ரட்சகன்



டைட்டில்ஸ் டாக் 84

 ப்ரவீன் காந்தி


உலகின் பெரும்பான்மையான மக்கள் நேசிக்கும் ரட்சகன் இயேசு. மக்களின் பாவங்களைச் சுமக்க மனித வடிவில் பிறப்பெடுத்த தேவதூதர்.  இத்தகைய நம்பிக்கை கிறிஸ்தவத்தில் மட்டுமல்ல, பல்வேறு மதங்களிலும் உண்டு. எனவே ‘ரட்சகன்’ என்பவன், கடவுளாகத்தான் இருக்க  வேண்டும் என்கிற அவசியமில்லை. அவர் மனிதராகவும் இருக்கலாம். தன் சமூகத்தைச் சார்ந்த அத்தனை பேரின் நலன்களையும்  உத்தேசிக்கும் ஒருவரை ‘ரட்சகன்’ என்று அழைக்கலாம்.

தனிப்பட்ட முறையில் உங்கள் ஒவ்வொருவரையும் காத்த ‘ரட்சகன்’ யாராவது நிச்சயம் இருப்பார்.என்னுடைய முதல் ரட்சகன் இயக்குநர் பிரியதர்ஷன். அவரிடம் உதவியாளராக இருந்த காலத்தில்தான் எனக்கு நான் இயக்குநர் என்கிற  நம்பிக்கையையே ஏற்படுத்திக் கொண்டேன். அவர்தான், ‘நீங்க இனியும் அசிஸ்டென்டா இருக்க வேண்டாம். நேரடியாக படம் பண்ணுங்க.  அதுக்கான தகுதி உங்களுக்கு இருக்கு’ என்று ஊக்கப்படுத்தியவர்.என்னுடைய 22வது வயதிலேயே இந்த நம்பிக்கையை உருவாக்கினார்.  உற்சாகமாக ஊக்கம் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் என் பெயரை சிபாரிசு செய்தவரும் அவர்தான்.

அப்போது ஷங்கர் சார், குஞ்சுமோனுக்கு படம் இயக்காத காலகட்டம். நல்ல ஓர் இயக்குநரைத் தேடிக்கொண்டிருந்தார். நான் சரத்குமாரை  மனதில் வைத்து ‘மதர் இண்டியா’ என்கிற கதையை யோசித்திருந்தேன். இதை குஞ்சுமோன் போன்ற பிரும்மாண்ட தயாரிப்பாளர்தான்  தயாரிக்க முடியும். அவரிடம் கதை சொல்ல முயற்சிக்க என்னால் உள்ளே நுழையக்கூட முடியவில்லை. பிரியதர்ஷன் சாரிடம்  விஷயத்தைச் சொன்னேன். அவர்தான் அவருடைய காரிலேயே என்னை குஞ்சுமோன் சார் ஆபீசுக்கு அழைத்துச் சென்றார். அப்போது  குஞ்சுமோன் அலுவலகத்தில் இல்லை என்பதால் சந்தித்து கதை சொல்ல முடியவில்லை.

சில நாட்கள் கழித்து குஞ்சுமோனும், பிரியதர்ஷனும் யதேச்சையாக ஏர்போர்ட்டில் சந்தித்தார்கள். அவரிடம் என்னைப் பற்றி பிரியதர்ஷன்  சார் மிகவும் உயர்வாகச் சொல்லியிருக்கிறார். அந்த அடிப்படையில்தான் இருபது ஆண்டுகளுக்கு முன்பே 15 கோடி ரூபாய் செலவில்  ‘ரட்சகன்’ இயக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ‘ரட்சகன்’ என்று என் முதல் படத்துக்கு டைட்டில் வைத்தது எத்தனை பொருத்தம்?குஞ்சுமோன் சார் பொதுவாக காலை 7 மணிக்குத்தான் கதை கேட்பார். என்னுடைய ‘மதர் இண்டியா’ கதையை தொடர்ந்து ஆறுநாள்  கேட்டார். அதன்பிறகு, ‘வேற ஏதாவது லைன் இருக்கா?’ என்று கேட்டபோது ஏழாவது நாள் நான் சொன்ன லைன்தான் ‘ரட்சகன்’.என் வாழ்வின் முதல் ரட்சகன் பிரியதர்ஷன் சார் என்றால், அடுத்த ரட்சகன் குஞ்சுமோன் சார்தான். இவர்கள் இருவரும் இல்லையென்றால்  டைரக்டர் பிரவீன்காந்தி இல்லை.

