யூ டர்ன் : விமர்சனம்



திகில் பாலம்!

ஒரு சின்ன சஸ்பென்ஸை வைத்து இரண்டு மணி நேரம் தடதடக்க வைத்திருக்கிறார்கள். அடுத்த காட்சியை யூகிக்க முடியாத அதிரடித்  திருப்பங்களைத் தருவதில் பிரும்மாண்ட வெற்றியை எட்டியிருக்கிறது ‘யூ டர்ன்’.பயிற்சிப் பத்திரிகையாளரான சமந்தா, சென்னை  வேளச்சேரி மேம்பாலத்தில் நடக்கும் விபத்துகள் குறித்து பத்திரிகையில் எழுதுவதற்கு முயற்சி செய்கிறார். அது தொடர்பான  விவரங்களைத் தேடிச் செல்லும் போது அவர் சந்திக்க நினைத்த நபர்கள் அடுத்தடுத்து இறந்து கொண்டிருக்கிறார்கள். மர்ம மரணத்துக்கான  காரணம் என்ன, கொலையாளி யார் போன்ற கேள்விகளுக்கு திகிலாக பதில் அளிக்கிறது திடுக் திரைக்கதை.

படம் முழுக்க நிறைந்திருக்கும் சமந்தா காதல், பாசம், பயம் ஆகிய உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். நடக்கும் தொடர்  மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதைத் தடுத்தே தீருவேன் என சபதம் பூண்டிருந்தாலும், ‘அம்மா பயமாயிருக்கும்மா...’ என்று  அவர் சொல்லும்போது நமக்கே அடிவயிறு கலங்குகிறது.காவல்துறை அதிகாரிகளாக வருகிற ‘ஆடுகளம்’ நரேன் மற்றும் ஆதியின் நடிப்பு  சிறப்பு. எதையாவது சொல்லி வழக்கை முடித்தால் போதும் என்று நினைக்கும் ‘ஆடுகளம்’ நரேன், வழக்கை முடிக்கவேண்டும் என்பதை  விட உண்மையைக் கண்டறியவேண்டும் என்று துடிக்கிற ஆதி. ஒரே துறையில் இருந்தாலும் அதற்குள் இருவேறு மனநிலைகளைத்  தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். பூமிகா, நரேன், ராகுல் ரவீந்திரன் ஆகியோர் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி படத்துக்கு  பலம் சேர்த்திருக்கிறார்கள்.

நிகேத் பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது. அநாவசியமாகப் பயமுறுத்தாமல்  இதயத்துடிப்பை எகிற வைக்கிறது பூர்ணசந்திர தேஜஸ்வியின் பின்னணி இசை.மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை  என்றாலும்,ஒரு புள்ளியளவு கதையை வைத்துக்கொண்டு ஒரு முழுநீளப் படத்துக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைக்க முடியும்  என்பதைக் காட்டியிருப்பதோடு, சாலை விதிகளை மீறி நாம் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட எவ்வளவு பெரிய இழப்புகளையும்  வலிகளையும் ஏற்படுத்தும் என்பதைச் செவிட்டில் அடித்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பவன்குமார்.படம் முடிந்து வெளியே  வரும்போது சமந்தாவின் அழகு மற்றும் அருமையான நடிப்பு, பூமிகாவின் தாய்ப்பாசம், நரேனின் தவிப்பு ஆகியவற்றை மீறி  சாலைவிதிகளை மீறக்கூடாது என்கிற எண்ணம்தான் மனதில் ஆழமாகப் பதிகிறது.