தியேட்டருக்கு கூட்டத்தைக் கூட்ட ‘கூத்தன்’ நவீன டெக்னிக்!



புதுமுகம் ராஜ்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘கூத்தன்’. நாயகிகளாக ஸ்ரீஜிதா, சோனால், கீரா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன்  நாகேந்திர பிரசாத், முல்லை, கோதண்டம், பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜூனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், ஸ்ரீரஞ்சனி,  பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என திரையுலகப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு பாலாஜி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மாடசாமி. தயாரிப்பு நீல்கிரீஸ் முருகன்.‘‘இது சினிமாவை பின்னணியாகக்  கொண்ட படம். சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலைச் சொல்லும் படம் இது.  சினிமாவைப் பின்னணியாகக் கொண்டு இதுவரை நிறைய படங்கள் வந்திருந்தாலும், இந்தப் படம் புதிய கோணத்தில், இதுவரை இல்லாத  துணை நடிகர்களின் வாழ்க்கையைப் பேசும் படமாக இருக்கும்’’ என்ற இயக்குநர் ஏ.எல்.வெங்கி, தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகனை  அறிமுகம் செய்து வைத்தார்.

‘‘இந்தப் படத்தின் மூலம் என் மகனை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு பிரமாண்டமான படம் பார்க்கும் உணர்வைத் தர நினைத்து இந்தப்  படத்தைத்  தயாரித்துள்ளேன். எந்த விஷயத்திலும் ஏதாவது வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று நினைப்பவன் நான். தமிழ்நாட்டில்  சின்ன படங்கள் ஓடுவது மிகப்பெரும் விஷயமாகிவிட்டது. அதை மாற்றி இந்தப் படத்தை அனைவரிடமும் கொண்டு செல்லவும், இதை  வெற்றிப்படமாக்கவும் டிக்கெட் முறையில் புது முறையை அறிமுகப்படுத்த உள்ளேன்.

ஒரு புதிய ஐடியாவாக படத்தின் டிக்கெட்டை நானே என் நண்பர்கள் மூலமாகவும் என் நலம் விரும்பிகள் மூலமாகவும் விற்பனை  செய்யஉள்ளேன். என்னுடைய இந்த முயற்சிக்கு எனது நண்பர்கள் அனைவரும் ஒத்துழைக்கிறார்கள். ஒரு சின்ன படத்தை 5 லட்சம் பேர்  பார்த்தால் அது ஹிட் படம். என் நண்பர்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் அளவு டிக்கெட் விற்கிறேன். இதை அவர்கள் சந்தைப்படுத்துவார்கள்  . ஒவ்வொரு கட்டமாக இதை  நடைமுறைப்படுத்துவேன். இதன்மூலம் பார்வையாளர்களை நேரடியாக நாங்கள் சந்தித்து தியேட்டருக்கு  அழைத்து வருவோம். டிக்கெட் விற்பனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’’ என்றார்.

- எஸ்