ரகுவரன் எனக்கு பெரியப்பா!



மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘செக்கச் சிவந்த வானம்’, வசூல் சாதனை புரிந்திருக்கிறது. பெரிய நட்சத்திரங்கள் ஏராளமாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் நிறைய திறமையான புதுமுகங்களும் அறிமுகமாகியிருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் ரோகித் டெனிஸ். இவர், மறைந்த நடிகர் ரகுவரனின் தம்பி சுரேஷின் மகன். அறிமுகமான முதல் படமே ஹிட் அடித்த மகிழ்ச்சியில் இருந்த ரோகித்தைச் சந்தித்தோம்.“பெரியப்பா போல பெரிய நடிகராகணும் என்பதால்தான் சினிமாவுக்கு வந்துள்ளீர்களா?”

“பெரியப்பாவோடு ஒப்பீடு செய்வது பெரிய வார்த்தை. என்னுடைய குடும்பம் சினிமா பின்னணி உள்ள குடும்பமாக இருந்தாலும் பத்தாம் வகுப்பு வரை நடிப்பு ஆர்வம் இல்லாத வனாகத்தான் இருந்தேன். அப்போதெல்லாம் சினிமா பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவதுதான் என்னுடைய உலகம். ப்ளஸ் டூ டைம்லதான் சினிமா மீது ஆர்வம் வந்தது.

அப்போது வீட்டுல டிகிரிக்குப் பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
லயோலாவில் விஸ்காம் முடித்தபிறகு ஜெயந்தி மாஸ்டரிடம் நடனம், நடிப்பு பயிற்சி என்று சினிமாவுக்காக என்னை தயார்படுத்திக் கொண்டேன். அப்பா ஸ்டூடியோ வைத்திருப்பதால் சினிமாக்காரர்களிடம் பழக்கம் இருந்தது. என்னுடைய போட்டோவை தனக்குத் தெரிந்த சர்க்கிளில் கொடுத்தார். அப்படித்தான் என் போட்டோ மணிரத்னம் சார் டீம் கையில் கிடைத்தது.”

“மணிரத்னம் என்ன சொன்னாரு?”

“அவரைப் பத்தி கேட்கும் போதே பயம் கலந்த மரியாதை எனக்குள் தானாக வந்து விடும். ஆனால், செட்டுக்கு போனவுடன் பயம் பறந்துபோய் சுறுசுறுப்பு வந்துவிடும். அதுக்குக் காரணம் மணி சார்தான். எல்லா நடிகர்களையும் ஒரே மாதிரிதான் நடத்துவார். பெரிய நடிகர், புதுமுகம் என்ற வேறுபாடெல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது.

செட்டில் அவருடைய வேகத்தைப் பார்த்து மிரண்டு போனேன். இப்போதுள்ள இளம் இயக்குநர்களுக்கு டஃப் தரும்வகையில் சுறுசுறுப்பாக வேலையில் மும்முரம் காட்டுவார். காட்சியைப் பற்றி நடிகருக்கு சந்தேகமே வராத அளவுக்கு முதலிலேயே தெளிவாக விளக்கம் கொடுத்துவிடுவார். அவரைப் பொறுத்தவரை சீன் கரெக்ட்டா வரணும். அதில்தான் அவருடைய கவனம் இருக்கும்.

ஸ்கிப்ரிட்டைத் தாண்டி அவர் பேசுவது அபூர்வம்.சீக்கிரத்தில் யாரையும் பாராட்டமாட்டார். நல்லா பண்ணினால் ‘குட் ஜாப்’ என்று சொல்வார். பொதுவா மணி சார் படங்களில் நிறைய கதாபாத்திரங்கள் வரும். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்து தெரியுமளவுக்கு காட்சிகளை வடிவமைப்பார். அப்படி நான் கூட்டத்தில் ஒருத்தனாக நடித்திருந்தாலும் அரவிந்த் சாமியைத் துப்பாக்கியால் சுடும் காட்சியில் அடையாளம் கிடைத்தது.”

“படப்பிடிப்பில் மறக்கமுடியாத சம்பவம்?”

“ஒரு நாள் பிரகாஷ்ராஜ், தியாகராஜன், ஜோதிகா காம்பினேஷன் காட்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் நான் ரெஸ்ட் ரூம் போயிருந்தேன். நான் இல்லாததால் ஷாட் எடுக்க தாமதமானது.

எல்லாரும் எனக்காக வெயிட் பண்ணுகிறார்கள் என்று தெரிந்தது. மணி சார் என்ன சொல்வாரோ என்று பயந்தேன். ஆனால் அந்தக் காட்சி எடுத்து முடித்தபிறகு தோளில் தட்டிக்கொடுத்தார். ஆரம்பத்தில் படப்பிடிப்புக்கு போகும்போது என்னுடைய பெரியப்பாதான் ரகுவரன் என்று யாருக்கும் தெரியாது.

விஷயம் தெரிந்தபிறகு தியாகராஜன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் பெரியப்பாவுடன் தங்களுக்கு இருந்த நட்பை பகிர்ந்துகொண்டார்கள். இணை இயக்குநர் சிவா ஆனந்த், ஜோ மேடம் என்று எல்லோரும் நல்லா பழகியதோடு உதவியாகவும் இருந்தாங்க. அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய் ஆகியோர் ஃப்ரெண்ட்லியாகப் பழகினார்கள். மல்டி ஸ்டார் படமான இதில் நான் பார்த்து வியந்த விஷயம், யாரும் பந்தா இல்லாமல் பழகியது.”

“பெரியப்பா நடிச்ச படங்களில் உங்களுக்குப் பிடிச்ச படம் எது?”

“சின்ன ஹீரோ படமோ, பெரிய ஹீரோ படமோ எந்த படம் பண்ணினாலும் பெரியப்பா தனித்துத் தெரிவார். தலைமுடியைக் கோதி தனித்துவமான குரலில் பேசும்போது தியேட்டரில் க்ளாப்ஸ் அள்ளும். ‘பாட்ஷா’ மாதிரி சூப்பர் டூப்பர் படங்கள் பெரியப்பாவுக்கு புகழ் சேர்த்திருந்தாலும் தனிப்பட்ட விதத்தில் எனக்கு ‘புரியாத புதிர்’ படம் ரொம்ப ஸ்பெஷல். குறிப்பாக ‘ஐ... நோ...’ என்ற டயலாக்.... சான்ஸே இல்லை.”

“பெரியப்பா மாதிரி நீங்களும் வில்லன் ரூட்டை செலக்ட் பண்ணியது மாதிரி தெரியுதே?”

“வில்லன், ஹீரோ என்று பிரித்துப் பார்க்கமாட்டேன். ஹீரோ, வில்லன் என்பது ஒருவருடைய நடிப்பைப் பொறுத்து அமையும் விஷயம். உண்மையைச் சொல்வதாக இருந்தால் எனக்கு ஹீரோவாகப் பண்ணுவதில் அவ்வளவா விருப்பமில்லை. ஹீரோ கான்செப்ட் என்னிடம் இல்லை. எந்த கேரக்டர் கொடுத்தாலும் பண்ணுவேன். நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்று பெயர் எடுத்தால் போதும்.”

“அடுத்து?”

“நிறைய அழைப்பு வந்துள்ளது. தற்போது இரண்டு படங்களை கமிட் பண்ணியுள்ளேன்.
இது தவிர ஜான் மகேந்திரன் இயக்கும் வெப் சீரிஸ் பண்றேன்.”

- சுரேஷ்ராஜா