1996ல் ‘ரட்சகன்’ படத்துக்கு பூஜை போட்டோம். அப்போது என் பெற்றோர் என்னிடம் சொன்ன வார்த்தை இன்னமும் நினைவில்  இருக்கிறது. ‘‘நாங்க இனிமேல் உனக்கு அம்மா, அப்பா கிடையாது, குஞ்சுமோன் சார்தான். ஏன்னா நாங்க உன்னை எந்தவிதத்திலும்  என்கரேஜ் பண்ணியதில்லை. ஆனால் அவர் உன்னை நம்பி பல கோடி முதலீடு செய்திருக்கிறார். அதை மறவாதே’’ என்றார்கள். ‘ரட்சகன்’ படப்பிடிப்பு 110 நாட்கள் நடந்தது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் பிரமாதமான அனுபவமாக இருக்கும். ஒரு ஹெலிகாப்டர்  கேட்டால் மூன்று கிடைக்கும். இந்த நிமிடம் வரை குஞ்சுமோன் சார்தான் என் காட்ஃபாதர். அவர் இப்போது தயாரிப்புத் துறையில்  ஆக்டிவ்வாக இல்லாதது எனக்கு மிகப் பெரிய வலியைக் கொடுத்துள்ளது. அந்த வலி எப்போதும் எனக்குள் இருக்கும்.

நம் வாழ்வில் எது நடந்தாலும் அது நன்மைக்கே. ஏன்னா, அன்று எனக்கு இருந்த அறிவைவிட இன்று அதிகம். ஆனால் இன்னிக்கு அந்த  அதிசயம் நடக்கவில்லை. இப்போது நான் படம் பண்ணாமல் போராட்டத்தில் இருப்பதற்கும் நான் காரணம் அல்ல. ‘ரட்சகன்’  கிடைத்ததற்கும் நான் காரணம் அல்ல. உலகத்தில் நடக்கும் அனைத்துக்கும் அவர்கள் காரணம் இல்லை.‘ரட்சகன்’ படம் ஆரம்பித்த போது  சினிமாவில் யாரெல்லாம் டாப்போ அவர்களை சர்வ சாதாரணமாக சந்திக்க முடிந்தது. பாலிவுட்ல ஃபராகான் என்ற நடன இயக்குநர். தீபிகா  படுகோனை அறிமுகப்படுத்தியவர். அவரை நான்தான் ‘ரட்சகன்’ படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வருகிறேன்.

பாலிவுட் ஸ்டார்ஸ் ஃபரா கான் காலில் விழும் நிலையில் அவர் ‘‘நீங்க தான் என்னை முதன் முதலாக தமிழில் அறிமுகம் செய்கிறீர்கள்’’  என்று என் காலில் வீழ்ந்து ஆசி வாங்குகிறார். இதுபோன்ற ஏராளமான அதிசயங்கள் அப்போது நடந்தது. உலக அழகி சுஷ்மிதா சென் என்  படத்தின் நாயகி என்பது நம்ப முடியாத விஷயமாக இருந்தது. அந்த அனுபவத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். ‘வண்ணத்திரை’யில்  பக்கங்கள்தான் போதாது.இப்போது அந்த பிரமிப்பும் பரவசமும் என்னிடம் இல்லை என்றாலும் எந்த கஷ்டமும் இல்லை. நமக்கு என்ன  கிடைக்க வேண்டுமோ அது கண்டிப்பாகக் கிடைக்கும். கிடைப்பதற்கும் காரணம் உண்டு; கிடைக்காமல் போவதற்கும் காரணம் உண்டு.  வாழ்க்கையில் நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், கடவுள் கொடுக்கும்போது என்ன கற்றுக்கொண்டான்; நாலு பேருக்கு எப்படி யூஸ்  ஆகிறான் என்கிற விஷயத்தில்தான் பக்குவமடையகிறான்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சின்ன வயதிலே பல ஆளுமைகளை உருவாக்கியவர். தமிழில் புலமை வாய்ந்தவர். அவர் பலம்  எப்படிப்பட்டது என்பதை எல்லோரும் அறிவோம். அவர் சினிமாவில் கதாசிரியராக இருந்த தொடக்க காலத்திலேயே கார் வாங்கியது அவர்  மட்டுமே என்று சொல்வார்கள்.அவருடைய அறிவாற்றல்தான் அவரை முதல்வர் நாற்காலியில் பலமுறை உட்கார வைத்தது.  அவரைப்போன்ற புத்திக்கூர்மை உள்ளவர்கள்தான்  சாதனையாளர்களாக உருவெடுக்கிறார்கள். விளையாட்டுத்தனம், அஜாக்கிரதையாக  உள்ளவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். மாட்டிக்கொண்ட அஜாக்கிரதை மனிதர்களில் நானும் ஒருவன். ஆன்மிகம் போன்ற விஷயங்கள்  என்னை செதுக்கி இருப்பதாக நம்புகிறேன். எனக்கு எப்போதும் வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கை ஜாஸ்தி. அந்த நம்பிக்கைதான் ‘ரட்சகன்’  படத்தைக் கொடுத்தது.

