதையை ஆன்யா சிங்கிற்கு பரிந்துரைத்து ‘வி ஸ்டுடியோஸ்’ உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆன்யா சிங்கை அறிமுகம் செய்கின்றனர்.
 
முக்கிய வேடங்களில் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இந்தப் படத்தை  இயக்குகிறார். ‘‘ஹாரர் படங்கள் என்றாலே சம்பிரதாயமாக வந்துசெல்லும் வழக்கமான திகில் காட்சிகளாக இல்லாமல் ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்துள்ளேன்.

டைரக்‌ஷன் துறையில் நுழைவதற்கு முன் ஏராளமான படங்களுக்கு விஷுவல் எபெக்ட் காட்சிகளை அமைத்துள்ளேன். அந்த அனுபவத்தை வைத்து இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை உண்மைக்கு நிகராக வடிவமைத்துள்ளேன்.

டெக்னிக்கலாக இந்தப் படம் பேசப்படும். அந்த வகையில் இசையமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் பி.கே வர்மா இருவரும் இணைந்து தங்களுடைய ‘தி பெஸ்ட்’ கொடுத்துள்ளார்கள். ரொமான்ட்டிக் த்ரில்லராக உருவாகி வரும் இந்தப் படத்தில் முழுமையான விஷுவல் ட்ரீட்டை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்’’ என்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு.

- எஸ்