இருட்டு இல்லாத அறையில் முரட்டுக் குத்து!‘‘சினிமாவில் கஷ்டப்பட்டுத்தான் இயக்குநராகியிருக்கிறேன். யாரிடமும் உதவியாளராகப் பணிபுரியவில்லை. குறும்படங்கள் நிறையப் பண்ணியிருக்கிறேன். குறும்படங்கள் மூலம் எனக்குப் பரிச்சயமான பல நண்பர்கள் சினிமாவில் பின்னியெடுக்க ஆரம்பித்தார்கள். இனியும் காலம் கடத்தக்கூடாது என்று நினைத்து முழுக்க முழுக்க காமெடி கதையை ரெடி பண்ணினேன்” ரிலாக்ஸ்டாகப் பேசுகிறார் அழகுராஜ்.

புதுமுகம் ஆதவா, அவந்திகா நடிக்கும்  ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ படத்தின் அறிமுக இயக்குநர் இவர். டான்ஸர், குறும்பட இயக்குநர் என்று பல தளங்களில் பயணித்தவர், இப்போது இயக்குநராகக் களமிறங்கியுள்ளார்.‘‘சொந்த ஊர் சென்னைதான். எங்க குடும்பத்திலிருந்து நான்தான் முதல் ஆளாக சினிமாவுக்கு வந்துள்ளேன். எனக்கு சின்ன வயதிலிருந்து டான்ஸ் பிடிக்கும்.

இன்று பல சேனல்களில் டான்ஸ் ஷோ நடத்துகிறார்கள். அதற்கெல்லாம் முன்னோடி சன் டிவிதான். அது 2000ம் வருட துவக்கம். அப்போது சன் டி.வி. நடத்திய ‘தில்லானா தில்லானா’ டான்ஸ் ஷோவில் எனக்குதான் சாம்பியன் பட்டம் கிடைத்தது. 300க்கும் மேற்பட்ட டீம் கலந்து கொண்ட பிரம்மாண்டமான ஷோ அது. நான் சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தது என்னுடைய தனித்துவமான நடனம் மட்டுமில்ல, அதில் அட்டகாசமான கதையும் சொல்லியிருப்பேன். டான்ஸ் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதுதான் கனவு.

அந்த ஷோவைப் பார்த்த நண்பர்கள், உனக்கு ஸ்டோரி சொல்லும் திறமை இருக்கு; நீ டைரக்‌ஷன் ட்ரை பண்ணு என்று வழிகாட்டினார்கள். நிறைய தேடல்கள், முயற்சி இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சில இடத்தில் வாசல் கேட் திறக்காமலேயே திருப்பி அனுப்பினார்கள்.  நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் என்று சொல்லி நீங்கள் ப்ளோ-அப் புக்காக ஒதுக்கும் கிளாமர் பக்கங்களை வீணாக்க விரும்பவில்லை. சினிமாவில் மட்டுமில்ல, வாழ்க்கையில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது.

ஒரு கட்டத்தில் என்னை நானே செதுக்கிக் கொள்ள ஆரம்பித்தேன். கெளதம் மேனன், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களை  இன்ஸ்பிரேஷனாக வைத்து குறும்படங்களை இயக்க ஆரம்பித்தேன். பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கினேன். என்னுடைய டேலன்ட்டை அடையாளம் கண்டு கொண்ட சேனல் நிர்வாகம் குறும்படங்களுக்கான தகுதித் தேர்வு நிகழ்ச்சியை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார்கள்.

அந்தப் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள்தான் இப்போது முன்னணி இயக்குநர்களாக உள்ள பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ‘தெகிடி’ ரமேஷ், அருள். சின்னத்திரையில் இருந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும் என்று நினைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கினேன். அப்போதுதான் என்னுடைய நாயகன் ஆதவாவைச் சந்தித்தேன். அவர் மூலம் தயாரிப்பாளர் விகாஷ் ரவிச்சந்திரன் சார் அறிமுகம் கிடைத்தது’’ ரிலீஸ் பரபரப்பிலும் அமைதியாகப் பேசுகிறார் அழகுராஜ்.

“எப்படி வந்திருக்கு படம்?”

“நாங்கள் நினைத்ததைவிட சூப்பரா வந்திருக்கு. எனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியுள்ளேன் என்ற திருப்தி கிடைத்துள்ளது. ரசிகர்கள் இப்போது முன்பு மாதிரி இல்லை. அரைச்ச மாவை அரைத்தால் தியேட்டருக்கு வருவதில்லை. புதுசா கதை சொன்னால் மட்டுமே தியேட்டருக்கு வருகிறார்கள்.

இது டார்க் ஹியூமர் காமெடி கதை. ஹீரோவும் ஹீரோயினும் உருகி உருகிக் காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஹீரோயின் லவ் ப்ரேக் அப் சொல்லிவிடுகிறார். அடுத்த நாளே ஹீரோயினுக்கு கல்யாண ஏற்பாடு நடக்கிறது. ஹீரோயினை எப்படியாவது பழிவாங்க நினைக்கிறார் ஹீரோ. அந்த சமயத்தில் ஹீரோவின் ஃப்ரெண்ட், தனக்குத் தெரிந்த டானுக்கு ஒரு குவார்ட்டரும், பிரியாணியும் கொடுத்தால் நமக்கு உதவி செய்வார் என்ற தகவலைச் சொல்கிறார்.

