பேய்க்கும் பெண்ணுக்கும் சண்டை!



“எனக்கு ஹாரர் படம் பண்ணணும் என்ற ஐடியா இல்லை. நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டரிடமிருந்து வந்ததால் கதை சொல்லப் போகுமிடமெல்லாம் ‘உங்க மாஸ்டர் மாதிரி பேய்க்கதை வெச்சிருக்கீங்களா’ என்றுதான் கேட்டார்கள்.

பேய்ப் படங்களில் வேலை பார்க்காதவங்களே பேய்க் கதைகள் பண்ணும்போது ‘முனி’, ‘காஞ்சனா’ போன்ற பேய்ப் படங்களில் வேலை பார்த்த நான் ஏன் பண்ணக்கூடாது என்று ரெடி பண்ணிய ஸ்கிப்ரிட்தான் ‘சண்டிமுனி’ படம்” என்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஹாரர் படம் பண்ணுவதற்கான காரணத்தை முன் வைத்து பேச ஆரம்பித்தார் அறிமுக இயக்குநர் மில்கா எஸ்.செல்வகுமார்.

“மற்ற பேய்ப் படங்களிலிருந்து உங்கள் படம் எப்படி மாறுபடுகிறது?”

“ஒரு பெண்ணுக்கும் பேய்க்கும் நடக்கும் யுத்தம்தான் படம். அவர்களுக்கிடையே சிக்கித் தவிக்கும் ஹீரோ பிரச்னைகளிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதை காமெடி கலந்து சொல்லியுள்ளேன்.பேய்ப் படமாக இருந்தாலும் ஃபேமிலியுடன் படம் பார்க்க வரலாம். பழிவாங்குவது, பயமுறுத்துவது போன்ற காட்சிகள் இருக்காது. குலதெய்வ வழிபாடு முக்கியம் என்பது ஹைலைட்டாக இருக்கும்.”

“என்ன சொல்கிறார் உங்க ஹீரோ?”

“நட்ராஜ் சாருடன் டிராவல் பண்ண ஆரம்பத்துல பயந்தேன். பாலிவுட்டில் சிறந்த கேமராமேன் என்று பெயர் எடுத்தவர். ‘சதுரங்க வேட்டை’ மாதிரியான ஹிட் படங்கள் மூலமாக தமிழிலும் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. அவரிடம் கதை சொல்லும்வரைதான் பயம் இருந்தது. அதன்பிறகு பயம் போய்விட்டது. ஸ்டில்ஸ் ஷூட், படப்பிடிப்பு என்று சகல இடங்களிலும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்கு இது புது ஜானர் படம் என்பதால் இன்வால்வாகி பண்ணியிருக்காரு.”

“மனிஷா யாதவ்?”

“இந்தக் கதைக்கு லக்ஷ்மி மேனனைத்தான் மைண்ட்ல வெச்சிருந்தேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. தமிழ்ல மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கலாம்ன்னு இருக்கேன். இந்த சமயத்தில் ஹாரர் படம் பண்ணணுமா என்ற குழப்பத்துல இருக்கிறேன் என்று சொல்லி மறுத்துவிட்டார். அடுத்து ரம்யா நம்பீசன் மேடத்துக்கு கதை சொன்னேன்.

‘கதை நல்லா இருக்கு; ஆனா இந்த ஜானர்ல நான் பண்ணியதில்லையே’ என்று தயங்கினார். நான் கதை சொன்ன சமயத்தில் அவர் திலீப் விவகாரத்தில் தீவிரமாக இருந்ததால் நாங்களே வெளியே வந்துட்டோம். அடுத்து வரலட்சுமி மேடம் கதை கேட்டார். கதையைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார். கதையில் சின்ன மாற்றம் செய்யச் சொன்னாங்க.

அதை ஏற்றுக் கொண்டால் கதை டிஸ்டர்ப் ஆகும்ன்னு சொல்லி வேற சாய்ஸ் பார்க்க ஆரம்பித்தேன்.ஹீரோயினுக்கு அல்லாடிக் கொண்டிருந்த வேளையில்தான் ‘ஒரு குப்பைக் கதை’ படம் பார்த்தேன். அதில் மனிஷா யாதவ் நடிப்பு சிறப்பாக இருந்தது. உடனே அவரைத் தொடர்பு கொண்டு கதை சொன்னேன். அவங்களுக்கு தமிழ் தெரியாது. எனக்கு ஆங்கிலம் தெரியாது. தனக்கு இருந்த தமிழ் நாலெட்ஜில் கதை கேட்டாங்க.

கதை பிடித்திருந்ததால் ஒரே கட்டமாக கால்ஷீட் கொடுத்தாங்க. படத்தில் அவங்களுக்கு டீச்சர் ரோல். லாரன்ஸ் சார் படங்களில் இருக்கும் வழக்கமான பில்டப்பை ஹீரோயினுக்கு கொடுத்துள்ளேன். இந்தப் படத்துக்குப் பிறகு மனிஷாவை நிறைய ஃபேமிலி படங்களில் பார்க்கலாம்.”
“மற்ற நடிகர்கள்?”

“யோகி பாபு, சாம்ஸ், மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர், அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ள செந்தில், சாந்தி, ஆனந்த்னு நிறைய பேர் இருக்கிறார்கள். இதில் யோகி பாபு பற்றிச் சொல்லவேண்டும், இப்போது அவர் இல்லாத படங்கள் மிகக் குறைவு. பிஸி மேன்.

