ஜெயம் ரவி டைரக்டர் ஆவார்! ஜோசியம் சொல்கிறார் சாயிஷா



‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜுங்கா’, ‘கஜினிகாந்த்’ என்று அடுத்தடுத்த வார ரிலீஸ்களில் அதகளம் செய்துகோண்டிருக்கிறார் சாயிஷா. முன்பு ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை ஹீரோ என்பார்கள். ஹீரோயினில் அந்தப் பெயரை சாயிஷா எடுத்து விடுவார் போலிருக்கிறது.‘‘தமிழ்ல நான் அறிமுகமான ‘வனமகன்’ டைம்லேயே தமிழ் லாங்வேஜ் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

ஸ்பாட்டுல பிராம்ப்டிங்ல தமிழ் பேசி நடிக்கறது சிரமமாக இருந்ததால, தங்கிலீஷ்ல எழுதி வச்சு, பேச ஆரம்பிச்சேன். அப்புறம் யூனிட்ல எல்லோரும் பேசுறதை கவனிச்சிட்டே இருப்பேன். இப்ப தமிழ் ஓரளவு பேச, புரிய ஆரம்பிச்சிடுச்சு.

வாக்கியமாக அமைச்சு, பேசக் கத்துக்கிட்டிருக்கேன். உங்ககிட்ட ஒரு வேண்டுகோள்.... இனிமே யாரும் என்னை முழுப்பெயர் சொல்லி கூப்பிட வேண்டாம். சாயிஷானு சொன்னாலே போதும். ஏன்னா, சாயிஷானா, ‘Heart’s most beautiful desire’னு அர்த்தம்’’ சந்தோஷம் பொங்க பேச ஆரம்பித்தார் சாயிஷா.

“தமிழில் அதிகமா கவனம் செலுத்துற மாதிரி இருக்கே?”

“என்னோட சின்ன வயசில இருந்தே, டான்ஸ், ஆக்ட்டிங்னா ஆர்வம் ஜாஸ்தி. முதன்முதலில் பாலிவுட்ல அஜய்தேவ்கனோட ‘ஷிவாய்’ல தான் கமிட் ஆனேன். ஆனா, அந்தப் படத்தோட ஷூட்டிங் தொடங்கவே ஒரு வருஷம்கிட்ட தாமதமாச்சு. அப்பதான் தெலுங்கில் ‘அகில் த பவர் ஆஃப் ஜூவா’ படத்துல நடிக்கக் கேட்டு வாய்ப்பு  வந்தது.

அதில் நடிச்சு முடிச்சதும், ‘ஷிவாய்’ ஷூட்டும் ஆரம்பிச்சது. அந்தப் படம் முடிச்சதும், தமிழ்ல இருந்து ‘வனமகன்’ கிடைச்சது. இயக்குநர் விஜய் அண்ணன், மும்பை வந்து கதையைச் சொன்னாங்க. ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டேன்.

அதுக்கப்புறம் அடுத்தடுத்து இப்போ மூணு படம் ரிலீஸ் ஆகியிருக்கு. அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்துல சூர்யா சார் நடிக்கும் படத்துல கமிட் ஆகியிருக்கேன். பாலிவுட், டோலிவுட்ல ஒர்க் பண்ணியிருந்தாலும், கோலிவுட் எனக்கு ரொம்ப கம்ஃபர்டபிளாக இருக்கு. அதனாலதான் தமிழ்ல கவனம் செலுத்திட்டிருக்கேன்.”

“உங்க கூட நடிச்ச, நடிக்கிற ஹீரோக்கள்கிட்ட பிடிச்ச விஷயங்கள் என்னென்ன?”

“முதல் பட ஹீரோ ஜெயம் ரவி சாருக்கு ரொம்ப பெரிய மனசு. அவர் படங்கள்ல ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தாலும்கூட அவர்  ஃபீல் பண்ணமாட்டார்.  அவரோட ரோல் மீது ரொம்பவும் உறுதியும், நம்பிக்கையும் வச்சிருப்பார். ‘வனமகன்’ மாதிரி எனக்கு இன்னொரு நல்ல வாய்ப்பு அமையுமானு தெரியல. கார்த்தி சார் பிரில்லியன்ட் ஆக்டர்.

ஸ்கிரீன்ல நம்ம முகம் சிரிச்ச முகமாகத் தெரிய வேண்டியதன் முக்கியத்துவத்தை புரியவச்சார். அவரோட ஸ்கிரிப்ட் நாலேஜ் பார்த்து பிரமிச்சிருக்கேன். கண்டிப்பா ஒருநாள் அவர் பெரிய இயக்குநராகப் பெயரெடுப்பார்.

அடுத்தது ஆர்யா. ஸ்பாட்டுல எப்பவும் அவர் எளிமையா, இயல்பாக இருப்பார். பிரமாதமான நகைச்சுவை உணர்வு உள்ளவர். அவரைச் சுத்தி இருக்கிறவங்களை எப்பவும் கலகலப்பாக வச்சிருப்பார். அதே டைம்ல அவர்கிட்ட சீரியஸ்னஸும் இருக்கும். சூர்யா சாரோட எளிமையும், கடின உழைப்பும் உங்க எல்லோருக்குமே தெரிஞ்ச விஷயம்தான்.”

“சாயிஷாவோட பொழுதுபோக்கு?”

‘‘ஐ லவ் டான்ஸ். அப்புறம், ஸ்விம்மிங் இன்னும் பிடிக்கும். வீட்ல தினமும் ஒருமணிநேரம் ஸ்விம்மிங்ல ப்ராக்டீஸ் பண்றேன். பயணங்கள்ல புக்ஸ் படிக்கப் பிடிக்கும்.  சாக்லேட் கேக்ஸ் பிடிக்கும். இப்ப, சென்னையும் ரொம்பப் பிடிச்சிருக்கு. கூடவே ரைஸ் அண்ட் ஸ்பைஸி ஃபிஷ் கறி இருந்தா, லைஃப் இஸ் பியூட்டிஃபுல்.’’

- மை.பாரதிராஜா

படம் : சுரேஷ் சுகு