ஹீரோவும் அதற்கு ஓ.கே.சொல்ல, ஹீரோயினைத் தேடி சென்னையிலிருந்து கோயமுத்தூர் செல்கிறது ஹீரோ டீம். அவர்களால் ஹீரோயினின் திருமணத்தைத் தடுக்க முடிந்ததா, ஹீரோவின் ப்ளான் சக்ஸஸ் ஆனதா என்பதை சீன் பை சீன் நகைச்சுவையாகச் சொல்லியுள்ளேன்.”

“அது சரி... உங்க படத்துக்கு ‘ஹரஹர மஹாதேவகி’ மாதிரின்னு ஒரு டாக் இருக்கே?”

“இது அடல்ட் காமெடி படம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனா, அவங்க அளவுக்கு கிளாமர் காட்டவில்லை. என்னுடைய படத்தை குடும்பத்தோடும் வந்து பார்க்கலாம். இந்தப் படத்தில் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தின் சாயல் தெரியும். ஆனால் இது வேற. வேணும்னா இருட்டு இல்லாத அறையில் முரட்டுக் குத்து மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்.”

“காமெடி கதையில் 8 பேக் ஹீரோ எப்படி?”

“இது காமெடிப் படமாக இருந்தாலும் வாட்ட சாட்டமா இருக்கிற மாதிரி ஒரு ஹீரோ தேவைப்பட்டார். நண்பர் ஒருவர் மூலமா ஆதவா அறிமுகமானார். கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் அவரையே ஹீரோவாக ஃபிக்ஸ் பண்ணிட்டேன். ஹீரோ பார்க்க ஆஜானுபாகுவா இருந்தாலும், ஹீரோயினைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சியில் நெர்வஸானது எங்களுக்குத்தான் தெரியும். ஹீரோயின் கூல் பண்ணபிறகுதான் சமர்த்தா பண்ணிக் கொடுத்தார்.”

“அவந்திகாவை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே?”

“மலையாளப் படங்களில் பார்த்திருப்பீர்கள். கேரளாவில் பிறந்து துபாயில் செட்டிலான குடும்பம். அவரிடம் நான் வியப்பாகப் பார்த்தது அவருடைய டெடிகேஷன். தமிழ் அவ்வளவாக வராது. ஆனால் டயலாக் ஷீட்டை முன்பே வாங்கி எந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக மனதில் உள்வாங்கி நடித்தார். டேக் மேல் டேக் வாங்கி டென்ஷனாக்காமல் சிங்கிள் டேக்கில் ஓ.கே. பண்ணினார். இந்தப் படத்தை திட்டமிட்டபடி முடிக்க ஹீரோயினும் ஒரு காரணம்.”

“கானா உலகநாதனுக்கு என்ன வேடம்?”

“இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின் தவிர மற்ற அனைவருக்கும் சிரிப்பு வில்லன் ரோல் என்று சொல்லலாம். சண்டை இயக்குநர் ஆக்‌ஷன் பிரகாஷ், சிங்கப்பூர் தீபன், நாஞ்சில், வெங்கட்ராமன், ஆனந்தன்னு எல்லாரும் சிரிப்பு வில்லன்களா வர்றாங்க. ஹீரோ ஃப்ரெண்டா பிரிட்டோ மனோகர் வர்றார். எல்லாரும் நல்லா பண்ணியிருக்கிறார்கள்.”

“டெக்னீஷியன்ஸ் பற்றி?”

“குறும்படங்களில் வேலை செய்தவர்களிடம் நான் படம் இயக்கினால் வாய்ப்பு தருவதாகச் சொன்னேன். அதன்படி அனைவருக்கும் இந்தப் படத்தில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன். இசை லியாண்டர் லீ மார்ட்டின். பாடல்களைக் கேட்கும்போது முதல் படம் மாதிரியே இருக்காது. இப்போ ட்ரெண்ட்ல இருக்கிற இசையமைப்பாளர்கள் வரிசையில் இடம் பிடிப்பார்.

கேமராமேன் சந்தான கிருஷ்ணன் ஒர்க் பேசப்படும். தயாரிப்பாளர் விகாஷ் ரவிச்சந்திரன், இணைத் தயாரிப்பாளர் செந்தில் பாலசுப்ரமணியம், தயாரிப்பு எக்சிகியூட்டிவ் ஆத்தூர் ஆறுமுகம் என்று அனைவரும் பிரமாதமான ஒத்துழைப்பு கொடுத்ததால்தான் மனநிறைவாக இந்தப் படத்தை முடிக்க முடிந்தது.

இன்னொரு பக்கம் சென்சார் ஏற்படுத்திய காயமும் இருக்கிறது. அந்த மனக்குமுறலையும் சொல்லிவிடுகிறேன். இந்தப் படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்திருப்பது வருத்தமளிக்கிறது. ஏன்னா, அவ்வளவு ஒர்த்தான க்ளாமர் படத்தில் இல்லை. சிங்கிள் பீஸ், டூ பிஸ்  நீச்சல் உடை இல்லை. படத்துல லிப் லாக் சீன், ஆபாசக் காட்சிகள் என்று எதையும் காட்டவில்லை.

ஆனால் உங்க படத்துல சரக்கு அடிக்கிற மாதிரி நிறைய காட்சிகள் இருக்கு என்று சொல்லி ‘ஏ’ கொடுத்தார்கள். கதையில் குவார்ட்டருக்காகத்தான் வில்லன் ஹீரோவுக்கு உதவி செய்ய முன்வருவார். அதைக் காண்பித்தால்தான் கதையே நகரும். ஆனால் சென்சார் அதைக் காரணம் காட்டி ‘ஏ’ வழங்கியிருப்பது அடிமடியிலேயே கை வைத்த மாதிரி இருக்கு.”

- சுரேஷ்ராஜா