நல்லது நடக்கும் என்று இப்போது முன்பைவிட 1000 மடங்கு நம்பிக்கையுடன் இருக்கிறேன். வாழ்க்கையில் பொறுமை அவசியம். இப்போது  பக்குவம் அடைந்திருக்கிறேன் என்றால் அதை கற்றுக்கொடுத்தது ‘ரட்சகன்’ படம்தான்.இவ்வளவும் எனக்காக பேசுகிறேன் என்று நினைக்க  வேண்டாம். உங்களுக்காகவும்தான் இதைச் சொல்கிறேன். நண்பர்களே, உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையை தளர  விட வேண்டாம். ஏன்னா, நம்பிக்கைதான் வாழ்க்கை. வெறும் நம்பிக்கை மட்டும் வைத்திருப்பதும் முட்டாள்தனம். திறமையை  வளர்த்துக்கொண்டு நம்பிக்கை இல்லாமல் இருப்பதும் முட்டாள்தனம்.‘ரட்சகன்’ ரிலீஸ் டைமில் பாரதிராஜா சொன்னது ஞாபகத்துக்கு  வருகிறது. “நான் பாதை அமைத்துக் கொடுத்தேன். அந்தப் பாதைக்கு மணிரத்னம் அலங்காரம் பண்ணினார். ஷங்கர் கண்கவரும் விதத்தில்  டெக்கரேஷன் பண்ணினார். அந்தப் பாதையில் வண்டி ஓட்டியது நீதான்யா’’ என்றார்.
 

தொடர்ந்து ‘ரட்சகன்’ மாதிரியான படங்களை என்னால் பண்ண முடியவில்லை. அப்போது வைரமுத்து, பாரதிராஜா ஆகியோர் நம்பிக்கை  கொடுத்து ஏ.ஆர்.ரகுமானிடம் அழைத்துச் சென்றார்கள். அப்படி ரகுமான் சார் எனக்காகப் பண்ணிய படம்தான் ‘ஜோடி’. கதையே கேட்காமல்  இசையமைக்க சம்மதித்தார். அப்போது ரகுமான் சார் ‘‘காய்ந்துபோன புலி வேட்டைக்குத் தயார்’’ என்று ஒரே வார்த்தை சொன்னார். அந்த  வகையில் ரகுமான் சாரும் என் ரட்சகர்களில் ஒருவர்.‘ஸ்டார்’ அஜித் பண்ண வேண்டியது; ‘ஜோடி’ விஜய் பண்ணவேண்டியது. நடுவுல நான் நடிக்கணும் என்று பிடிவாதம் பிடித்ததால் குழப்பம்  வந்தது.

‘துள்ளல்’ நல்ல படம். ஆனால் தாமதத்தினால் சிக்கல் ஏற்பட்டது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை மனதில் வைத்து ‘புலி  பார்வை’ பண்ணினேன். உண்மையிலே தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய படம் அது. தமிழர்கள் பயப்படமாட்டார்கள் என்பதை  அழுத்தமாகச் சொல்லியிருப்பேன். ஆனால் முழுமையாகப் போய்ச் சேராத காரணத்தால் சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. இப்போது பிரசாந்த் நடிக்கும் ‘பைக்’ படத்தை இயக்குகிறேன். ஏ.ஆர்.ரகுமான் மியூசிக் பண்றார். பழைய ரட்சகனாக நான் திரும்பி வருவேன்  என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஏன்னா, என்னோட ரட்சகர்களின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு.

தொகுப்பு : சுரேஷ்ராஜா
(தொடரும்)