யோகி பாபுவை எனக்கு நண்பராகத்தான் தெரியும். நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் டி.வி. நிகழ்ச்சிகளில் நடித்துக் கொண்டிருந்தோம். நான் சன் டி.வி.யில் சூப்பர் நிகழ்ச்சியிலும் யோகி பாபு இன்னொரு தொலைக்காட்சியில் சந்தானம் டீமிலும் இருந்தார். தினமும் சந்தித்துக் கொள்வோம். ஒரே ரூம்ல தங்குவோம். அந்த நட்புக்காகவே நான் கூப்பிட்டதும் மறுப்பு சொல்லாமல் ‘நடிக்கிறேன் ப்ரோ’ என்று சொன்னார். சூப்பர் சுப்பராயன் வில்லனா பண்றார். படத்துல அவர் வில்லனா இருந்தாலும் யாரையும் பழி வாங்கமாட்டார். ஏன்னா, படத்துல பாசிடிவ் கேரக்டர்ஸ்தான் இருக்காங்க.”

“பாடல்கள் எப்படி வந்திருக்கு?”
“ரிஷால் சாய் மியூசிக் பண்ணியிருக்கிறார். ‘மகான் கணக்கு’, ‘விருதன்’, ‘நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க’ உட்பட சில படங்களில் ஒர்க் பண்ணியிருக்கிறார். இது தவிர கன்னடம், தெலுங்குப் படங்களும் பண்ணியுள்ளார். நீண்டநாள் நண்பர் என்பதால் என்னுடைய டேஸ்ட் எப்படி இருக்கும் என்று அவருக்குத் தெரியும். அதே மாதிரி அவரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்ற வித்தை தெரிந்திருந்ததால் பாடல்களை சிறப்பாக வாங்க முடிந்தது.

பாடல்களை வா.கருப்பன் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் பி.ஆர்.ஓ. மெளனம் ரவி சார் பாடல் சான்ஸ் கேட்டு தன் நண்பருக்காக சிபாரிசு பண்ணினார். பாடல்களைக் கேட்டுவிட்டு வெகுவாகப் பாராட்டியதோடு இவருக்கே எல்லா பாடல்களையும் கொடுங்க என்றார். அவர் சொல்லிய அந்த வார்த்தை பாடல்கள் மீது கூடுதல் நம்பிக்கை கொடுத்தது.

செந்தில் ராஜகோபால் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ உள்பட சில படங்கள் பண்ணியிருக்கிறார். கேமராமேன் புதியவராக இருப்பதால் நட்டி சார் ஏதாவது சொல்வாரோ என்று பயந்தேன். அப்படி எதுவும் நடக்கல. கேமராமேன் நட்டி சார் பாராட்டும் அளவுக்கு சிறப்பாகப் பண்ணியுள்ளார். ஒரு படத்தில் ஹீரோ தலையீடு இருக்கிறது என்றால் நல்லா இல்லை என்றால்தான் பிரச்னை தலைதூக்கும். என்னுடைய கேமராமேன் சிறப்பாகப் பண்ணியதால் பிரச்னை வரவில்லை. தயாரிப்பு நிறுவனம் சிவம் மீடியா ஒர்க்ஸ் அதிகப் பொருட் செலவில் தயாரித்துள்ளது.”

“உங்களைப் பற்றி சொல்லுங்களேன்?”

“சொந்த ஊர் திருநெல்வேலி. கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் அசிஸ்டென்ட்டா சேரவேண்டும் என்ற ஆசையில் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே சென்னைக்கு வந்துவிட்டேன். ஆனால் அவரிடம் ‘அவ்வை சண்முகி’ படத்தில் தனி உதவியாளராக வேலைக்கு சேரும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. பிறகு, ஒளிப்பதிவாளர் மணிகண்டன் சாரிடம் கேமராமேன் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன்.

அந்தக் காலகட்டத்தில் சூரியின் நட்பு கிடைத்தது. நாங்கள் இருவரும் மில்கா, பில்கா என்று பெயரில் நடிக்க முயற்சி செய்தோம். சூரிக்கு ‘வெண்ணிலா கபடிக் குழு’ வாய்ப்பு கிடைத்து வேற லெவலுக்கு போய்விட்டார். எனக்கு நடிப்பு செட்டாகவில்லை. ராகவா லாரன்ஸ் மாஸ்டரிடம் உதவி இயக்குநர் சான்ஸ் கேட்டேன். ‘முனி-3’, ‘காஞ்சனா-3’ படங்களில் வேலை பார்த்தேன்.

இப்போ மாஸ்டர் நடிக்கும் ‘காஞ்சனா-4’ படத்திலும் வேலை செய்யச் சொன்னார். எனக்கு வாய்ப்பு கிடைத்த விஷயத்தைச் சொன்னதும் வாழ்த்தி அனுப்பினார். இந்தப் படத்தில் மாஸ்டரிடம் வேலை பார்த்த அனுபவம் கை கொடுத்துள்ளது. மாஸ்டர் அசிஸ்டென்ட் நல்லா பண்ணியிருக்கிறார் என்ற பெயர்தான் எனக்கான விருது.”

- சுரேஷ்ராஜா