மின்னுவதெல்லாம் பொன்தான்!என் உயிர்த் தோழனின் கதை!

பாரதிராஜாவிடம் எத்தனையோ உதவி இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களில் பலரை அவரே நடிகராக்கி யிருக்கிறார், பலர் இயக்குநராகி யிருக்கிறார்கள், என்றாலும் கே.பாக்யராஜுக்குப் பிறகு அவருக்குப் பிடித்த உதவி இயக்குநராக இருந்தவர் பாபு.“டேய் இவ்வளவு வேகமாக வேலை பார்த்து என்னடா சாதிக்கப் போற” என்று அவரே கடிந்துெகாள்கிற அளவிற்கு சுறுசுறுப்பானவர் பாபு.

பாபுவே கதையும், வசனமும் எழுதிய படம்தான் ‘என் உயிர்த் தோழன்’. பாபுவின் கதையைப் படமாக்க முடிவு செய்த பாரதிராஜா, அதில் பாபுவையே ஹீரோவாகவும் நடிக்க வைத்தார். 1990ல் வெளிவந்த இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே இளையராஜா இசையில், கங்கை அமரனின் வரிகளில் சூப்பர்ஹிட்.

முதல் படத்திலேயே ஒரு சுறுசுறுப்பான கட்சித் தொண்டராக வாழ்ந்து காட்டினார் பாபு. இருந்தாலும் ‘என் உயிர்த் தோழன்’ மற்ற பாரதிராஜா படங்களை ஒப்பிடுகையில் சுமாரான வெற்றிதான்.ஆனால் -“யார் இந்தப் பையன்?” என்று தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் தேட வைத்தார் பாபு.அந்தப் படம் வெளிவந்த பிறகு அவர் நடிப்பதற்காக 14 படங்கள் வரிசை கட்டி காத்திருந்தன. வேறு எந்தவொரு ஹீரோவுக்குமே இப்படியொரு வரவேற்பு முதல் படத்திலேயே கிடைத்திருக்காது.

ஹீரோவாகி விட்டோம் என்று பழசை மறக்காமல் தன்னுடைய இடத்துக்கு பொன்வண்ணனை உட்கார வைத்துவிட்டுத்தான் பாரதிராஜாவிடமிருந்து விடைபெற்றார்.அவரது நடிப்பில் அடுத்து வெளிவந்த படம் ‘பெரும் புள்ளி’.‘புது வசந்தம்’ படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு இயக்குநர் விக்ரமன் இயக்கிய படம்.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு. எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்கள் ஹிட்டென்றாலும், ஏனோ சரியாக ஓடவில்லை.பீம்சிங்கின் மகன் கோபி பீம்சிங் இயக்கத்தில் ‘தாயம்மா’, தொடர்ந்து ‘பொண்ணுக்கு சேதி வந்தாச்சு’ என்று கிட்டத்தட்ட ஓராண்டுக்குள்ளேயே பாபுவின் நடிப்பில் நான்கு படங்கள் வெளிவந்தன.

‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படம்தான் அவரை யாருமே வாழ்த்த முடியாத நிலைமைக்குக் கொண்டு சென்றது.படத்தின் ஒரு சண்டைக் காட்சி. உயரமான இடத்திலிருந்து பாபு குதிக்கவேண்டும். ஹீரோவுக்கு ரிஸ்க் எடுக்க படப்பிடிப்புக் குழுவினர் விரும்பவில்லை.

பாபுவின் தோற்றத்திலிருந்த டூப் ஒருவர், பயிற்சி எடுத்துக் கொண்டு ரிகர்ஸல் எல்லாம் செய்து குதிக்கத் தயாராகியிருந்தார்.ஆனால் -சினிமாவில் நிலைக்க வேண்டுமென்றால் ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்த பாபு, “நான்தான் குதிப்பேன்” என்று அடம் பிடித்தார்.

ஒட்டுமொத்த படக்குழுவும் பாபுவை சமாதானப்படுத்த முயற்சி செய்தது. “ஹீரோவாகிட்டா இந்த ரிஸ்க்கெல்லாம் எடுக்கணும்; எனக்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுறாங்கன்னு கேள்விப்பட்டா ரசிகர்களுக்கு என் மேலே மரியாதை வராது” என்றார்.அடம் பிடித்து உயரத்தில் இருந்து குதித்தபோது, எல்லோரும் பயந்தமாதிரியே விபத்து. டைமிங் மிஸ்ஸாகி விழுந்ததில் அவரது முதுகெலும்பு நொறுங்கியது.உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அன்று விழுந்தவர்தான். அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை.25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டது. அதன்பிறகு பாபு நடமாடி யாருமே பார்க்கவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வார இதழில் பாபுவின் கண்ணீர்ப் பேட்டியை வாசித்து மனமுருகிய நடிகர் விஜய் அவருக்கு 2 லட்ச ரூபாய் உதவியாக வழங்கினார்.

மேலும் சில ஹீரோக்களும், சினிமாத் துறையினரும் வெளியே தெரியாமல் அவருக்கு பணரீதியாக உதவிக் கொண்டிருந்தனர்.இயக்குநரும், நடிகருமான பொன்வண்ணன் நீண்டகாலமாக பாபுவுடன் இருந்தார். உறவினர்கள் கைவிட்ட நிலையில் நண்பர்கள்தான் பாபுவைப் பராமரித்தார்கள்.இரண்டாவது நபரின் உதவி யில்லாமல் அவரால் எதுவுமே செய்ய முடியாமல் பெரிதும் துன்பப்பட்டார்.

“நான் அந்த விபத்திலேயே போயிருக்கணும். இப்போ தினம் தினம் சாகுறேன்” என்று உருக்கமாக பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமா நூற்றாண்டு விழா நடந்தபோது, அந்த  விழாவுக்கு பாபுவை அழைத்துவந்து பெரும் தொகையைத் திரட்டி நிதியாகக் கொடுக்க  பொன்வண்ணன் ஏற்பாடு செய்தார். ஏனோ, பாபுவுக்கு அது பிடிக்கவில்லை. அந்த  விழாவுக்கே அவர் வரவில்லை.
இப்போதும் அவர் எங்கேயோ இருக்கிறார்.ஆனால் -எங்கிருக்கிறார், யாருடன் இருக்கிறார் என்கிற விபரம் தெரியவில்லை. தெரிந்தவர்களும் ஏனோ சொல்லத் தயங்குகிறார்கள்.

சினிமா என்பது வண்ணமயமான ஒரு துறை. எப்படியோ ஒரு வாய்ப்பு கிடைத்தால் எங்கேயோ போய்விடலாம் என்கிற நம்பிக்கையில்தான் வருடாவருடம் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கோடம்பாக்கத்துக்கு வருகிறார்கள்.

அவர்களில் ஒரு சிலர் எப்படியோ நட்சத்திரமாகவும் ஆகிறார்கள்.
நட்சத்திரமாகி விட்டால் மட்டும் போதாது. கிடைத்த அந்தஸ்தை தக்கவைக்க மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அன்று மட்டும் பாபு, டூப் போட சம்மதித்திருந்தால்?

ஒருவேளை இன்று ‘பஞ்ச்’ டயலாக் பேசி, அரசியல்வாதிகளை மிரளவைக்கும் அளவுக்குக் கூட உயர்ந்திருப்பார்தான்.காலம் யாரை எப்போது எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பது யாருக்குத் தெரியும்?

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்