கூல் சுரேஷுக்கு மூணு ஜோடி!காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பது கோலிவுட்டுக்கு புதுசு இல்லை. அந்த வரிசையில் ‘கூல்’ சுரேஷ் ‘சித்திரமே சொல்லடி’ படத்தில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். கோபிகா நாயர் இதன் நாயகி. இவர்களுடன் தெனாலி, மகாநதி சங்கர், தேனி முருகன், விஜய் கணேசன், சுமதி, அஞ்சலி டேவி, அப்சர் மற்றும் பெரேரா ஆகியோர் நடித்துள்ளனர்.  

ஒளிப்பதிவு மகி பாலன்.  இசை ஆதிஷ் உத்ரியன். இந்தப்படத்தை எம்.ஜி.எம் புரொடக்‌ஷன் சார்பில் கௌரி சங்கர் தயாரித்து இயக்குகிறார். துப்பறியும் பாணியில் உருவாக்கபட்டுள்ள இந்தப் படம் சென்னை, ஏலகிரி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

‘‘பெண்கள் பாலியல் தொல்லைகளிலிருந்தும், கேலி செய்பவர்களிடமிருந்தும் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தப் படம் உணர்த்தும்’’ என்ற இயக்குநர், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஒரு கோரிக்கை வைத்தார்.

‘‘முன்பெல்லாம் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் ரிலீஸ் ஆகும்போது மூன்று தர வரிசைகள் இருந்தன. அதில் மூன்றாவது தர வரிசையானது மிகக் குறைந்த விலையுடைய டிக்கெட்டுகளாகவும், மற்ற தரவரிசைகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கைகளை உடையதாகவும் இருக்கும். அதிகப்படியான மக்கள் திரையரங்குக்கு வந்தனர்.

ஆனால் இப்போது ஒரே ஒரு தரவரிசை மட்டுமே உள்ளது. அதை மாற்றி மீண்டும் முதலாம், இரண்டாம், மூன்றாம் தரவரிசைகள் என்று நிர்ணயித்து நாற்பது அல்லது ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட்டுகளை விற்றால் அதிகப்படியான மக்கள் மீண்டும் திரையரங்குக்கு  வர வாய்ப்புள்ளது; திரையுலகம் மீண்டும் செழிக்க வாய்ப்புள்ளது’’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

படத்தின் நாயகன் கூல் சுரேஷிடம் அவருடைய அனுபவத்தைக் கேட்டோம். ‘‘இந்தப் படத்தில் எனக்கு மூன்று ஜோடி. மூணு பேர் என்றதும் ‘வண்ணத்திரை‘ நடுப்பக்கத்துக்கு ஸ்டில்ஸ் தேறுமா என்று யோசிக்காதீங்க. இது மீ டூ கலாச்சாரக் காலம் என்பதால் கொஞ்சம் அடக்கியே வாசித்துள்ளோம்.  முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னுடைய கேரக்டர் நிஜத்துக்கு அருகில் இருக்குமளவுக்கு இருக்கும்’’ என்றார்.

- எஸ்